3635.

     மாயையாற் கலங்கி வருந்திய போதும்
          வள்ளல்உன் தன்னையே மதித்துன்
     சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
          தலைவவே றெண்ணிய துண்டோ
     தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
          துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
     நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
          நன்றருள் புரிவதுன் கடனே.

உரை:

     தலைவனே, உலகியல் மயக்கத்தால் அறிவு கலங்கி வருந்திய காலத்தும், அருள் வள்ளலாகிய உன்னையே மனத்திற் கொண்டு பிற மக்களனைவரையும் உன்னுடைய சாயையாகவே கண்டேனே யன்றி வேறாக நான் கருதியதில்லை; தூயவாகிய அழகிய நின் திருவடி யாணையாக இதனைக் கூறுகின்றேன்; இவ்வுலகியல் துன்பங்களை இனிச் சிறிது போதும் தாங்க மாட்டேன்; எனக்கு நாயகனாகிய நீ எனது மயக்க மெல்லாவற்றையும் போக்கி நன்ஞானம் அருளுவது உன்னுடைய கடனாகும், காண். எ.று.

     காம வெகுளிகள் போல உலகுடல் நல்கும் மயக்கம் துன்பத்துக் கேதுவாகலின், “மாயையாற் கலங்கி வருந்திய போதும்” எனவும், மயக்குற்ற போது அறிவு சோர்ந் தொழியினும், உன்னைப் பற்றிய நினைவு மாறியதில்லை யென்பாராய், “வள்ளல் உன்றன்னையே மதித்து” எனவும், அதனால், காணப்படும் மக்களனைவரையும் சிவ வடிவமாகவே கருதினேன்; வேறாக நினைத்ததில்லை என்பாராய், “உன் சாயையாப் பிறரைப் பார்த்ததே யல்லால், தலைவ வேறு எண்ணிய துண்டோ” எனவும் இயம்புகின்றார். வேறாகக் கருதிய தில்லை என்றதை வலியுறுத்தற்குத் “தூய பொற் பாத மறிய நான் அறியேன்” என்று சொல்லுகின்றார். இத்தகைய நினைவு கொண்டு வாழ்கின்றேனாயினும், இவ்வுலகியல் துன்பங்கள் போந்து தாக்குத லொழியாமையால் யான் வலியிழந்து மெலிகின்றேன் என்பார், “துயர் இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன்” என்றும், இதற்குத் துணையாக வேண்டுவது நின்னுடைய திருவருள் ஞானமேயாகும் என்பாராய், “நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே நன்றருள் புரிவது உன் கடனே” என்றும் இசைக்கின்றார். நன்று - திருவருள் ஞானம். அது தானும் இறைவன் அருளாலே பெறக் கடவதாதலால், “நன்று அருள் புரிவது உன் கடனே” என வுரைக்கின்றார்.

     இதனால், திருவருள் ஞானமல்லது மயக்கம் தீர்தற்கு வேறு வழியில்லை, என்று தெரிவித்தவாறாம்.

     (5)