3630. பாதி இரவில் எழுந்தருளிப்
பாவி யேனை எழுப்பிஅருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே
சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப
நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போல்இவ்
வுலகம் பெறுதல் வேண்டுவனே.
உரை: நீதி செய்யும் திருக்கூத்தைச் செய்து பேரின்பம் நல்கும் செல்வமாகிய சிவபெருமானே, ஒருநாள் நள்ளிரவில் என்பால் வந்து உறங்கிக் கொண்டிருந்த பாவியாகிய என்னை எழுப்பித் திருவருள் சோதியினை நல்கி என் மனத்துட் புகுந்து கலந்து விளக்கமுறுகின்றாய்; யான் பெற்ற இந்தப் பெரிய பேற்றை முற்றவும் சொல்ல முடியாதாயினும் இதனை என் போல் இவ்வுலகமும் பெறுக வென வேண்டுகின்றேன். எ.று.
நீதியே உருவானவனாதலால் சிவனது திருக்கூத்தை, “நீதி நடம்” என உரைக்கின்றார். நீதி பலவும் தன்ன வுருவாம் என மிகுத்தவன்” (வைகா) என ஞானசம்பந்தர் கூறுதலால், சிவனது திருக்கூத்தை “நீதி நடம்” எனச் சிறப்பிக்கின்றார். அத் திருக்கூத்து எல்லா உயிர்கட்கு இன்பம் தருவதாகலின், “பேரின்ப நிதி” எனப் பேசுகின்றார். அருட் பேற்றுக்குத் தகுதி செய்யாத பாவங்களை யுடையவன் எனத் தம்மைக் குறிப்பாராய், “பாவியேன்” என உரைக்கின்றார். அருட் சோதி என்றது திருவருள் ஞானம். ஞானம் எய்திய பின் திருவருள் உணர்வே யுள்ளம் முழுதும் பரந்து நினைவு முழுதும் அதுவே ஆயினமை புலப்பட, உள்ளகத்தே சூழ்ந்து கலந்து கலங்குகின்றாய்” என இயம்புகின்றார். ஞான வின்ப நலங்களைச் சொல்லால் உரைக்க லாகாமை தோன்ற, “நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது” என்று கூறுகின்றார். சொல்ல முடியாதாயினும் ஒவ்வொருவரும் தத்தம் அனுபவத்தால் உணர்ந்து கொள்ளலாம் என வற்புறுத்தற்கு, “இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே” என்று கூறுகின்றார். இவ்வாறே திருமூலரும், “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என உரைப்பது காண்க.
இதனால், அருள் ஞானப் பேறு பெற்றமை உணர்த்தியவாறாம். (10)
|