3646.

     துரும்பினில் சிறியேன் வஞ்சம்
          சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த
     பெரும்பிழை அனைத்தும் அந்தோ
          பெருங்குண மாகக்கொண்டாய்
     அரும்பொருள் என்ன வேதம்
          ஆகமம் வழுத்து கின்ற
     கரும்பினில் இனியாய் உன்றன்
          கருணைஎன் என்பேன் அந்தோ.

உரை:

     அரிய தொரு பரம்பொருள் என்று வேதங்களும் ஆகமங்களும் புகழ்ந் தோதுகின்ற கரும்பென இனிக்கும் பெருமானே, புல்லிய துரும்பினும் அற்பனாகிய யான் வஞ்ச நினைவுகள் பொருந்திய நெஞ்சினால் செய்துள்ள பிழைகள் எல்லாவற்றையும் கண்டருளி, பிறவிக் குணமெனக் கொண்டு, என்னைப் பொறுத் தருளினாய்; உனது கருணை மாண்பை என்ன வென்று சொல்வேன். எ.று.

     அந்தோ - இரக்கக் குறிப்பு. தமது புன்மையை யுரைத்தற்குத் “துரும்பினிற் சிறியேன்” எனவும், பெரும் பிழைகளைச் செய்தற்குக் காரணம், நெஞ்சின் இயல்பு என்பாராய், “வஞ்சம் சூழ்ந்த நெஞ்சகத்தேன்” எனவும் கூறுகின்றார். பொறுத்தற் கரிய பிழையைப் “பெரும் பிழை” எனக் குறிக்கின்றார். குணமாவது பொருள் அழியுங் காறும் உடனிற்பதாகலின், நீக்க வொண்ணாமை பற்றி, “பெருங் குணமாகக் கொண்டாய்” எனப் புகழ்ந் துரைக்கின்றார். சிவ பரம்பொருள் யாரும் பெறற்கும், முழுமை கண்டறிதற்கும் மாட்டாத அருமை யுடைமை பற்றி வேதங்களும் சிவாகமங்களும் “அரும் பொருள்” என வுரைத்தலை உணர்ந் தோதுகின்றமை தோன்ற, “அரும் பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்துகின்ற” என்றும், அருள் பொருளாயினும் “சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவது” கொண்டு, “கரும்பினில் இனியாய்” என்றும் இசைக்கின்றார். என்னென்பேன் என்பது மாட்டாமை தெரிவிக்கும் குறிப்பு மொழி.

     இதனால், சிவனது கருணையின் பெருமையை வியந் துரைத்தவாறாம்.

     (6)