3662. அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே
அவ்வுருவின் உருவத்திலே
அமுதகிர ணத்திலே அக்கிரண ஒளியிலே
அவ்வொளியின் ஒளிதன்னிலே
பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே
பக்கநடு அடிமுடியிலே
பாங்குபெற ஓங்கும்ஒரு சித்தேஎன் உள்ளே
பலித்தபர மானந்தமே
மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு
வாழ்வே நிறைந்தமகிழ்வே
மன்னேஎன் அன்பான பொன்னேஎன் அன்னேஎன்
வரமே வயங்குபரமே
துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு
துரியமே பெரியபொருளே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராசபதியே.
உரை: அழகிய சந்திரனிலே, அதன் அருவ உருவங்களிலே, அவ்வுருவுகளின் உருவிலே, அதனிடத்து ஊறுகின்ற அமுத கிரணங்களிலே, அக்கிரணங்களின் ஒளியிலே, அவ்வொளியிடத்து ஒளிரும் ஒளியிலே; வளைந்த அதன் அமுதிலே, அந்த அமுதிடத்து உள்ள இனிப்பிலே, அதன் பக்கம் நடுவிடம் அடிப்பகுதி முடிவிடம் ஆகிய அதன் இடமெங்கும் விளக்கமுறுகின்ற சித்துப் பொருளே; என் உள்ளத் துணர்விற்குக் கிடைத்த மேலான ஆனந்தமே; மணிகளின் ஒளியில் நடன மிடுகின்ற அருளொளியே; என்றும் நிலையா யுள்ளதொரு பேரின்ப வாழ்வே, நிறைந்த மகிழ்ச்சி தரும் பொருளே; எனக்கு மன்னவனே; எனக்கு அன்பான பொன்னே; எனக்கு அன்னையே; எனக்கு மேலானதாய் விளங்குகின்ற பரம்பொருளே; தெளிந்த சந்திரவொளியில் இன்ப அனுபவப் பொருளாய் இருந்தருளும் உருவே; துரியத்தில் காட்சி தரும் பிரமப் பொருளே; சுத்த சிவ சன்மார்க்கச் செல்வமே; அருட் பெருஞ் சோதி யுருவாகிய நடராச முதல்வனே! வணக்கம். எ.று.
இயல்பிலே அழகுடையதாதலின், சந்திரனை “அணி மதி” என்று புகழ்கின்றார். சூரியனுக்குப் போலச் சந்திரனுக்கும் அருவமும் உருவமும் உண்டாதலின், “அவ்வுருவின் உருவத்திலே” எனக் குறிக்கின்றார். சந்திரனது உருவத்திலே ஒழுகுகின்ற கிரணம், அமுத மயமானது என்பது பற்றி, “அமுத கிரணத்திலே” என்றும், அந்தக் கிரண ஒளிக்குள் ஒளிருகின்ற ஒளியின்கண், அமுது உளதாகிறது என்பது தோன்ற, கிரண ஒளிக்கு ஒளியாகிய ஒளியின்கண் அமுது தங்குவதாகவும் இனிப்புடையதாகவும் விளக்குதற்கு, “ஒளி தன்னிலே பனிமதியின் அமுதிலே அவ்வமுது இனிப்பிலே” என்றும், அதன் பாங்கர் எங்கும் சித்தாந்தன்மை திகழ்கின்ற தென்பதற்கு, “பக்க நடு அடி முடியிலே பாங்கு பெறவோங்கு மொருசித்தே” என்றும், அச்சித்துப் பொருண்மையின் இன்பமும் உள்ளத்தே உணரப்படுதலால், “உள்ளே பலித்த பரமானந்தமே” என வுரைக்கின்றார். பளிங்கு மணியின் ஒளியில் திகழும் இன்பவொளியைச் சிவமாகக் கருதுகின்றாராதலின், “மணி ஒளியில் ஆடும் அருளொளியே” என வுரைக்கின்றார். உலகியல் இன்பம் போல நிலையாமையும் குறை யுடைமையும் கொண்டது சிவபோக மன்று என்பது பற்றி, “நிலைத்த பெருவாழ்வே நிறைந்த மகிழ்வே” என இயம்புகின்றார். தான் கருதுவன வனைத்திற்கும் விளங்குகின்ற பரமாதல் பற்றி, “என் வரமேவயங்கு பரமே” எனச் சொல்லுகின்றார். என் வரமே என்றும் வயங்கு பரமே என்றும் பிரித்துக் கூறுதலும் ஒன்று. துணி மதி - தெளிந்த மதி யொளி; தெளிந்த ஞான வொளியுமாம். ஞானப் பேரறிவின்கண் அனுபவப் பொருளாய்த் துரியக் காட்சியில் புலனாவது தோன்ற, “துணி மதியில் இன்ப அனுபவமாய் இருந்த குரு துரியமே” என்று கூறுகின்றார். பிரமப் பொருள் என உபநிடதம் கூறுவதை, “பெரிய பொருள்” எனத் தமிழில் மொழி பெயர்த்து மொழிந்தார்.
இதனால், மதி யொளியில் ஓங்கும் ஒரு சித்தாய், பரமானந்தமாய், அருளொளியாய், நிலைத்த பெருவாழ்வாய், நிறைந்த மகிழ்வாய், இன்ப அனுபவமாய், துரியமாய், பெரிய பொருளாய் விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி வடிவானது நடராசத் திருவுருவம் என்று தெரிவித்தவாறாம். (12)
|