3638.

     உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம்
          ஒருசிவ மயமென உணர்ந்தேன்
     கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும்
          கருத்தயல் கருதிய துண்டோ
     வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன்
          மயக்கினிச் சிறிதும்இங் காற்றேன்
     தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே
          தெளிவித்தல் நின்கடன் சிவனே.

உரை:

     மெய்ப்பொருளாகிய சிவ மொன்றே யுளது; இரண்டில்லை; ஏனைப் பொருள் யாவும் ஒன்றாகிய சிவமயம் என்று உணர்ந்து கொண்டேன்; ஆயினும் சமய மத பேதங்களால் கள்ளம் பொருந்திய மனமுடைமையால் அறிவு கலங்கி விட்டேன்; என்றாலும், என் கருத்து வேறு கடவுளரை நினைந்ததில்லை; வள்ளலாகிய நின் திருவடி யாணையாக நான் இதனை யுரைக்கின்றேன்; இனிமேற் சிறிது போதும் பிறவியால் உளதாகிய மயக்கத்தைச் சிறிதும் பொறுக்கமாட்டேன்; தெளிந்த அமுது போன்ற திருவருள் ஞானத்தை நல்கி அம்மயக்கத்தைப் போக்கி எளியேனைத் தெளியச் செய்வது நினக்குக் கடனாகும். எ.று.

     உள்ளது - என்றும் உள்ள மெய்ப்பொருள்; அது செம்பொருளாகிய சிவம். “ஓர்த் துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் போர்த்துள்ள வேண்டா பிறப்பு” (குறள்) எனச் சான்றோர் உரைப்பது காண்க. இதனைப் பிரமம் என்றும், ஏகம் என்றும், அத்துவிதீயம் என்றும் சமயவாதிகள் பேசுவது பற்றி, “உள்ளத்தே யுள்ளது இரண்டிலை” என்றும் ஏனைப்பொருள் வகை யனைத்தும் சிவக் கூறு என்பது விளங்க, “எல்லாம் ஒரு சிவமயமெனவுணர்ந்தேன்” என்றும் எடுத்துரைக்கின்றார். வேற்றுச் சமயங்களும் மதங்களும் உரைக்கும் பொல்லாக் கருத்துக்கள் நிறைவது பற்றிக் “கள்ள நேர் மனத்தால்” எனவும், அவற்றால் கலக்கமே விளைவது பற்றிக் “கலங்கினேன்” எனவும், இக்கலக்கங்களால் மனவொருமை கெடாது சிவத்தையே நினைந் தொழுகுகிறேன் என்றற்கு, “கருத்தயல் கருதிய துண்டோ” எனவும் இசைக்கின்றார். தமது கூற்றை வலியுறுத்தற்கு “வள்ளலுன் பாதம் அறிய நான் அறியேன்” என்று மொழிகின்றார். மக்கட் பிறப்பு மயக்கம் பொருந்தியிருத்தல் சான்றோர் அறிந்த வுண்மை; “மையல் மானுடமாய் மயங்கும் வழி, ஐயனே தடுத் தாண்டருள்” (தடுத்தாட்) என நம்பியாரூரர் வேண்டுவ தறிக. அதனையே வடலூர் வள்ளலும், மயக்கினிச் சிறிதும் இங்கு ஆற்றேன்” என வுரைக்கின்றார். மயக்கத்தை யொழிப்பது சிவஞானமாதலால், “தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே தெளிவித்தல் நின் கடன் சிவனே” என தெரிவிக்கின்றார். சிவஞானம் சிவனருளா லன்றி எய்தாமையின் “நின் கடன் சிவனே” என முறையிடுகின்றார்.

     இதனால், சிவஞானத்தால் தெளிவு நல்க வேண்டுமென விண்ணப்பித்தவாறாம்.

     (8)