22. நடராசபதி மாலை

    அஃதாவது, தம் ஆன்மநாயகனாகிய நடராசபதிக்கு, வாடாச் சொன்மலர்களால் வள்ளற்பெருமான் தொடுத்தளிக்கும் பாமாலையாம்.

பன்னிருசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3651.

     அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ
          சுகாதீத வெளிநடுவிலே
     அண்டபகிர் அண்டகோ டிகளும் சராசரம்
          அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்
     பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்
          பொற்பொடுவி ளங்கிஓங்கப்
     புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்
          பூரணா காரமாகித்
     தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள்
          சிறப்பமுதல் அந்தம்இன்றித்
     திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலை
          தெளிந்திட வயங்குசுடரே
     சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ
          சுந்தரிக் கினியதுணையே
     சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
          சோதிநட ராசபதியே.

உரை:

     திருவருள் ஞானநிலை விளங்குகின்ற திருச்சிற்றம்பலம் என்று புகழப்படும் சிவானந்த நிலையத்திற்கு, மேலான ஞான வெளியின் நடுவில் அண்டங்களும், பகிரண்டங்களும் எனக் கூறப்படும் எண்ணிறந்த அண்டங்களும்; அவற்றுள் நிறைந்திருக்கும் சராசரங்கள் யாவையும் படைத்தல் முதலாகிய செயல்களைச் செய்கின்ற, மேன்மை சான்ற சத்திமான்களும் சத்திகளும் என எண்ணிறந்தோர் அழகு மிக விளங்கி ஓங்கவும்; புறப்புறம், அகப்புறம், புறம், அகம் எனப் பகுத்துக் காணப்படும் சமய தத்துவங்களுக்கு மேலாய்ப் பூரண வடிவாய் விளக்கம் நிலைபெற்ற சச்சிதானந்தமாகிய சிவகிரணங்கள் சிறந்து மிளிரவும்; தோற்றக் கேடின்றி என்றும் நின்று திகழும் மெய்ஞ்ஞான சித்தியும் உண்மை ஞான வனுபவ நிலையும் மெய்யுணர்வு தெளிவுறவும் விளங்குகின்ற சிவவொளியே; சுருண்ட இயல்பினையுடைய கூந்தலை யுடையவளாகிய ஆனந்தவல்லியும் சிவசுந்தரியுமாகிய சிவகாமி அம்மைக்கு, இனிய துணைவனே; சுத்த சிவ சன்மார்க்கத்திற்குரிய ஞானச் செல்வமே; அருட் பெருஞ் சோதி வடிவாகிய நடராசப் பெருமானாகிய தலைவனே வணக்கம். எ.று.

