3633. நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
நின்றதே அன்றிநின் அளவில்
நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே
நோக்கிய திறையும் இங்குண்டோ
தூக்கிய பாதம் அறியநான் அறியேன்
துயரினிப் பொறுக்கலேன் சிறிதும்
தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்
தெளிவித்தல் நின்கடன் சிவனே.
உரை: சிவபெருமானே, புலன் வழிச் செல்லாமல், ஒடுக்கப்பட்ட என் மனம் பின்னும் எழுந்து என்னைக் கலக்கியதாயினும், நின்பாற் சென்ற என்னுள்ளம் மற்றை உலகியல் விடயங்களில் இப்பொழுது செல்வதில்லை; அம்பலத்தில் ஆடற்கு எடுத்த நின் திருவடி யறியச் செல்வதறியேன்; இனியும் உலகியல் துன்பங்களைச் சிறிதும் தாங்க மாட்டேனாதலால், நின்பால் நிறைந்திருக்கும் சிவானந்தத்தில் மூழ்கிச் சிறக்குமாறு என்னை ஞானத் தெளிவுடையனாக்குவது நினக்குக் கடனாகும். எ.று.
சிவஞான போகங்களை விரும்புவோர் மனத்தைச் சென்ற விடமெல்லாம் திரிய விடாது நீக்கி நிறுத்துவ தியல்பாதலால், “நீக்கிய மனம்” என்று குறிக்கின்றார். இதனை மனவொடுக்கம் என்று நூலோர் கூறுவர். துள்ளித் தாவும் இயல்பினதாகையால் மீள மீள எழுந்து என் மனம் என்னைக் கலக்குகிற தென்பார், “அடுத்தெனைக் கலக்கி நின்றது” என வுரைக்கின்றார். இவ்வாறு என் அறிவைக் கலக்கினும் நின் திருவருட் பேற்றின்கண் நின்ற நோக்கம் சிறிதளவும் மாறியதில்லை என்றற்கு, “நின்னளவில் நோக்கிய நோக்கம் பிற விடயத்தே நோக்கியது இங்கு இறையும் உண்டோ” எனக் கூறுகின்றார். தூக்கியபாதம் - “அம்பலத்தில் ஆட எடுத்திட்ட பாதம்”. ஞான மயமான திருவடியாதலால், “தூக்கிய பாதமறிய நான் அறியேன்” என்று சான்று காட்டுகின்றார். உலகில் வாழும் அளவும், உலகியல் துன்பங்கள் தாக்குத லொழியாமை பற்றி, “துயரினிச் சிறிதும் பொறுக்கலேன்” என மொழிகின்றார். சிவஞானத் தெளிவு உண்டாயின் ஆன்மாக்கள் சிவபோகத்தில் தேக்கித் திளைக்கும் என ஞான நூல்கள் தெரிவித்தலால், “தேக்கிய களிப்பில் சிறப்ப வந்து என்னைத் தெளிவித்தல் நின் கடன் சிவனே” எனத் தெரிவிக்கின்றார்.
இதனால் சிவஞானத் தெளிவு வேண்டியவாறாம். (3)
|