3639.

     எம்மத நிலையும் நின்னருள் நிலையில்
          இலங்குதல் அறிந்தனன் எல்லாம்
     சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால்
          தனித்துவே றெண்ணிய துண்டோ
     செம்மலுன் பாதம் அறியநான் அறியேன்
          சிறிதும்இங் கினித்துயர் ஆற்றேன்
     இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள
          தியற்றுவ துன்கடன் எந்தாய்.

உரை:

     எந்தையாகிய சிவனே, எந்தச் சமயத்தின் இயல்பையும் நினது திருவருள் நிலையில் விளங்கும் தன்மையிற் கண்டு அறிந்து யான் எனக்குச் சம்மதமாகக் கொண்ட தன்றித் திருவருட்கு வேறாகத் தனித்த தொன்றெனக் கருதி விலக்கியதில்லை; தலைவனாகிய நின் திருவடியறிய நான் வேறாக நினைந்து வெறுத்ததில்லை; எனினும் இவ்வுலகியல் துன்பங்களை இனிமேற் சிறிதும் பொறுக்க மாட்டேன்; இந்த அறிவால் அடியேன் எண்ணியவாறு செய்தருள்வது தேவரீர்க்குக் கடனாம். எ.று.

     எத்தகைய கொள்கைகளையுடைய மதமாயினும் அதுவும் திருவருள் நிலைக்கு ஒத்ததாம் எனக் கண்டு தெளிந்தேனேயன்றித் திருவருட்கு மாறாய்த் தனித்த ஒன்று என நான் புறக்கணித்ததில்லை என்பாராய் “எம்மத நிலையும் திருவருள் நிலையில் இலங்குதல் அறிந்தன னெல்லாம் சம்மதமாக்கிக் கொள்கின்றேன்” என்றும், “தனித்து வேறு எண்ணிய துண்டோ” என்றும் இயம்புகின்றார். திருவருள் நிலைக்கு ஒப்பதாவது இந்நிலவுலகில் மக்கட்குத் திருவருள் வாழ்வு எவ்வாறு அமைத்துள்ளதோ அவ்வாழ்வின் செம்மைக் கேற்பச் சமய சமுதாயக் கொள்கைகள் அமைந்துள்ளன எனக் கருதுதல். இக்கருத்து எம்மதத்தையும் ஏற்று மகிழும் மனப்பான்மையை யுண்டு பண்ணுதலால் “சம்மத மாக்கிக் கொள்கின்றேனல்லால் தனித்து வேறு எண்ணிய துண்டோ” எனக் கூறுகின்றார். செம்மல் - செம்மைப் பண்பால் உயர்ந்த தலைவன். “செம்மல் உன் பாதம் அறிய நான் அறியேன்” என்பது தமது கருத்தையுறுதிப் படுத்தும் வன்புறை. உலகியல் துன்பம் இந்த மனவமைதியைக் கெடுப்பது குறித்துச் “சிறிதும் இங்கு இனித் துயர் ஆற்றேன்” என மொழிகின்றார். இந்தச் செவ்விய கொள்கையே நிலைபெறக் குறிக்கின்றாராதலால், “இம்மதிக்கு அடியேன் குறித்தவாறு இயற்றுவது உன் கடன்” எனவுரைக்கின்றார்.

     இதனால், எம்மதத்தையும் வெறாது விரும்பும் மனப்பான்மை நிலவுதல் வேண்டு மென விண்ணப்பித்தவாறாம்.

     (9)