3654. மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது
மேன்மேற் கலந்துபொங்க
விச்சைஅறி வோங்கஎன் இச்சைஅறி வனுபவம்
விளங்கஅறி வறிவதாகி
உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந்
துவட்டாதுள் ஊறிஊறி
ஊற்றெழுந் தென்னையும் தானாக்கி என்னுளே
உள்ளபடி உள்ளஅமுதே
கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட
கண்ணே கலாந்தநடுவே
கற்பனைஇ லாதோங்கு சிற்சபா மணியே
கணிப்பருங் கருணைநிறைவே
துய்தழை பரப்பித் தழைத்தரு வேஅருட்
சுகபோக யோகஉருவே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராசபதியே.
உரை: உடல் தழைக்க, உள்ளம் குளிர்ச்சி யுற்று மகிழ்ச்சி குன்றாமல் மேன்மேலும் கலந்து பொங்கிட, வித்தை வழித் தோன்றும் அறிவு மேம்பட, என் இச்சை அறிவு ஆகியவற்றின் அனுபவம் விளக்கமுற, உளதாகும் உண்மை யறிவு அறிய வல்லதாய், உய்யும் நெறியைத் தந்நருளி எல்லாம் வல்ல சித்தினையும் தந்து, என் உள்ளத்துள் உவட்டாமல் மேன்மேலும் ஊறி, என்னையும் தானாக்கி என்னுள்ளே உளதாதற்குரிய முறைப்படி இருந்தருளும் சிவஞானாமிர்தமே: கை நிறைய வந்தருளும் வான் கனியே; எல்லாப் பொருளையும் காண வல்ல ஞானக் கண்ணே, கலைகள் எல்லாவற்றிற்கும் முடிவிடத்து நடுநின்று திகழும் மாணிக்க மணியே; அளந்து காண்டற் கரிய கருணையின் நிறைவிடமே; தூய்மையாகிய தழைகளைப் பரப்பிக் குளிர்ந்த நிழலைத் தரும் அருள் மரமே; திருவருள் ஞானத்தால் சுகபோகத்தை ஒன்று யிருந்து காட்டும் ஞானத் திருவுருவே; சுத்த சிவ சன்மார்க்கச் செல்வமே; அருட் பெருஞ் சோதியாகிய நர்ராச பதியே வணக்கம். எ.று.
விச்சை யறிவு, கல்வி கேள்விகளால் உண்டாகும் செயற்கை யறிவு. இச்செயற்கை யறிவோடு உயிரின் இயற்கை யறிவு கலக்க உளதாவது உண்மை யறிவு. அதுவே உயிரின் அறிவாற்றலாய்த் திகழ்வதாதலால் அந்த அறிவியல் விளங்க, “விச்சை அறிவு ஓங்க என் இச்சை அறிவனுபவம் விளங்க” என வுரைக்கின்றார். இந்த உண்மை யறிவால் பிறக்கும் இன்பத்தை “மெய் தழைய உள்ளம் குளிர்ந்து உவகை மாறாது மேன்மேற் கலந்து பொங்க” என்று கூறுகின்றார். இங்ஙனம் செயற்கையும் இயற்கையுமாய் இயைந்து ஒன்றாய் அமைவது மெய்யறிவு. அந்த அறிவு கைகூடின வழி, அறியத் தகுவனவற்றை உள்ளவாறு இனிதறியும் ஆற்றல் உளதாகலின், “அறிவறிவதாகி” எனக் குறிக்கின்றார். அது தானும் திருவருளால் கைவருவதாதலின், சிவத்தின் செயலாக்கி “அறிவறிவதாகி” எனத் தெளிவிக்கின்றார். இங்ஙனம் அறிவறிவதாகி எல்லாம் வல்ல சித்தினைத் தந்து இன்பம் பெருக்கித் தானாக்குவது சிவஞானத்தின் சிறப்பாதலின், “அறிவறிவதாகி உய்தழை வளித்தெலாம் வல்ல சித்து அது தந்து உவட்டாது உள்ளூறி ஊறி ஊற்றெழுந்து என்னையும் தானாக்கி என்னுளே உள்ளபடி யுள்ள அமுதே” என்று இயம்புகின்றார். உய்தழைவு அளிப்ப தாவது உய்தி பெறுதற்குரிய ஆற்றலை நல்குதல். உலகியல் மயக்கமும் மலப் பிணிப்பும் இடை புகுந்து செய்யும் தடைகளை உடைத்தெறிதற் கேற்ற, ஆன்ம சத்தியை அளித்தருளும் நலத்தை, “எலாம் வல்ல சித்தது தந்து” என்றும், தடை யகன்ற வழிப் பிறக்கும் இன்ப நிலையை “உவட்டாது உள் ஊறி ஊறி ஊற்றெழுந்து” என்றும் உரைக்கின்றார். ஊற்றெழுந்து பெருகும் ஞான வின்பத்தால் கரணத் திரள் அனைத்தும் சிவ மயமாதலின், “என்னையும் தானாக்கி என்னுள்ளே உள்ளபடி உள்ள அமுதே” என்று உவகை மிகுந்து உரைக்கின்றார். அந்நிலையில் திருவருட் சுகானுபவம் கைவந் தமைதலின், “கை தழைய வந்த வான் கனியே” எனவும், அங்குக் காணாத பலவும் காண்டலின், “எலாம் கண்ட கண்ணே” எனவும் இயம்புகின்றார். காட்சி யனைத்தும் கலைக் கடலின் முடிவாய் அவற்றின் நாடு நின்று திகழ்தலின், “கலாந்த நடுவே” எனக் கூறுகின்றார். கலாந்தம், கலைகளின் முடிவு. தத்துவக கலைகளின் முடி வெனினும் அமையும். காட்சிக் கெட்டாததுகற்பனைக் கிடமாவ தாதலின், கண் குளிரக் கண்டு மகிழ விளங்கும் ஞான சபையை, “கற்பனை யிலாது ஓங்கு சிற்சபா மணியே” என வுரைக்கின்றார். அளத்தற் கரிய பெருங் கருணைப் பெருமானாதலால், “கணிப்பரும் கருணை நிறைவே” எனவும், தூய்மை உருவமாதலின் “துய்தழை பரப்பி தழைத்த தருவே” எனவும் கூறுகின்றார். “தூய வுடம்பினன்” என்றே சிவாகமங்களும் சொல்லுகின்றன. அருட் சத்தியோடு கூடி யுறையும் மாதொரு பாகனாகிய திருமேனியை “அருட் சுகபோக யோக உருவே” என உரைக்கின்றார். “நல்லூர் பெருமணத்தான் நல்ல போகத்தன் யோகத்தையே புரிந்தான்” (நல்லூர்) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க.
இதனால், அறிவ தறியும் அறிவு தந்து தானாக்கி உள்ளே உள்ளபடி எழுந்தருளும், சிவ பரம்பொருளின் சீர்த்த நலம் தெரிவித்தவாறாம். (4)
|