3663. அண்டஒரு மையப்பகுதி இருமையாம் பகுதிமேல்
ஆங்காரி யப்பகுதியே
ஆதிபல பகுதிகள் அனந்தகோ டிகளின்நடு
அடியினொடு முடியும் அவையில்
கண்டபல வண்ணமுத லானஅக நிலையும்
கணித்தபுற நிலையும்மேன்மேல்
கண்டதிக ரிக்கின்ற கூட்டமும் விளங்கக்
கலந்துநிறை கின்றஒளியே
கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட
குறியே குறிக்கஒண்ணாக்
குருதுரிய மேசுத்த சிவதுரிய மேஎலாம்
கொண்டதனி ஞானவெளியே
தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற
சுகயோக அனுபோகமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராசபதியே.
உரை: அண்டப் பகுதியென்றும், பகிரண்டப் பகுதி யென்றும் இருவகையாகப் பேசப்படும் பகுதிகளுக்கு, மேல் பூதாதி யாங்காரப் பகுதி முதலியவாகப் பேசப்படும் எண்ணிறந்த அண்ட கோடிகளின் நடுவிலும், அடியிலும், முடியிலும், அவற்றிடையே காணப்பட்ட பல வண்ணம், வடிவம் முதலான அந்நிலையும், அவற்றிற்கு மேலாகக் கணிக்கப்பட்ட புறநிலையும், அவற்றிற்கு மேன்மேலும் காணப்பட்டு மிக்குற்று இருக்கின்ற கூட்டங்களும் இனிது விளங்கி அவற்றிடையே கலந்து குறைவற நிறைந்திருக்கின்ற ஒளிப் பொருளே; கால இடங்கள் தோறும் வேறு வேறாகக் கொண்ட கோலமே; அக்கோலத்திற் கேற்ற குணமே; குணத்திற் கொப்ப அமைந்த குறியே; குறிக்க வொண்ணாத பெரிய துரியப் பொருளே; சுத்த சிவ துரியமே; எல்லாப் பொருட்களையும் தன்கண் கொண்ட ஒப்பற்ற ஞானப் பரவெளியே; தொண்டர்களின் இதயத்திலே கற்கண்டு போலினிக்கின்ற சுகயோக அனுபவப் பொருளே; சுத்த சிவ சன்மார்க்கச் செல்வமே; அருட்பெருஞ் சோதியாகிய நடராச பதியே வணக்கம். எ.று.
கீழ் மேலாக நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்த அண்டப் பகுதிகளை, அண்டம் பகிரண்டம் என இரண்டாகப் பகுத்துக் காண்பது பற்றி, “அண்ட ஒருமைப் பகுதி இருமையாம் பகுதி” என வுரைக்கின்றார். இவற்றிற் கெல்லாம் முதற் காரணம் பூதாதியாங்காரமாகலின், “ஆங்காரியப் பகுதியே” என அறிவிக்கின்றார். இப்பூதாதி யாங்காரத்தின் நுண்ணிப் பகுதி தைசதாங்காரம் என அறிக. இப் பகுதிகள் எண்ணிறந்தனவாகலின், “ஆங்காரியம் பகுதியே ஆதி பல பகுதிகள் அனந்த கோடிகள்” என வுரைக்கின்றார். இவற்றின் தொகை வகைகளையும் விரிவுகளையும் சிவதருமோத்திரம், கந்த புராண அண்ட கோச அடுக்குப் படலம் முதலியவற்றில் பரக்கக் காணலாம். இவ்வண்டல்களின் அகநிலையும் பிறநிலையும் பல்வேறு வண்ணம், வடிவு, பண்பு முதலிய இயல்புகளைக் கொண்டிருத்தல்பற்றி, “நடு அடியினொடு முடியும் அவையில் கண்ட பல வண்ண முதலான அகநிலையும் கணித்த புறநிலையும்” எனவும், இவ்வியல்புகள் அண்டங்கள் தோறும் பெருகி இருக்கின்றமை பற்றி, “மேன்மேல் கண்டு அதிகரிக்கின்ற கூட்டமும்” எனவும், இவ்வழி நுண்ணிய கற்பனைக்கண் கொண்டு காண்பார்க் கல்லது புலனாகாமை பற்றி, “விளங்கக் கலந்து நிறைகின்ற ஒளியே” எனவும் இயம்புகின்றார். இவ்வண்டப் பகுதிகளில் கலந்து நிற்கும் பரவொளி அண்டங்களில் இடந்தோறும் காலந் தோறும் வேறு, வேறு கோலம் கொண்டு தோன்றுதல் புலப்பட, “கொண்ட பல கோலமே” என்றும், கோலங் கொள்ளும் பொருட்குரிய குணங் குறிகளாகவும் குறிக்க வொண்ணாததாகவும் துரியக்காட்சியில் அறியக் கூடியனவாகவும் இருத்தல் பற்றி, “குணமே குணங் கொண்ட குறியே குறிக்க வொண்ணாக் குருதுரியமே” என்றும் கூறுகின்றார். இவை யெல்லாம் சேரக் காண்டற்கு அமைந்தமை பற்றித் துரியக் காட்சியை, “சுத்த சிவ துரியமே” எனத் தெரிவிக்கின்றார். இக்காட்சி யனைத்தும் ஞானப் பரவெளியில் விளங்கக் கண்டமை புலப்பட, “எலாம் கொண்ட தனிவெளியே” என விளம்புகின்றார். சிவஞானிகளான தொண்டர்களின் இதயத்தில் எழுந்தருளி, இன்பம் செய்தல் பற்றி அந்த இன்பானுபவத்தை, “தொண்டர் இதயத்திலே கண்டென இனிக்கின்ற சுகயோக அனுபோகமே” என இயம்புகின்றார்.
இதனால், அண்டக் கூட்டங்கள் இனிது விளங்க, அவற்றில் கலந்து நிறைகின்ற ஒளியும், சுத்த சிவ துரியமும், ஞான வெளியும், சுகயோக அனுபோகமும் ஆகியது அருட்பெருஞ் சோதியாகிய நடராசபதி என்பதாம். (13)
|