3637. ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
உற்றகற் பனைகளும் தவிர்ந்தேன்
வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும்
மன்றினை மறந்ததிங் குண்டோ
ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன்
ஐயவோ சிறிதும்இங் காற்றேன்
பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப்
பரிந்தருள் புரிவதுன் கடனே.
உரை: ஐயனே, பிணங்குகின்ற மதங்களும் சமயங்களுமாகிய இவற்றையும், இவற்றில் அறிஞர்கள் கண்டுரைத்த கற்பனைகளையும் புறக்கணித் தொழிந்தேன்; வாடுகின்ற மனத்திற் கலக்கமுற்றேனாயினும், நினது திருவம்பலத்தை மறந்ததில்லை; இதனை அதன்கண் ஆடல் புரிகின்ற திருவடி யாணையாக வுரைக்கின்றேன்; இனி இவ்வுலகியல் துன்பங்களைச் சிறிதும் பொறுக்க மாட்டேன்; நின்னைப் புகழ்ந்துரைக்கும் பாட்டுக்களைப் புனைகின்றேன்; படிக்கின்றேன்; ஆகவே என்பால் அன்புகூர்ந்து திருவருள் ஞானம் வழங்குவது உனது பொறுப்பாகும்.
மதம் - கொள்கை. சமயம் விரிந்த இயல்பிற்று; மதம் - குறுகிய தன்மைத்து; இந்து சமயம் விரிந்தது; சைவம் வைணவம் என்பன மதங்கள். இவை ஒன்றினொன்று மாறுபட்டும் வேறுபட்டும் இயலுவதுபற்றி, “ஊடல் செய் மதமும் சமயமும்” என வுரைக்கின்றார். “ஓது சமயங்கள் பொருள் உணரும் நூல்கள் ஒன்றோ டொன் றொவ்வாமல் உள பலவும் இவற்றுள் யாது சமயம் பொருள் நூல் யாது இங்கென்னில் இதுவாகும் அதுவல்ல தெனும் பிணக்கு” (சிவ சித்தி) என்று பெரியோர் கூறுவது காண்க. தத்தம் மதமும் சமயமும் உயர்ந்தன என வலியுறுத்தற்கு மதத்தலைவரும் சமய ஞானிகளும் சிந்தித்துப் புகுத்தியுள்ள கற்பனைகள் பலவாதலின், “இவற்றி லுற்ற கற்பனைகள்” என்றும், கற்பனையுண்மை யாகாமையும் உண்டு என்பது பற்றி, “தவிர்ந்தேன்” என்றும் கூறுகின்றார். வேண்டுவன எய்தாவிடத்தும், மிகைபட எய்துமிடத்தும் மனக்கவலை மிக்கு வருத்துதலால், “வாடல் செய்மனத்தாற் கலங்கினேன்” எனவும், வாட்டமுற்ற போது மறதியும் பொச்சாப்பும் தோன்றிக் கேடு விளைவிப்பனவாயினும், யான் நினது பொற் சபையினை மறந்ததில்லை என்பாராய், “மன்றினை மறந்த திங்கு உண்டோ” எனவும் இயம்புகின்றார். ஆடல் செய்பாதம் ஞான பாதமாதலால், அதன் மேல் ஆணையிட்டுத் தமது கூற்றை வற்புறுத்துவார், “ஆடல் செய்பாதம் அறிய நான் அறியேன்” என்று மொழிகின்றார். இங்ஙனம் மறவா மனத்தினனாயினும் உலகியல் துன்பங்கள் தாக்கி மனவொருமையைச் சிதைக்கின்றன; சிறிது போதும் என்னாற் பொறுக்க முடியவில்லை என்பாராய், “ஐயவோ சிறிதும் இங்கு ஆற்றேன்” என்றும், என்பால் அன்புற்று அருளுவையேல், ஞான வன்மையால் உய்தி பெறுவேன் என்றற்கு “எனக்குப் பரிந்தருள் புரிவதுன் கடனே” என்றும் இசைக்கின்றார்.
இதனால் திருவருள் ஞான வலிமை வேண்டியவாறாம். (7)
|