3624.

     கருணைப் பெருக்கே ஆனந்தக்
          கனியே என்னுட் கலந்தொளிரும்
     தருணச் சுடரே எனைஈன்ற
          தாயே என்னைத் தந்தோனே
     வருணப் படிக மணிமலையே
          மன்றில் நடஞ்செய் வாழ்வேநற்
     பொருண்மெய்ப் பதியே இனித்துயரம்
          பொறுக்க மாட்டேன் கண்டாயே.

உரை:

     கருணை வெள்ளமே, இன்பக் கனியே, என்னுள் உயிர்க்குயிராய்க் கலந்து விளங்குகின்ற காலை இளஞ் சூரியனே, என்னைப் பெற்றெடுத்த தாயே, என்னை இவ்வுலகில் பிறப்பித்த தந்தையே, நிறம் மிக்க படிக மணிகளை யுடைய மலை போன்றவனே, தில்லை யம்பலத்தில் திருக்கூத்தாடுகின்ற என் வாழ்முதலே, வீடு பேற்றுக்குரிய ஞானப் பொருள் நிறைந்த உண்மைத் தலைவனே, இனிமேல் இவ்வுலகியல் நல்கும் துன்பங்களைப் பொறுக்க மாட்டேன் காண். எ.று.

     கருணையே உருவானவனாதலால் சிவபெருமானை, “கருணைப் பெருக்கே” என்று மொழிகின்றார். இன்பமே நல்கும் தெய்வக் கனி போல் விளங்குதலால், “ஆனந்தக் கனியே” என அறிவிக்கின்றார். உடல் எங்கும் உயிர் முழுதும் கலந்து உணர்வு ஒளி செய்தலால் இறைவனை, “என்னுள் கலந்து ஒளிரும் தருணச் சுடரே” என்று சாற்றுகின்றார். தலையளி செய்தலால், “எனை ஈன்ற தாயே” என்றும், உடல், கருவி, கரணங்களைத் தருவதால், “என்னைத் தந்தோனே” என்றும் கூறுகின்றார். தருணச் சுடர் - காலை இளஞ் சூரியன். வருணப் படிக மணி மாலை, அழகிய படிகம் போன்ற திருநீறும், மாணிக்க மணி போன்ற திருநிறமும் உடைய மலை போல்வதால் சிவத் திருமேனியை, “வருணப் படிக மணி மலை” எனப் பாராட்டுகின்றார். தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் ஆற்றால் உயிர்கட்கு உலகில் வாழ்வளித்தலால், “மன்றில் நடஞ்செய் வாழ்வே” எனப் பரவுகின்றார். நற்பொருள், எல்லாப் பொருளிலும் நன்பொருளாக விளங்குவது வீடு பேற்றுக்குரிய சிவஞானப் பொருளாதலின், “நற் பொருள்” என்றும், என்றும் உள்ள பரம்பொருள் என்றற்கு, “மெய்ப் பதி” என்றும் விளம்புகிறார். துயரம் - உலகியல் வாழ்க்கைத் துன்பம்.

     இதனால், ஞானப் பொருள் வழங்கித் துயரம் எய்தாவாறு காப்பாற்ற வேண்டியவாறாம்.

     (4)