21. கைம்மா றின்மை
அஃதாவது, இறைவனுக்குத் தாம் செய்யக் கடவக் கைம்மாறு ஒன்றும் இல்லாமையை யுரைப்பதாகும்.
இதன்கண், தம்முடைய பொல்லாத தீங்குகளையும், புன்மைகளையும், வஞ்சங்களையும், வன்பிழைகளையும், குற்றங்களையும், வன்செயல்களையும் குணமாகக் கொண்டு கருணை மழை பொழிந்து, தம் மயக்கெலாம் தவிர்த்துத் தம்மை ஆட்கொண் டருளிய இறைவனுக்குத் தாம் புரியும் கைம்மாறு எதுவும் இல்லை என்றும், தம்முடைய முன்பின் செயல்களை யெல்லாம் தம் செயல்களாக அல்லாமல், தம்மைக் கலந்து ஒன்றாய் நின்ற இறைவன் செயல்களாக தாம் ஐயம் திரிபறக் கண்ட பின் வாய்விட்டுரைத்தற்கு ஒன்றுமில்லை என்றும், தமக்கு இருமையும் ஒருமைதனில் ஈந்த இறைவனும் தாமும் வேறுபா டற்று, உரிமையால் ஒன்றெனக் கலந்து கொண்ட ஒருமையை நினைத்துத் தம் உள்ளகம் தழைத்து மலர்கின்றது என்றும் கூறுகின்றார்.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 3641. இழைஎலாம் விளங்கும் அம்மை
இடங்கொள்நின் கருணை என்னும்
மழைஎலாம் பொழிந்தென் உள்ள
மயக்கெலாம் தவிர்த்து நான்செய்
பிழைஎலாம் பொறுத்த உன்றன்
பெருமைக்கென் புரிவேன் அந்தோ
உழைஎலாம் இலங்குஞ் சோதி
உயர்மணி மன்று ளானே.
உரை: பக்கமெல்லாம் விளங்குகின்ற ஒளியையுடைய உயர்ந்த மணிகள் இழைத்த தில்லையம்பலத்துள் எழுந்தருளுகின்ற கூத்தப் பெருமானே, அணிகலன் வகைகள் பலவும் அணிந்து விளங்கும் உமையம்மை இடப்பாகத்தே கொண்ட பெருமானாகிய நீ நின்னுடைய அருள் என்னும் மழையை முற்றவும் பொழிந்து, என்னுள்ளத்தில் படிந்து இருக்கின்ற மயக்க மெல்லாம் போக்கி, நான் செய்த எல்லாப் பிழையையும் பொறுத் தருளிய உன்னுடைய பெருந்தன்மைக்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
உயரிய அணிகல வகைகள் அனைத்தையும் குறைவற அணிந்தவள் ஆதலின் உமாதேவியை, “இழையெலாம் விளங்கும் அம்மை” என்று போற்றுகின்றார். இறைவன் திரவருட் பெருக்கால் தமது மன மயக்க மெல்லாம் நீங்கினமை புலப்படுத்தற்கு, “கருணை யென்னும் மழை யெலாம் பொழிந்து உன் உள்ள மயக்கெலாம் தவிர்த்து” என்றும், அருள் என்றது திருவருள் ஞானத்தையாதலின், அந்த ஞானத்தால் மன மயக்கமும் அதனால் விளையும் குற்றங்களைப் பொறுத்தருளினமை யுணர்ந்து, “நான் செய்பிழை யெலாம் பொறுத்த” என்றும், அதனால் சிவபெருமானுடைய பெருந்தன்மை இனிது விளங்கக் கண்டு, “உன்றன் பெருமைக்கு என் புரிவேன்” என்றும் உரைக்கின்றார். பெருமை ஈண்டுப் பெருந்தன்மை மேற்று. என் புரிவேன் என்றவிடத்து என்ன கைம்மாறு செய்வேன் என்னும் பொருளை உட்கொண்டு நிற்கிறது. உழை - பக்கம். ஞான சபையில் இழைக்கப்பட்டுள்ள, மணிகளின் ஒளி எங்கும் பரந்து ஒளிர்தலால், “உழை யெலாம் இலங்கும் சோதி உயர்மணி” எனப் பாராட்டுகின்றார்.
இதனால், இறைவனது திருவருட் பெருமையை வியந்து கைம்மாறு செய்ய மாட்டாத தமது எளிமையை வெளிப்படுத்தியவாறாம். (1)
|