3660.

     வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு
          வத்திலே வான்இயலிலே
     வான்அடியி லேவானின் நடுவிலே முடியிலே
          வண்ணத்தி லேகலையிலே
     மானிலே நித்திய வலத்திலே பூரண
          வரத்திலே மற்றையதிலே
     வளரனந் தானந்த சத்தர்சத் திகள்தம்மை
          வைத்தஅருள் உற்றஒளியே
     தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித்
          திரளிலே தித்திக்கும்ஓர்
     தித்திப்பெ லாங்கூட்டி உண்டாலும் ஒப்பெனச்
          செப்பிடாத் தெள்ளமுதமே
     தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த
          சொருபமே சொருபசுகமே
     சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
          சோதிநட ராசபதியே.

உரை:

     வானத்திலும், வானத்திற் கமைந்த இட வாய்ப்பிலும், அதன் அருவி நிலையிலும், இயலும் இயலிலும், வானத்தின் அடி நடு முடிகளிலும், வண்ணத்திலும், கலை முதலிய அத்துவாக்களிலும், அவற்றின் மூல காரணமாகிய மானாகிய தத்துவத்திலும், அதன் நிச்சயத்தன்மையிலும், பூரண அமைதியிலும், மற்றும் அதன்கண் பெருகுகின்ற எண்ணிறந்த ஆனந்த உருவினரான சத்திமான்களையும் சத்திகளையும் வைத்து அருள் புரிகின்ற ஒளிப் பொருளே; தேன் பால் சர்க்கரை முதலியவற்றிலும் பலவகைக் கனி வகைகளிலும் நிறைந்து இனிக்கும் இயல்புடைய தித்திக்கும் சுவையெலாம் கூட்டி யுண்டாலும் ஒப்பாம் எனச் சொல்லுதற் கொண்ணாத தெளிந்த சிவாமிர்தமே; தூய நிலா வொளியின் உள்ளே நிறைந்தோங்கும் ஆனந்த சொரு பமே; அச்சொருபத் தரிசனத்தால் பெறப்படும் சுகமே; சுத்த சிவ சன்மார்க்கத்தின் செல்வமே; அருட் பெருஞ் சோதியாகிய நடராச பதியே வணக்கம். எ.று.

     ஐம்பூதங்களில் ஒன்றாகிய வானத்தின் ஆழம் உயரம் பெருக்கம் ஆகியவற்றிற்கு இடமாகியதனை, “வானுற்ற வாய்ப்பு” என மொழிகின்றார். அருவமாய், சத்த குணமாய் இயல்வது பற்றி, “வானின் அருவத்திலே இயலிலே” என மொழிகின்றார். வானத்தின் அடியிலும், நடுவிலும், முடிவிலும் வேறுபட்டுத் தோன்றுகின்ற வண்ண வகைகளை, “வானடியிலே வானின் நடுவிலே முடியிலே வண்ணத்திலே” என வகுத்துரைக்கின்றார். வானமாகிய தத்துவத்தில் உள்ள கலை, புவனம், வித்தை, வண்ணம், பூதம், மந்திரம் ஆகியவற்றையும், அவற்றிற்கு மூல காரணமாகிய மான் என்னும் தத்துவத்தையும் அதன் நித்தியத் தன்மையிலும் பூரண நிறைவிலும் எண்ணிறந்த சத்திமான்களும் சத்திகளும் இன்ப வுருவினராய் இயங்குதல் பற்றி, “வளர் அனந்த ஆனந்த சத்தர் சத்திகள்” என்றும், அவர்களை ஆங்காங்கு ஒளி யுருவினராய் உலாவுவித்தல் பற்றி, “வைத்த அருள் உற்ற ஒளியே” என்றும் உரைக்கின்றார். சிவ தியானத்தில் ஊறுகின்ற ஞான அமுதத்தை அனுபவித்துரைக்கின்றாராதலின், “தேனிலே பாலிலே சர்க்கரையிலே கனித்திரளிலே தித்திக்கும் ஓர் தித்திப் பெலாம் கூட்டி யுண்டாலும் ஒப்பெனச் செப்பிடாத் தெள் ளமுதமே” எனப் பராவுகின்றார். துவாத சாந்தத்தில் தோன்றுகின்ற பூரண சந்திரனது ஒளியிடத்துக் காணப்படும் சொருபானந்தத்தை, “தூ நிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த சொருபமே சொருப சுகமே” என்று சொல்லுகின்றார்.

     இதனால், வானத்திலும், அதற்கேதுவாகிய ‘மான்’ என்ற தத்துவத்திலும், பெருகி யிருக்கும் சத்தர் சத்திகளுக்கு ஒளியாய் ஒளி நல்குபவனும், தெள்ளமுதமும், ஆனந்த சொருபமாயும் சொருப சுகமாயும் அருட் பெருஞ் சோதியாயும் விளங்குபவன் நடராசப் பெருமான் என்று தெரிவித்தவாறாம்.

     (10)