3629.

     சாமத் திரவில் எழுந்தருளித்
          தமியேன் தூக்கந் தடுத்துமயல்
     காமக் கடலைக் கடத்திஅருட்
          கருணை அமுதங் களித்தளித்தாய்
     நாமத் தடிகொண் டடிபெயர்க்கும்
          நடையார் தமக்கும் கடையானேன்
     ஏமத் தருட்பே றடைந்தேன்நான்
          என்ன தவஞ்செய் திருந்தேனே.

உரை:

     அச்சம் தரும் மரத்தடி ஒன்றைக் கையிற் கொண்டு அடிமேல் அடி வைத்து நடக்கும் கொடியவர்களுக்கும் கடையவனாகிய நான் உறங்கும் போது, இரவுப் பொழுதின் இடைச் சாமத்தில் வந்தருளித் தனித்து உறங்கும் என்னை எழுப்பி மயக்கம் தரும் காம நினைவுகளைப் போக்கி நின் திருவருளாகிய கருணை அமுதத்தை அப்பொழுதே எனக்கு அளித்து மகிழ்வித்தாய்; நலம் பயக்கும் நினது திருவருட் பேற்றினை அடைந்தேனாதலால், நான் என்ன மாதவம் செய்தேனாவேன். எ.று.

     இரவுப் பொழுதில் வழிச் செல்வோரைத் தடிகொண்டு அடித்து அவர் கைப்பொருளைக் கவர்ந்து செல்லும் கள்வரைக் குறித்தற்கு, “நாமத் தடிகொண்டடி பெயர்க்கும் நடையார்” என்றும், அவர்களினும் கொடுமைத் தன்மையால் கீழ்மைப் பட்டவன் எனத் தம்மைச் சுட்டுதற்கு, “கடையானேன்” என்றும் கூறுகின்றார். நள்ளிரவுப் பொழுதினைச் “சாமத் திரவு” என்றும், அப்பொழுது போந்து தம்மைத் தூக்கத்தினின்றும் எழுப்பி அருளமுதம் வழங்கிய திறத்தினை, “சாமத்திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கம் தடுத்து அருட் கருணை அமுதம் களித்து அளித்தாய்” என அறிவிக்கின்றார். இரவுப் பொழுதில் தோன்றி மயக்குவது காமமாதலின் அக்காம நினைவு வாராதவாறு தடுத்தாண்டமை புலப்பட, “மயல் காமக் கடலைக் கடத்தி” என்று கூறுகின்றார். “கருணை அமுது” என்றது சிவஞானம் போலும். ஞானப் பேற்றை “ஏமத் தருட் பேறு” என இயம்புகின்றார். ஏலம் - பாதுகாப்பு. பிறவித் துன்பத்திற்கு இலக்காகாதவாறு காத்தலால் சிவஞானம் ஏமத் தருட் பேறு எனப்படுகிறது. மிக்க மாதவம் செய்தார்க் கன்றி எய்தலாகாத அதன் அருமை தோன்ற, “என்ன தவம் செய்திருந்தேனே” என இசைக்கின்றார்.

     இதனால், சிவஞானப் பேறு எய்திய திறம் கூறியவாறாம்.

     (9)