3625. திண்ணம் பழுத்த சிந்தையிலே
தித்தித் துலவாச் சுயஞ்சோதி
வண்ணம் பழுத்த தனிப்பழமே
மன்றில் விளங்கு மணிச்சுடரே
தண்ணம் பழுத்த மதிஅமுதே
தருவாய் இதுவே தருணம்என்றன்
எண்ணம் பழுத்த தினிச்சிறியேன்
இறையுந் தரியேன் தரியேனே.
உரை: திட்பம் பொருந்திய மனத்தின்கண் இனிமை செய்து கெடாது விளங்கும் சுயஞ் சோதியாகிய சிவபெருமானே, அழகுறப் பழுத்த ஒப்பற்ற பழம் போல்பவனே, தில்லையம்பலத்தில் விளங்குகின்ற மாணிக்க மணியின் சுடரொளியை யுடையவனே, குளிர்ந்த சந்திரனிடத்தே நிலவுகின்ற அமுதத்தைத் தந்தருள்வாய்; அதற்கு இதுவே சமயமாகும்; என்னுடைய எண்ணமும் கைகூடி விட்டது; இனிமேல் சிறியவனாகிய யான் இவ்வுலகியல் துன்பங்களைத் தாங்க மாட்டேன்; எ.று.
திண்ணம் பழுத்த சிந்தை - எத்தகைய துன்பங்கட்கும் சலிப்புறாத சிந்தை. சிந்திப்பார் சிந்தையின்கண் தேனூறி நிற்கின்ற பெருமானாதலால், “திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித்து” என்றும், இயல்பாகவே ஞானவொளி பெற்று என்றும் இடையறாது விளங்குதல் பற்றி, “உலவாச் சுயஞ்சோதி” என்றும் இயம்புகின்றார். வண்ணம் - நன்கு பழுத்த பழத்தின்கண் உளதாகும் நிறமும் ஒளியுமாம். மன்று - தில்லையம்பலம். தில்லையம்பலத்தில் செம்மேனி அம்மானாய் ஞான வொளி கொண்டு திகழ்தலால், “மன்றில் விளங்கு மணிச் சுடரே” எனப் போற்றுகின்றார். யோகக் காட்சி யுடையாருக்குச் சிரசின் மேல் துவாத சாந்தத்தில் சந்திரனாய்த் தோன்றி ஞான வமுது தருகின்றான் என்பது பற்றி, “தண்ணம் பழுத்த மதி அமுதே தருவாய்” என்றும், அதனைப் பெறுதற்குரிய பக்குவத்தைத் தான் எய்தினமை புலப்பட, “இதுவே தருணம்” என்றும், இதனால் தாம் செய்த தவம் பயன் பட்டமை விளங்குதற்கு, “என்றன் எண்ணம் பழுத்தது” என்றும் இசைக்கின்றார். தமது உடலும் உள்ளமும் ஞானப் பேற்றால் மென்மை யுற்றமையின் உலகியல் துன்பங்களைத் தாங்கும் சிறுமையைப் பொறாதாயிற்று என்பாராய், “இனிச் சிறியேன் இறையும் தரியேன் தரியேன்” என உரைக்கின்றார்.
இதனால் ஞானாமிர்தப் பேறு கூறியவாறாம். (5)
|