3659.

     அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின்
          ஆதிநடு அந்தத்திலே
     ஆனபல பலகோடி சத்திகளின் உருவாகி
          ஆடும்அதன் ஆட்டத்திலே
     உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின்
          உற்றபல பெற்றிதனிலே
     ஓங்கிஅவை தாங்கிமிகு பாங்கினுறு சத்தர்கட்
          குபகரித் தருளும்ஒளியே
     குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம்
          கோடிகிர ணங்கள்வீசிக்
     குலஅமுத மயமாகி எவ்வுயி ரிடத்தும்
          குலாவும்ஒரு தண்மதியமே
     துறைநின்று பொறைஒன்று துயர்அறி வாற்கண்ட
          சொருபமே துரியபதமே
     சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
          சோதிநட ராசபதியே.

உரை:

     மோதுகின்ற காற்றிலும், காற்றின் சுவையிலும், அதன் முதல் இடை கடை பகுதிகளிலும், உளவான பல கோடிச் சத்திகளின் உருவுடையதாய் அக்காற்று அசைந்தாடுகின்ற ஆட்டத்தி லுள்ள நிலையிலும், எழுச்சியிலும், காற்றின் பல்வேறு தன்மைகளிலும் உயர்ந்நிலையிலும், எழுச்சியிலும், காற்றின் பல்வேறு தன்மைகளிலும் உயர்ந்தோங்கி அவை யனைத்தையும் தாங்கிக் காற்றின் பக்கல் உறையும் சத்திமான்களாகிய தேவர்களுக்கு உதவி யருளும் ஒளிப் பொருளே; நாளும் குறைகின்ற இயல்புடைய சந்திரன் கண்டு நாணும்படி ஆயிரம் கோடிக் கிரணங்களை வீசுகின்ற உயர்ந்த அமுத மயமாய் எல்லா உயிரிடத்தும் பொருந்துகின்ற குளிர்ந்த ஞான மதியமே; அறத்துறையில் நின்று பொறுமையை மேற்கொண்டு, தமது ஞானத்தால் தூயவர்களால் காணப்பட்ட உண்மை சொருபப் பொருளே; துரிய பதத்தில் விளங்குகின்ற பெருமானே; சுத்த சிவ சன்மார்க்கச் செல்வமே; அருட் பெருஞ் சோதியாகிய நடராச பதியே வணக்கம். எ.று.

     காற்றினிடத்துச் சுவை யுண்மை பற்றிக் “காற்றுப்பிலே” எனவும், காற்றுக்கும் முதல், இடை, கடை என்ற பகுதி யுண்டாதல் பற்றிக் “காற்றின் ஆதி நடு அந்தத்திலே” எனவும், காற்றின் ஒவ்வொரு கூற்றிலும் மாயையின் சடசத்தி வகையோடு அருட் சத்தி வகைகளும் அடங்கி யிருத்தல் தோன்ற, “பல பல கோடி சத்திகளின் உருவாய்” எனவும் உரைக்கின்றார். ஊக்கம் - எழுச்சி. இச்சத்திகளின் வேறாய் மிகப் பல தன்மைகள் காற்றிற்கு இருத்தலால் அவற்றையும் சத்திகளோடு சேரத் தாங்குவது சத்திமான்களாகிய தேவர்களின் செயல் அல்லது இனிது நடைபெறுதல் பொருட்டுச் சிவத்தின் அருளொளி அவையனைத்தையும் தாங்கி யருளுகின்ற பெருமை விளங்க, “காற்றின் உற்ற பல பெற்றி தனிலே ஓங்கி அவை தாங்கி மிகு பாங்கினுறு சத்தர்கட்கு உபகரித் தருளும் ஒளியே” என வுரைக் கின்றார். யோகக் காட்சி யுடையார்க்குத் தோன்றும் ஞான அமுதச் சந்திரன் உருவாய்க் காட்சி தருதல் பற்றி, “குறைகின்ற மதி நின்று கூச ஓர் ஆயிரம் கோடி கிரணங்கள் வீசிக் குல அமுத மயமாகி எவ்வுயிரிடத்தும் குலாவும் ஒரு தண் மதியமே” எனப் பாடுகின்றார். துறை என்றது சிவஞான ஆனந்தம் பெறமுயலும் நெறி. அந்நெறிக்கண் நிற்போர் பொறையும் நிறையும் அறிவுமாகிய நலமனைத்தும் பெற்ற ஞானவான்களாய்த் தங்கள் ஞானக்காட்சியால் துரியா வத்தைகள் காண நிற்கும் பரம்பொருளை, “துறை நின்று பொறை ஒன்று தூயர் அறிவாற் கண்ட சொருபமே துரிய பதமே” என்று சொல்லுகின்றார்.

     இதனால், சத்தர்களுக்கு உபகரித் தருளும் ஒளியாய், தண்மதியமாய், சொருபமாய், துரியபதமாய், சன்மார்க்க நிதியாய், அருட் பெருஞ்சோதியாய் விளங்குபவன் நடராச பதி என்பதாம்.

     (9)