3622.

     செல்ல மாட்டேன் பிறரிடத்தே
          சிறிதுந் தரியேன் தீமொழிகள்
     சொல்ல மாட்டேன் இனிக்கணமுந்
          துயர மாட்டேன் சோம்பன்மிடி
     புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம்
          பொருந்த மாட்டேன் பிறஉயிரைக்
     கொல்ல மாட்டேன் உனைஅல்லால்
          குறிக்க மாட்டேன் கனவிலுமே.

உரை:

     ஒன்று வேண்டிப் பிறரிடம் போக மாட்டேன்; அத்தகைய நிலைமை யுண்டாயின் சிறிது போதும் தாங்க மாட்டேன்; தீய சொற்களை இனிமேற் பேச மாட்டேன்; இனி ஒருகணப் பொழுதும் துயரத்தைப் பொறுக்க மாட்டேன்; சோம்பலும் வறுமையுமாகிய இடர்கள் உண்டாயின் அவற்றைப் பொருந்த மாட்டேன்; பொய் யொழுக்கத்தை மேற்கொள்ளேன்; பிற உயிர்களைக் கொல்ல மாட்டேன்; உன்னை யொழியப் பிற தெய்வங்களைக் கனாவிலும் கருத மாட்டேன் காண். எ.று.

     ஒருவரிடத்தே சென்று ஒன்று வேண்டி யிரப்பது நாணமின்மையும் சிறுமையும் உண்டு பண்ணுதலால், “செல்ல மாட்டேன் பிறரிடத்தே” என்றும், அஃதொரு இழிந்த நிலையாதலால், “சிறிதும் தரியேன்” என்றும் தெரிவிக்கின்றார். தீய சொற்கள் தீமை தருவதால் அவற்றைச் சொல்ல மாட்டேன் என்பார், “தீ மொழிகள் சொல்ல மாட்டேன்” என்று சொல்லுகின்றார். துயரங்களைத் தாங்கும் மனவன்மையும் மெய்வலியும் குன்றினமை புலப்பட, “இனிக் கணமும் துயர மாட்டேன்” எனவும், சோம்பலும் மிடியும் துயரத்துக் கேதுவாதலின், “சோம்பல் மிடி புல்ல மாட்டேன்” எனவும் உரைக்கின்றார். மிடி - வறுமை. துயர்தல் - துயரப் படுதல். பொய் யொழுக்கம் தீராத் துன்பத்தைப் பயப்பது பற்றி, “பொய் யொழுக்கம் பொருந்த மாட்டேன்” என்று புகல்கின்றார். “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்” (குறள்) எனச் சான்றோர் கூறுதல் காண்க. உயிர்க் கொலை பாவங்கள் அத்தனையும் ஒருங்கு தருவதாதலால், “பிற வுயிரைக் கொல்ல மாட்டேன்” எனப் பேசுகின்றார். “அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை யெல்லாம் தரும்” (குறள்) என்று பெரியோர் கூறுவர். “உனையல்லால்” என்றதனால், பிற தெய்வங்கள் வருவிக்கப் பட்டன; பிற தெய்வங்களும் மக்களைப் போற் செத்துப் பிறப்பனவாதலால் அவற்றைப் பொருளாகக் கொள்வதிலன் என்றற்கு, “உனை யல்லால் குறிக்க மாட்டேன் கனவிலுமே” என வுரைக்கின்றார். குறித்தல் - கருதுதல். கனவுக் காட்சியும் மனத்தின் செயலாதலால், “கனவிலும்” என்று கூறுகின்றார்.

     இதனால், பிறப்பாற் சென்று இரத்தல் தீ மொழி பேசல் முதலிய குற்றங்களைச் செய்ய மாட்டேன் என வலியுறுத்தவாறாம்.

     (2)