3643. சிற்றறி வுடையன் ஆகித்
தினந்தொறும் திரிந்து நான்செய்
குற்றதும் குணமாக் கொண்டே
குணப்பெருங் குன்றே என்னைப்
பெற்றதா யுடனுற் றோங்கும்
பெருமநின் பெருமை தன்னைக்
கற்றறி வில்லேன் எந்தக்
கணக்கறிந் துரைப்பேன் அந்தோ.
உரை: என்னை இவ்வுலகிற் பெற்ற தாய் போன்று ஞான மளித்து ஓங்கும் பெருமானே, சிற்றறிவும் சிறுதொழிலு முடையவனாய், நாளும் எங்கனும் திரிந்து நான் செய்த குற்றங்கள் அனைத்தையும் குணமாகக் கொண்டு, பொறுத் தருளிய நற்குண யுருவாகிய பெரிய குன்று போல்பவனே, நின்னுடைய பெருமையை நன்கு கற்றுப் பெறும் நல்லறிவில்லாத நான் எந்த வகையில் அளந்தறிந்து உரைப்பேன். எ.று.
தாயினும் சாலப் பரிந்து அருள்பவனாதலால், “பெற்ற தாயுடன் உற்று ஓங்கும் பெரும” என்றும், தான் பெற்ற சேய் குற்றங்களைப் பொறுக்கும் தாய் போல, செய்த குற்றங்களைக் குணமாகக் கருதிப் பொறுத் தருளிய அருள் நலத்தை வியந்து, “நான் செய்குற்றமும் குணமாக் கொண்ட குணப் பெங்குன்றே” என்றும் இயம்புகின்றார். தாம் குற்றம் செய்த வகையைத் “தினந்தொறும் திரிந்து நான் செய் குற்றம்” எனவும், அதற்கு ஏது தமது சிற்றறி வுடைமை என்றற்கு, “சிற்றறி வுடையேன்” எனவும் தெரிவிக்கின்றார். சிவனது பெருமையை யுரைத்தற்குத் தமது மாட்டாமைக்குக் காரணம் காட்டுவார், “கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன்” எனக் கூறுகின்றார்.
இதனால், இறைவன் பெருமையைக் கூறுமாற்றால் தமது கைம்மாறு செய்ய மாட்டாமையை வெளியிட்டவாறாம். (3)
|