3648. நனவினும் பிழையே செய்தேன்
நாயினும் கடையேன் அந்தோ
கனவினும் பிழையே செய்தேன்
கருணைமா நிதியே நீதான்
நினைவினும் குறியா தாண்டாய்
நின்அருட் பெருமை தன்னை
வினவினும் சொல்வார் காணேன்
என்செய்வேன் வினைய னேனே.
உரை: நாயினும் கடைப்பட்டவனாகிய யான் நினைவுப் பொழுதிலும் கனவுப் போதிலும் குற்றங்களையே செய்தேன்; பெரிய அருட் செல்வனாகிய நீயோ, அவற்றைச் சிறிதும் திருவுள்ளத்திற் கொள்ளாது, ஆண்டு கொண்ட நினது திருவருட் பெருமையைப் பன்முறை கேட்டாலும் எடுத்துச் சொல்பவரை என் சூழலில் காண்கின்றே னில்லை; வினை மிகவும் உடையவனாகிய யான் யாது செய்வேன். எ.று.
செய்வினையின் விளைவு நினையாது செய்து வருந்தும் இயல்பு பற்றித் தம்மை “நாயினும் கடையேன்” என நவில்கின்றார். நனவு - விழித்திருக்கும் காலம். கனவு - உறக்கக் காலம். வினை செய்தற்குரிய கருவிகள் அனைத்தும் தொழிற் படுவனவாதலின் நனவுக் காலத்தை முதற்கண் கூறுகின்றார். கனவின்கண் சில கருவிகளே தொழிற் படுதலின் அதனைப் பின்னர்க் கூறுகின்றார். கனவிலும் நனவிலும் குற்றம் பல செய்தேனாயினும் அவற்றை யுள்ளத்தில் கொள்ளாது அருள் ஞானம் வழங்கினமை தோன்ற, “கருணை மாநிதியே நீதான் நினைவிலும் குறியாது ஆண்டாய்” என்று புகழ்கின்றார். இவ்வாறு திருவருள் புரியும் நினது பெருமையை யாவரும் எக்காலத்தும் எவ்விடத்தும் சொல்லிக் கொண்டிருப்பது கடமையாகவும், என்னுடைய சூழலில் பன்முறை வினவினாலும் உரைப்பார் ஒருவரும் இல்லை என்பாராய், “நின் அருட் பெருமை தன்னை வினவினும் சொல்வார் காணேன்” என்றும், இத்தகைய சூழ்நிலை தமக்கு எய்தியதற்குக் காரணம் தாய் செய்த தீவினை என வருந்துவாராய், “என் செய்வேன் வினையனேனே” என விளம்புகின்றார்.
இதனால், இறைவன் அருட் பெருமையை எடுத்துரைக்கும் நல்லோர் இல்லாத சூழ்நிலையில் தாம் இருத்தலை நினைந்து வருந்தியவாறாம். (8)
|