     சத்தரொடு சத்திகள் பொற்பொடு விளங்கி ஓங்கவும், சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்பவும், மெய்ஞ்ஞான சித்தி அனுபவநிலை தெளிந்திடவும் வயங்குகின்ற சுடரே என இயைக்க. சிற்றம்பலம் என்னும் சுகாதீத வெளிநடுவில் அண்ட பகிரண்ட கோடிகளையும் அவற்றிலுள்ள சராசரங்களையும் படைத்தல், காத்தல், ஒடுக்குதல் ஆகிய முத்தொழிலையும் செய்கின்ற சத்தி, சத்திமான்கள் விளங்குகின்றார்கள் என்பது கருத்து. படைத்தல் முதலிய முத்தொழில்களையும் இடையீடின்றிச் செய்தொழுகும் நிலைபெற்ற ஆற்ற லுடையராதல் பற்றி, “பொருள் நிலைச் சத்தரொடு சத்திகள்” என்றும், சத்தர்கள் எண்ணிறத்தவராதல் தோன்ற அவரவர்க் குரியராகிய சத்திகளும் எண்ணிறந்தவர் என்பது பற்றி, “சத்திகள் அனந்தம்” என்றும் உரைக்கின்றார். சத்தர்கள் சத்திமான்கள் என்றும் வழங்கப் படுவர். சத்திகளும் சத்திமான்களும் அண்டங்களின் தோற்ற வொடுக்கங்களுக்குக் காரணமாய் நின்று நிலவுவராதலால் இவர்கள் சிவ சுகாதீத வெளிநடுவில் நின்று விளங்குகின்றார்கள் என்பது விளங்க, “பொற்பொடு விளங்கி ஓங்க” எனப் புகழ்கின்றார். பொருட்கள் அகம் என்றும் புறம் என்றும், அகப்புற மென்றும், புறப்புறம் என்றும் வகுக்கப் படுவது போலச் சமயங்கள் அகம் என்றும், புறம் என்றும், அகப்புறம் என்றும், புறப்புறம் என்றும் வகுக்கப்படுவது போல் அண்ட பகிரண்ட கோடிகளும் சராசரங்களும் அகம் என்றும், புறம் என்றும், அகப்புறம் என்றும், புறப்புறம் என்றும் வகுக்கப்பட்டு, இவற்றின்கண் அணுப்புதைக்கவும் இடமின்றி, இவை யனைத்துமே தனக்கு முழுச் சரீரமாகக் கொண்டிருப்பது புலப்பட, இவற்றின் மேல் பூரணாகாரமாகி விளங்குவது சச்சிதானந்தமாகிய சிவகிரணங்கள் என்பது தோன்ற, “பூரணாகார மாகித் தெருள்நிலைச் சச்சிதானந்த கிரணாதிகள் சிறப்ப” எனத் தெரிவிக்கின்றார். பூரணாகாரம் - முழுத்த சரீரம். தெருட்சி யில்லாத மனத்தின்கண் மெய்ம்மையும் அறிவும் இன்பமும் விளக்கம் பெறாதாதலின், “தெருள் நிலைச் சச்சிதானந்த கிரணாதிகள்” என்று செப்புகின்றார். மெய்ம்மை சான்ற சிவஞானம் கைவரப் பெறும் நிலை மெய்ஞ்ஞான சித்தி எனப்படும். அஃது அஞ்ஞான்றும் முதல் ஈறின்றி நின்று திகழ்வதாதலின், “முதலந்தம் இன்றித் திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்தி” என்றும், கைவரப் பெற்ற ஞானானுபவம் சிவஞான சூரிய வெளியில் விளக்கம் பெறுவது என்றற்கு, “அனுபவ நிலை தெளிந்திட வயங்கு சுடரே” என்றும் போற்றுகின்றார். மகளிர்க்குத் தலைமுடி சுருண்டு இருத்தல் ஒருவகை அழகு தருதலின் உமாதேவியை, “சுருள்நிலைக் குழலம்மை” என்று சொல்லுகின்றார். இன்ப வடிவினளாதலின் ஆனந்தவல்லி என்றும், சிவத்துக்கு ஒத்த அழகு திகழ விளங்குதல் பற்றி, “சிவசுந்தரி” என்றும், இறைவனுக்குத் தேவியாதலின், இனிய துணையே” என்றும் இயம்புகிறார். சன்மார்க்கங்கள் பல கூறப்படுதலின் இஃது எனத் தெளிவித்தற் பொருட்டுச் “சிவ சன்மார்க்கம்” என்றும், அது தூய சிவஞானத்தால் பெறப்படுவது பற்றிச் “சுத்த சிவசன்மார்க்கம்” என்றும், அந்நெறி நின்றார் பெறக் கடவப் பெருஞ் செல்வமாதல் தோன்ற, “நிதியே” என்றும் பாராட்டுகின்றார். சிவத்தின் அருளொளியினும் பெருமை யுடையது பிறிது யாது மில்லாமை கண்டு “அருட் பெருஞ் சோதி” என்றும், அதுவே தில்லைக் கூத்தப் பெருமானுடைய அருள் ஞானத் திருமேனி என்றற்கு, “நடராச பதியே” என்றும் பராவுகின்றார்.

     இதனால், சிற்றம்பலம் என்னும் சிவ சுகாதீத வெளியில், மெய்ஞ்ஞான சித்தி அனுபவநிலைத் தெளிவுற விளங்குகின்ற சிவசூரியனும், சிவானந்தவல்லித் துணைவனும், சன்மார்க்க நிதியும், அருட்பெருஞ் சோதியும், தில்லை நடராசப் பெருமான் ஆவன் என்பதாம்.

     (1)