3632. மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு
வள்ளலே நின்திரு வரவுக்
கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும்
இறையும்வே றெண்ணிய துண்டோ
நடம்புரி பாதம் அறியநான் அறியேன்
நான்செயும் வகையினி நன்றே
திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும்
சிறிதும்நான் பொறுக்கலேன் சிவனே.
உரை: சிவபெருமானே, அருள் வள்ளலே, மடம்படும் இயல்பினை யுடைய மனத்தினால் அறிவுகலங்கிய துண்டாகலின், நீ எழுந்தருளுதற்கு என் மனத்தை யிடமாக்குதற்குச் சிறியவனாகிய யான் கலங்கியதுண்டு; என்றாலும் நின்னை வேண்டாத வொன்றாக எண்ணியதில்லை; அம்பலத்தின்கண் கூத்தாடும் நினது திருவடி யறிய, யான் வேறாக எண்ணியறியேன்; நினக்கு இடமாக்கும் வகையில் கலங்கும் என் மனத்துக்கு, மிக்க வலிமை தந்து கலங்காவாறு காத்தருள வேண்டும்; இந்நிலைமையை நான் சிறிதும் பொறுக்க மாட்டேன், காண். எ.று.
அறியாமை யுறுவது மடம் புரிதல் எனப்படுகிறது. அறிவறியாமை யால் மனம் இருளுற்று மென்மை மிக்குக் கலங்குவ தியல்பாதலால், “மடம்புரி மனத்தாற் கலங்கியதுண்டு” என்றும், என் மனத்தை நீ எழுந்தருளும் நல்ல இடமாக்குதற்குத் தூய்மையின்மையும் எனது அறிவாற்றல்களின் சிறுமையும் நோக்கிக் கலக்க முற்றேன் என்பாராய், “நின் திருவரவுக்கு இடம் புரி சிறியேன் கலங்கினேன்” என்றும் இயம்புகின்றார். என்றாலும், மனக் கலக்க மெய்தினும், உன்னை அன்னியப் பொருளாகக் கருதிற்றிலேன் என்றற்கு, “இறையும் வேறு எண்ணிய துண்டோ” என விளம்புகின்றார். இறை - சிறிது. எண்ணாமையை வற்புறுத்தற்கு “நடம்புரி பாதம் அறிய நான் அறியேன்” எனவும், மனத்தைச் சிவம் எழுந்தருளும் இடமாக்கும் திறத்தையே விரும்புகின்றாராகலின், “நான் செயும் வகை” எனவும் நவில்கின்றார். “வினைத் திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்” (குறள்) என்று சான்றோர் உரைத்தலால் “இனி நன்றே திடம் புரிந்தருளிக் காத்திடல் வேண்டும்” என்றும், “சிறிதும் நான் பொறுக்கலேன்” என்றும் இசைக்கின்றார்.
இதனால்; சிவன் எழுந்தருளும் இடமாமாறு மனத்துக்குத் திடமருளிக் காத்தல் வேண்டு மெனப் பராவியவாறாம். (2)
|