3628.

     பொய்விட் டகலாப் புலைக்கொடியேன்
          பொருட்டா இரவில் போந்தொருநின்
     கைவிட் டகலாப் பெரும்பொருள்என்
          கையிற் கொடுத்தே களிப்பித்தாய்
     மைவிட் டகலா விழிஇன்ப
          வல்லி மகிழும் மணவாளா
     மெய்விட் டகலா மனத்தவர்க்கு
          வியப்பாம் உனது மெய்யருளே.

உரை:

     மை எழுதுதல் நீங்காத கண்களையுடைய இன்பக் கொடிபோன்ற உமாதேவி இன்புறும் மணவாளனே, பொய் யொழுக்கத்தைக் கைவிடாத புலைத் தொழிலால் கொடியவனாகிய என் பொருட்டு இரவுப் பொழுதில் எழுந்தருளி நின்னுடைய கையினின்றும் நீங்காத பெரிய பொருள் ஒன்றை என் கையிற் கொடுத்து மகிழ்வித்தாய்; மெய்ம்மை குன்றாத மனமுடைய சான்றோர்க்கு உனது அருட் செய்கை விருப்புத் தருவதாம். எ.று.

     “மை யிலங்கு நற்கன்னி பங்கனே” (சதகம்) எனச் சான்றோர் குறித்தலால் உமாதேவியை, “மைவிட்டு அகலா விழி இன்பவல்லி” என்று பாராட்டுகின்றார். மணவாளன் - கணவன். பொய் ஒழுக்கமும் புலைத்தன்மையும் ஒருவருனைக் கொடியவன் ஆக்குதலால், “பொய்விட்டகலாப் புலைக் கொடியேன்” எனத் தம்மையே இகழ்ந்து பேசுகின்றார். நின் கைவிட்டகலாப் பெரும் பெருள் என்பது இன்னதென விளங்கவில்லை. அஃது எப்பொழுதும் இறைவன் கையில் இருப்பது என்றும், அது பெரியதொரு பொருள் என்றும் குறிக்கப்படுகின்றது. இன்னது - இத்தன்மைத்து என வள்ளற் பெருமானால் விளக்கப் படாமை நோக்கத் தக்கது. பெரிய ஞானிகட்கும் எய்தாதது அப்பொருள் என்றற்கு, “மெய் விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே” என்று உரைக்கின்றார்.

     இதனால், வள்ளற் பெருமானுக்கு இறைவன் பெரும் பொருள் கொடுத்து மகிழ்வித்த செய்தி தெரிவித்தவாறாம்.

     (8)