3623.

     வெறுக்க மாட்டேன் நின்றனையே
          விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும்
     பொறுக்க மாட்டேன் உலகவர்போல்
          பொய்யிற் கிடந்து புரண்டினிநான்
     சிறுக்க மாட்டேன் அரசேநின்
          திருத்தாள் ஆணை நின்ஆணை
     மறுக்க மாட்டேன் வழங்குவன
          எல்லாம் வழங்கி வாழியவே.

உரை:

     அருளரசே, நின்னையே விரும்பிப் பற்றிக் கொண்டேனாதலால் நீ யாது செய்யினும் வெறுக்க மாட்டேன்; வெறுப்பால் உளதாகும் துன்பத்தைச் சிறிதும் பொறுக்கமாட்டேன்; உலகியலில் உள்ளவர்களைப் போலப் பொய் முதலிய குற்றங்களில் வீழ்ந்து வருந்திச் சிறுமையுற மாட்டேன்; இது நின் மேல் ஆணை; நின் திருவடி மேல் ஆணை; இனி நீ தருவன யாவையாயினும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வேனாதலால் தருவன அனைத்தும் எனக்குத் தந்தருளுக. எ.று.

     விருப்பு வெறுப்புக்கள் மாறி மாறித் தோன்றுவனவாதலால் விருப்பால் உன்னைப் பற்றிக் கொண்ட யான் வெறுப்பால் விட்டொழிய மாட்டேன் என்பார், “வெறுக்க மாட்டேன்” நின்றனையே விரும்பிப் பிடித்தேன்” என விளம்புகின்றார். விருப்புணர்வு இன்பம் தருவது போல வெறுப்புத் துன்பம் தருதல் பற்றி, “துயர் சிறிதும் பொறுக்க மாட்டேன்” என்று புகல்கின்றார். உலகில் வாழ்வாங்கு வாழ்ந்து பெருமையிற் பிறங்க வேண்டிய மக்கள் பொய்ம் மொழிதல் முதலிய குற்றங்களைச் செய்து சிறுமையுற்று வருந்துகின்றனர் என்பாராய், “உலகவர் போற் பொய்யிற் கிடந்து புரண்டு இனி நான் சிறுக்க மாட்டேன்” எனச் செப்புகின்றார். சிறுத்தல் - சிறுமையுறல். மாட்டாமைகளை எடுத்தோதி ஆணை மொழிந்து வற்புறுத்தியவர், எனக்கு வருவன பலவும் நினதருளால் எய்துவனவாதலால், அவை யனைத்தையும் ஏற்று மகிழ்வேன்; அவையனைத்தையும் தந்தருள்க என்பாராய், “மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே” என வுரைக்கின்றார். வழங்குதல் - தருதல்.

     இதனால், விருப்பு வெறுப்புக்களால் எய்துவன கூறி அருளால் எய்துவனவற்றை ஏற்கும் திறம் உரைத்தவாறாம்.

     (3)