3636. வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்
மன்னிய உண்மை ஒன்றென்றே
எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
திறையும்வே றெண்ணிய துண்டோ
அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்
அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்
தெளிவித்துக் காப்பதுன் கடனே.
உரை: பொருள்களின் நிறம் வேறுபடினும், வடிவு வேறுபடினும் வேறுபடாது நிலைபெற்ற பொருண்மை ஒன்றே யெனக் கருதிய தன்றி, அதனைச் சச்சிதானந்தமாகிய பரம் பொருளின் வேறாக யான் சிறிதும் எண்ணியதில்லை; இதனைத் தலைவனாகிய நின் திருவடி யறியக் கூறுவேன்; இவ்வுலகியல் துன்பங்களை இனியும் சிறிதும் பொறுக்க மாட்டேன், இது திண்ணமாக நின்மேல் ஆணையாகக் கூறுவதாகும்; என்னறிவைத் தெளிவித்துக் காப்பது நினது பொறுப்பாகும். எ.று.
உலகும் உலகியற் பொருள்களும் உயிர்களும் யாவும் பிரமமயம் என்னும் சான்றோர் கூற்றை மேற்கொண்டு எண்ணும் முறையாதலால், “வண்ணம் வேறெனினும் வடிவு வேறெனினும் மன்னி வுண்மை யொன் றென்றே எண்ணிய தல்லால் சச்சிதானந்தத் திறையும் வேறு எண்ணிய துண்டோ” என்று மொழிகின்றார். உயர்திணை யெனவும் அஃறிணை யெனவும், உயிர்களாகிய ஆன்மாக்க ளெனவும், உயிரில் பொருள்க ளெனவும், இவற்றின் பண்பும் தொழிலும் வேறு வேறு எனவும் பகுத்துக் காணப் படினும் பொருண்மை நிலையில் யாவும் ஒன்றே யென்று நோக்கும் பிரம ஞானத்தை இவ்வாறு கூறுகின்றார். வேறு வேறாகக் காண்பது மித்தியா ஞானமாதலின், “இறையும் வேறு எண்ணிய துண்டோ” என விளம்புகின்றார். சச்சிதானந்தம் - சத்தாயும் சித்தாயும் இன்பாயும் உள்ள பிரமப் பொருள்; இது “சருவம் பிரம மயம் ஜகத்து” எனச் சுருக்கமாக வுரைக்கப்படுவது. பிரமம் என்றும் உள்ளது; இரண்டல்லாதது எனப்படுவது பற்றி “மன்னிய வுண்மை யொன்று” என இசைக்கின்றார். “ஒன்றென்றது ஒன்றே காண், ஒன்றே பதி” எனச் சிவஞான போதமும், “ஏக மேவ அத்விதீயம் பிரமம்” எனச் சாந்தோக்கியமும் கூறுவது காண்க. பிரம ஞான நாட்டம் உலகியல் துன்பங்களால் கலக்கமுறுதலால், “அஞர் இனிச் சிறிதும் இங்கு ஆற்றேன்” என அவலிக்கின்றார். தமது ஆற்றாமையை வற்புறுத்தற்குத் “திண்ணமே நின் மேல் ஆணை” எனத் தெரிவிக்கின்றார்.
இதனால், பிரம ஞான நாட்டம் சிதையாமற் காத்தருள்க என வேண்டியவாறாம். (6)
|