3634.

     ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும்
          என்னுயிர்க் கின்பமும் பொதுவில்
     ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன்
          அன்றிவே றெண்ணிய துண்டோ
     ஊன்றிய பாதம் அறியநான் அறியேன்
          உறுகணிங் காற்றலேன் சிறிதும்
     தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத்
          துலக்குதல் நின்கடன் துணையே.

உரை:

     என் உயிர்க்குத் துணையாகிய சிவ பரம்பொருளே, என்னை யிவ்வுலகிற் பெற்றெடுத்த நற்றாயும் தந்தையும் குருவும் இவர்களால் எனக்கு எய்தும் இன்பங்களும் யாவும், தில்லையம்பலத்தில் அமைந்த மெய்ப்பொருளே என எண்ணி யிருக்கின்றேனே யன்றி, வேறு யாவரையும் நெஞ்சில் எண்ணியது கிடையாது; முயலகன் மேல் ஊன்றிய திருவடியறிய நான் வேறு நினைத்ததில்லை; ஆதலால் இவ்வுலகியல் துன்பங்களைச் சிறிதும் பொறுக்க மாட்டேன்; ஆகவே, நீ என் மனத்தின்கண் எழுந்தருளி என் மயக்க மனைத்தையும் போக்கி ஞான விளக்கம் உண்டாகச் செய்தல் உனக்குக் கடனாகும். எ.று.

     உலகிற் பிறந்தார்க்கு உறுதுணை யாபவர் தாயும் தந்தையும் குருவுமே யாதலால் அவர்களை எடுத்து மொழிகின்றார். நற்றாயால் உடல் நல வின்பமும், தந்தையாற் கல்வியறி வின்பமும், குருவால் நன்ஞான வின்பமும் உண்டாவது பற்றி, “என்னுயிர்க் கின்பம்” என்று கூறுகின்றார். இவ்வின்ப வகை யனைத்துக்கும் மூல காரணம் இன்ப வடிவினனாகிய சிவ பரம்பொருளே என எல்லா அறிஞர்களும் அறிவு நூல்களும் வற்புறுத்துவதை யுணர்ந்தமையால், “பொதுவில் ஆன்ற மெய்ப் பொருளே என்றிருக்கின்றேன்” என வுரைக்கின்றார். பொது - திருச்சிற்றம்பலம். ஆன்றல் - எழுந்தருளுதல். சிவமல்லது வேறு பிற தெய்வங்களை மெய்ப்பொருளென எண்ணாமை புலப்பட, “வேறு எண்ணிய துண்டோ” எனவும், இதனை வலியுறுத்தற்கு “ஊன்றிய பாத மறிய நான் அறியேன்” என மொழிகின்றார். ஒருகாலை யூன்றி ஒருகாலைத் தூக்கி ஆடுகின்றாராதலால், முன் பாட்டில் தூக்கிய பாதத்தைச் சொல்லி, இப்பாட்டில் “ஊன்றிய பாதத்தை” யுரைக்கின்றார். ஊன்றிய பாதத்தின் கீழ் முயலகன் தோன்றுதலால், “முயலகன் மேல் ஊன்றிய திருவடி” என உரை கூறுகிறது. உறுகண் - துன்பம் உலகில் தோன்றி வருத்தும் பிறவித் துன்பங்களைத் தாங்க மாட்டாமை பற்றி, “உறுகண் இங்கு ஆற்றலேன் சிறிதும்” என்றும், இத் துன்பங்கள் அறிவைக் கலக்கி மயக்குவதால், “தோன்றி யென்னுளத்தே மயக் கெலாம் தவிர்த்துத் துலக்குதல் நின் கடன்” என்றும் இயம்புகின்றார். திருவருள் ஞானத்தாலன்றி மனமயக்கம் நீங்குதலும் அறிவு விளக்கமு முண்டாகாதாதலால், “உளத்தே தோன்றி” எனவும், “துலக்குதல் நின் கடன்” எனவும் விதந்துரைக்கின்றார்.

     இதனால், மனமயக் கொழித்து, ஞான விளக்கம் தருமாறு வேண்டியவாறாம்.

     (4)