3657.

     நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற
          நிலையிலே நுண்மைதனிலே
     நிகழ்விலே நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே
          நெகிழிலே தண்மைதனிலே
     ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும்
          ஒண்சுவையி லேதிரையிலே
     உற்றநீர் கீழிலே மேலிலே நடுவிலே
          உற்றியல் உறுத்தும்ஒளியே
     காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக்
          கருணைமழை பொழிமேகமே
     கனகசபை நடுநின்ற கடவுளே சிற்சபைக்
          கண்ணோங்கும் ஒருதெய்வமே
     தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற
          சுகசொருப மானதருவே
     சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
          சோதிநட ராசபதியே.

உரை:

     நீரினிடத் துளதாகும் நிறைவிலும், நிறைவின்கண் பொருந்திய நிலையிலும், நீரினிடத் துள்ள நுண்மைத் தன்மையிலும், அதன்கண் நிகழ்கின்ற தெளிவிலும், தெளிவினிடத் துளதாகும் ஒளியிலும் நீர் வெளிப்படுத்தும் நிழலிலும், அதன் நெகிழ்விலும், அதன் தட்பத்திலும், ஊர்களிடத்துள்ள நீரின்கண் நிறைந்திருக்கும் உப்பிலும், உப்பு நல்கும் ஒள்ளிய சுவையிலும், நீர் மேல் தோன்றுகின்ற அலைகளிலும், அவற்றின் கீழும் மேலும் நடுவிலும் பொருந்தத் தோற்றம் செய்யும் ஒளிப் பொருளே; கார் மேகங்கள் கூடி ஒருகோடி அளவு மழை பொழியினும் ஒப்பாகாத கருணையாகிய மழையைப் பொழிகின்ற அருள் மேகமாகியவனே; பொற் சபையின் நடுநின்று ஆடுகின்ற கடவுளே; ஞான சபைக்கண் விளங்குகின்ற ஒப்பற்ற தெய்வமே; அடிப் பகுதியிலே கிளைக்கின்ற தூரின்கண் பழம் கனிந்து உள்ளூரில் விளங்குகின்ற இன்ப வடிவமான பழுமரமே; சுத்த சிவ சன்மார்க்கச் செல்வமே; அருட்பெருஞ்சோதியாகிய நடராசப் பெருமானே வணக்கம். எ.று.

     சென்ற விடமெல்லாம் நிறைவுற்று நிற்கும் நிலையினை யுடையது தண்ணீராதலால், “நீருற்ற நிறையிலே நிறையுற்ற நிலையிலே” எனக் கூறுபடுத் துரைக்கின்றார். தனக்கென ஒரு நிறமோ வடிவமோ சுவையோ யின்றி நுண்ணிதாக யிருத்தலால் தண்ணீரின் நுண்மைத் தன்மையை, “நுண்மை தனிலே” என எடுத்து நவில்கின்றார். நிலத்தின் அடியிலும் மேலும் இடையிலும் எங்கும் இருப்பது பற்றித் தண்ணீரின் இயல்பை, “நிகழ்விலே நிகழ்வுற்ற நிகழ்விலே” என்று தெரிவிக்கின்றார். எங்கும் நிறைவதாயினும் நிகழு மிடத்தெல்லாம் தனது ஒளியைக் காட்டுதலின் நீரின் ஒளியை, “நிகழ்வுற்ற திகழ்வு” எனச் செப்புகின்றார். நீர் நிகழ்வது துளியாயினும் அதனிடத்து ஒளியிலும், அவ்வொளியிடத்து நிழலும், அந்நிழலின்கண் நெகிழ்வும் காணப்படுதலின், “நிகழ்வுற்ற திகழ்விலே நிழலிலே நெகிழிலே” என வுரைக்கின்றார், தட்பம் அதற்குப் பண்பாதலால், அது நீங்காமை பற்றித் “தண்மை தனிலே” எனச் சாற்றுகின்றார். தனக்கென ஒரு சுவையுடைய தில்லையாயினும் தான் நிகழும் நிலத் துப்பினைத் தான் கொண்டு உப்புடையதாய், அவ்வுப்புத் தானும் தனக்கென ஒரு சுவை யுடையதாகலின் அந்நீரின் “உப்பிலே உப்பிலுறும் ஒண்சுவையிலே” என்று மொழிகின்றார். நிலைத்த நீரின்கண் காற்றால் அலைகள் எழுதலின் அதனைத் “திரை” என்று குறிப்பிடுகின்றார். அலைகட்குக் கீழும் மேலும் நடுவிலும் அமைந்த ஒவ்வொரு துளியிலும் ஒளி யுண்மையின், “உற்றியல் உறுத்தும் ஒளியே” என நவில்கின்றார். நீரின் நிறையிலும், நிலையிலும், நுட்பத்திலும், நிகழ்ச்சியிலும், நெகிழ்ச்சியிலும், தண்மையிலும், நீரிடத் தமையும் உப்பிலும், உப்பின் சுவையிலும், அலையிலும் பிறவற்றிலும் உள்ளுற்று அதன் இயல்பு விளங்கச் செய்யும் பரவொளியை, “இயல் உறுத்தும் ஒளியே” எனக் கூறுகின்றார். இறைவனது கருணை மிகுதியைப் புலப்படுத்துதற்கு, “காரிலே ஒருகோடி பொழியினும் துணை பெறாக் கருணை மழை பொழி மேகமே” எனப் புனைந் துரைக்கின்றார். கனக சபை, பொற்சபை. சிற்சபை, ஞான சபை. “உள்ளூர்ப் பழுமரம் பழுத்தற்றால்” என்ற திருக்குறளை நினைவிற் கொண்டு, “தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற தருவே” என விதந்துரைக்கின்றார். தூர், அடிப் பகுதி. பலம், பழம். ஞான வானந்த வடிவம் என்பது பற்றிச் சிவ பரம்பொருளை, “சுக சொருபமான தருவே” எனச் சுட்டுகின்றார். அருட் சோதிப் பெருந் தெய்வமாதல் பற்றி நடராசப் பெருமானை, “அருட் சோதி நடராச பதியே” எனப் புகழ்கின்றார்.

     இதனால், நீருற்று இயலுறுத்தும் ஒளியாகவும், கருணை மழை பொழியும் மேகமாகவும், கனக சபைக் கடவுளாகவும், ஞான சபைத் தெய்வமாகவும், சுக சொருபமான தருவாகவும், சன்மார்க்க நிதியாகவும், அருட் பெருஞ் சோதி நடராசப் பெருமான் விளங்குகின்றார் என்பதாம்.

     (7)