3661.

     என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே
          இயல் உருவி லேஅருவிலே
     ஏறிட்ட சுடரிலே சுடரின்உட் சுடரிலே
          எறிஆத பத்திரளிலே
     ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே
          ஒளிஒளியின் ஒளிநடுவிலே
     ஒன்றாகி நன்றாகி நின்றாடு கின்றஅருள்
          ஒளியேஎன் உற்றதுணையே
     அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன்
          அய்யனே அரசனேஎன்
    அறிவனே அமுதனே அன்பனே இன்பனே.
          அப்பனே அருளாளனே
     துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே
          தூயனே என்நேயனே
     சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
          சோதிநட ராசபதியே.

உரை:

     வெயில் ஒளியைச் செய்கின்ற சூரியனினும், அதன் சொருபத்திலும், அதற்கியன்ற உருவத்திலும், அதனுடைய அருவ நிலையிலும் எங்கும் செலுத்துகின்ற அதன் கிரணத்திலும், அக்கிரணத்தின் உள்ளே நிலவுகின்ற சுடரிலும், எங்கும் பரப்புகின்ற அதன் பகல் ஒளியிலும், அதன்கண் குவிந்து ஒன்றுகின்ற ஒளியிலும், ஓங்குகின்ற அதன் ஒளியின் ஒளியிலும், அவ்வொளியின் நடுவிலும், ஒன்றாகவும் நன்றாகவும் நின்றாடல் புரிகின்ற, அருளொளியாகிய சிவமே; எனக்குற்ற துணைவனே; அன்றொரு நாள் இரவுப் போதில் என்பால் வந்து, எனக்கு அருளொளி வழங்கிய என் ஐயனே; அருளரசனே; எனக்கு அறிவு நல்குபவனே; அமுத மயமானவனே; எனக்கு அன்பனே; இன்பம் தருபவனே; என் தந்தையே; அருளாளனே; என் உடற்கண் நிறைந்த என் உயிர்க்கு இனியவனே; ஒப்பற்றவனே; தூயனே; எனக்கு நேசனே; சுத்த சிவ சன்மார்க்கச் செல்வனே; அருட் பெருஞ் சோதியாகிய நடராச பதியே வணக்கம். எ.று.

     என்று - பகலொளி. இதனை என்றூழ் எனவும் வழங்குவர். என்றாகிய “என்றிரவு” என வந்துள்ளது. ஒளியே தனக்கு உருவாக அமைந்ததாதலால், அதுவே சூரியனுக்கு உண்மைச் சொருபமும் உருவுமாதலால், “இரவி சொருபத்திலே இயல் உருவிலே” எனப் பிரித் தோதுகின்றார். உருவப் பொருளுக்கு அருவமாம் இயல்பும், அருவப் பொருளுக்கு உருவமாம் இயல்பும் இயற்கையிலுளவாதல் பற்றி, “இரவி அருவிலே” என்றும், அதனிடத்து மேலோங்கி எழுகின்ற ஒளிக்கதிர்களை, “ஏறிட்ட சுடர்” என்றும், அவை கம்பி போல் நீண்டு ஓங்குமிடத்து அவற்றை ஊடுருவிச் செல்கின்ற ஒளியை, “உட் சுடர்” என்றும், சூரிய ஒளியின் திரட்சியை “ஆதபத் திரள்” என்றும் உரைக்கின்றார். ஆதபம் - பகல் வெயில். சூரியனது ஒளிக்கு ஒடுங்குவதும் விரிவதும் இயல்பாயினும் ஓங்குமிடத்து ஒளி பெருகுதலின், “ஓங்கொளியின் ஒளியிலே ஒளியொளியின் ஒளி நடுவிலே” என ஒளித் திரளை நுணுகிப் பகுத்து, “ஒளி ஒளியின் ஒளி நடுவிலே” என உரைக்கின்றார். அந்த ஒளி நடுவில் உள்ளிருந்து ஊக்கிப் பரப்பும் ஒளியின் நடுவின்கண் ஒன்றாயும் நன்றாயும் நின்றாடல் புரிகின்றது பரவொளி என்றற்கு, “ஒன்றாகி நன்றாகி நின்றாடுகின்ற அருளொளியே” என்று சிவத்தைக் குறிக்கின்றார். உற்றவிடத்து உறுவது அறிந்து உதவுவதே உறுதுணையாகலின், அதனைப் புரியும் சிவபெருமானை, “உற்ற துணையே” என வுரைக்கின்றார். ஒரு நாளிரவின் போது, அருள் ஞானம் புரிந்த நலத்தை எடுத்து மொழிகின்றாராதலால், “அன்றிரவில் வந்து எனக்கு அருள் அளித்த என் ஐயனே” என மொழிகின்றார். அறிவுருவானவன் என்றற்கு, “அறிவனே” என்றும், அமுத மயமாய் மகிழ்வித்தலின், “அமுதமே” என்றும், அன்பு செய்து இன்பம் பெருகுவித்தலின், “அன்பனே இன்பனே” என்றும் கூறுகின்றார். உலக மெங்கும் பரந்து உயிர்க் குயிராகிய சிவன் உறைதற்கு இனிய இடமாதலின், “துன்றிய என் உயிரினுக்கு இனியனே” என்று போற்றுகின்றார்.

     இதனால், பிறவியின் கூறுகளில் சொருபம் உருவம் முதலாகிய கூறுகளில், நிலவும் ஒளி நடுவிலே ஒன்றாய் நன்றாய் நின்றாடுகின்ற அருளொளியாய், உற்ற துணைவனாய், அறிவனாய், அமுதனாய், அருளாளனால், உயிரினுக் கினியனாய், தூய நேயனாய் விளங்குபவன் அருட் பெருஞ் சோதியாகிய நடராச பதி என்பதாம்.

     (11)