3627.

     வேதந் தலைமேற் கொளவிரும்பி
          வேண்டிப் பரவு நினதுமலர்ப்
     பாதந் தலைமேற் சூட்டிஎனைப்
          பணிசெய் திடவும் பணித்தனைநான்
     சாதந் தலைமேல் எடுத்தொருவர்
          தம்பின் செலவும் தரமில்லேன்
     ஏதந் தலைமேற் சுமந்தேனுக்
          கிச்சீர் கிடைத்த தெவ்வாறே.

உரை:

     வேதங்கள் தம் உச்சியில் கொள்ள விழைந்து பன்முறையும் வேண்டிப் பரவுகின்ற நின்னுடைய தாமரை போன்ற திருவடியை என்னுடைய தலைமேல் அணிந்து என்னை அதற்குரிய பணிகளைச் செய்திட ஆணை யிட்டுள்ளாய்; உண்ணும் சோற்று மூட்டையைத் தலைமேல் எடுத்துக் கொண்டு ஒருவன் பின் செல்லவும் வகையில்லாதவன் போலத் துன்பத்தை தலைமேல் சுமந்து கொண்டிருக்கும் எனக்கு இச்சிறப்பு கிடைத்தது எவ்வகையோ அறியேன். எறு.

     வேதம் என்றது இங்கே வேதங்களில் வல்ல சான்றோர் மேற்று. அப்பெருமக்கள் இறைவன் திருவடியைத் தம் முடிமேல் சூடிக் கொள்ளுதல் வேண்டி வேதங்களை ஓதிப் பரவுகின்றாராதலால் சிவனுடைய திருவடியை, “வேதம் தலைமேற் கொள விரும்பி வேண்டிப் பரவு நினது மலர்ப்பாதம்” என்று கூறுகின்றார். “வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” (திருவாச) என மாணிக்கவாசகப் பெருமான் உரைப்பது காண்க. சிவபெருமான் மெய்த்தொண்டர்களைத் தாமே வலிய வந்து தமது திருவடியை அவர்கள் தலைமேல் வைத்துச் சிறப்பிப்பது வரலாறு அறிந்த உண்மையாதலின், அச்சிறப்புத் தமக்கும் எய்தினமை புலப்பட, “மலர்ப் பாதம் தலைமேற் சூட்டி எனைப் பணி செய்திடவும் பணித்தனை” என்று கூறுகின்றார். தன் பின்னே தனக்கு வேண்டும் உணவை ஒருவர் எடுத்துத் தம்மைத் தொடர்ந்து வரவும், அதனை உண்ணும் திறமின்றிப் பசி நோயால் வருந்துபவன் போல நினது திருவருள் என் பக்கம் இருக்கவும் துன்பமே மேற்கொண்டு ஒழுகினேன் எனத் தமது இயல்பு கூறுவாராய், “சாதம் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன்” எனவும், “ஏதம் தலைமேற் சுமந்தேன்” எனவும் எடுத்துரைக்கின்றார். சாதம் - உண்ணும் சோறு. தரம் - திறமை; தகுதியுமாம். ஏதம் - துன்பம். சீர் - திருவருள் ஞானம்; திருவடிப் பேறுமாம்.

     இதனால், மலர்ப்பாதம் தலைமேல் சூட்டிப் பணி செய்திடும் பேறு தமக்குக் கிடைத்தது எண்ணி வியந்தவாறாம்.

     (7)