3640. அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே
அடுத்திடும் புறப்புறம்நான்கில்
இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால்
இறையும்இங் கெண்ணிய துண்டோ
உகந்தநின் பாதம் அறியநான் அறியேன்
உறுகணிங் கினிச்சிறி துந்தான்
இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங்
கென்னைஆண் டருள்வ துன்கடனே.
உரை: அக மென்றும் புற மென்றும், அகப்புறம் புறப்புறம் என்றும் கூறப்படும் சமயங்கள் நான்கனுள் ஒன்றையும் நான் புறக்கணித்ததில்லை; ஏகதேசமாக ஒன்றையும் சிறிதும் புறம்பாக எண்ணியதில்லை உயர்ந்த; நின் திருவடியறிய நான் புறம்பாகக் கருதிய தில்லையன்றோ? இனி, இவ்வுலகியல் துன்பங்களைச் சிறிதளவும் பொறுக்கமாட்டேன்; என் மயக்கத்தைப் போக்கி ஆண்டு அருள் ஞானம் வழங்குவது உன் பொறுப்பாகும். எ.று.
அகம், புறம், அகப்புறம், புறப்புறம் எனச் சமயங்கள் நால்வகைப் பட்டு ஒவ்வொன்றும் அவ்வாறாக விரியும். அவற்றுள் புறப்புறச் சமயம் உலகாயதம், நால்வகைப் பௌத்தம், ஆருகதம் எனவும், புறச்சமயம், தருக்கம், மீமாஞ்சை, ஏகான்ம வாதம், சாங்கியம், யோகம், பாஞ்சராத்திரம் எனவும், அகப்புறச் சமயம், பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம் எனவும், அகம், பாடாண வாதம், பேத வாதம், சிவ சம வாதம், சிவ சங்கிராந்த வாதம், ஈசுவர வவிகார வாதம், சிவாத்துவிதம் எனவும் விரித் துரைக்கப்படும். இவற்றுள் ஒன்றையும் வெறுத்துப் புறக்கணித்ததில்லை என்பாராய், “நான்கில் இகழ்ந்ததும் இலை” என வுரைக்கின்றார்.
ஏகதேசம் - பலவற்றுள் ஒன்று; பல காலங்களில் ஒரு காலத்திலும் ஒரு சிறிதும் புறம்பாகக் கருதிய தில்லை என்றற்கு, “ஏகதேசத்தால் இறையும் இங்கு எண்ணிய துண்டோ” என இயம்புகின்றார். உகத்தல் - உயர்தல். உறுகண் - துன்பம். இகம் - இவ்வுலக வாழ்வு.
இதனால், சமய வேற்றுமை நோக்காத சமரச மனப்பான்மையை, எடுத்தோதித் திருவருள் ஞானம் வழங்க வேண்டியவாறாம். (10)
|