3626.

     நாட்டுக் கிசைந்த மணிமன்றில்
          ஞான வடிவாய் நடஞ்செயருள்
     ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை
          அப்பா என்றன் அரசேஎன்
     பாட்டுக் கிசைந்த பதியேஓர்
          பரமா னந்தப் பழமேமேல்
     வீட்டுக் கிசைந்த விளக்கேஎன்
          விவேகம் விளங்க விளக்குகவே.

உரை:

     இந்த நிலவுலகிற்குப் பொருத்தமாக அமைந்த மணியிழைத்த பொற்சபையின்கண் ஞானத் திருமேனி கொண்டு செய்தருளும் அருட் கூத்துக்குப் பொருத்தமான பெரிய கருணை நிறைந்த அப்பனே, எனக்கு அருளும் அரசனே, யான் பாடுகின்ற பாட்டுக்களை ஏற்று அருளிய தலைவனே, ஒப்பற்ற மேலான இன்பச் சுவையைத் தருகின்ற பழமாக விளங்குபவனே, மேலான வீடு பேறு எய்துதற்குப் பொருந்திய ஞான விளக்காய் உள்ளவனே, எனது அறிவு விளக்கமுற அருளுவாயாக. எ.று.

     நிலவுலகத்தின் மையமாய் விளங்குவது ஞான அம்பலமாதலின், “நாட்டுக்கிசைந்த மணி மன்று” என்றும், அதன்கண் ஞானமூர்த்தியாய் நின்று திருநடனம் செய்வதால், “ஞான வடிவாய் நடஞ்செய் அருள் ஆட்டுக்கிசைந்த பெருங்கருணை அப்பா” என்றும் துதிக்கின்றார். தாம் பாடுகின்ற பாட்டுக்கள் எல்லாம் சிவமே பொருளாக அமைவது பற்றி, “என் பாட்டுக் கிசைந்த பதியே” எனவும், அதனை நினைக்குந் தோறும் நெஞ்சம் இன்புறுதலால், “ஓர் பரமானந்தப் பழமே” எனவும், அந்நினைவால் வீடு பேற்றுக்குரிய ஞான விளக்கம் உண்டாதல் கண்டு, “மேல் வீட்டுக் கிசைந்த விளக்கே” எனவும் விளம்புகின்றார். ஞான விளக்கம் இன்பம் செய்தலின், அதனை மிகவும் வேண்டி, “என் விவேகம் விளங்க விளக்குக” என வுரைக்கின்றார்.

     இதனால், வீடு பேற்றுக்குரிய விவேகம் விளங்க அருள வேண்டுமென வேண்டியவாறாம்.

     (6)