3665.

     உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
          உற்றகரு வாகிமுதலாய்
     உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
          உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
     பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
          பரமாய்ச் சிதம்பரமும்ஆய்ப்
     பண்புறுசி தம்பரப் பொற்சபையும் ஆய்அதன்
          பாங்கோங்கு சிற்சபையும்ஆய்த்
     தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
          சிவமாய் விளங்குபொருளே
     சித்தெலாம் செய்எனத் திருவாக் களித்தெனைத்
          தேற்றிஅருள் செய்தகுருவே
     மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான
          வாழ்வேஎன் வாழ்வின்வரமே
     மணிமன்றில் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
          வல்லநட ராசபதியே.

உரை:

     அணுவா யுற்றுத் தோன்றும் அணுப் பொருள் முதலாக மலை யீறாக உள்ளவையும், உடலும், கருவாய்த் தோன்றி உயிராய், உயிர்க்குயிராய், உணர்வாய், உணர்வின் உருவாய், அவ்வுணர்வைப் பற்றி அமையும் ஒளியாய், அவ்வொளிக்கு ஒளியாய், ஆகாயமாய், சிதம்பரமாய், ஞானப் பண்புடைய சிதம்பரப் பொற் சபையுமாய், அதனிடத்து ஓங்கும் சிற்சபையுமாய், மேடையுற்றியலும் அச் சபை நடுவில் திருக் கூத்தாடுகின்ற சிவமாய் விளங்குகின்ற பரம்பொருளே; சித்துக்கள் எல்லாவற்றையும் செய்க வென எனக்குத் திருவாக்குத் தந்து என்னைத் தேற்றித் தெளிவித்து அருள் புரிந்த, ஞானக் குருவே; மற்றும் நல்லியல்புகள் எல்லாம் எனக்கு எய்துவித்து வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே; வாழ்விற் பெறலாகும் வரப் பொருளே; சபையின் நடுநின்று விளங்குகின்ற தெய்வமே; எல்லாம் வல்ல நடராசப் பெருமானே வணக்கம். எ.று.

     உயிரில் பொருள்களில் அணுப் பொருள் முதல் மலை யீறாகப் பலவகை யுண்மைப் பற்றி, “உற்றியலும் அணுவாதி மலை யந்தம்” என வுரைக்கின்றார். உடல், தாய் வயிற்றிற் கருவாய்த் தோன்றிப் பின்னர் உயிருடைய முதற் பொருளாய்த் தோன்றுதலின், “உடல் உற்ற கருவாகி” என வுரைக்கின்றார். உடற்குள் நிலவும் உயிர்த் தன்மையை, “உயிர்” என்றும், “உயிர்க் குயிர்” என்றும், அவ்வுயி ருணர்வு” என்றும், “உணர்விற்கு உணர்வு” என்றும், “அவ்வுணர்வில் ஒளி” என்றும், “அவ்வொளிக்குள் ஒளி” என்றும் தூல சூக்கும நிலையில் வைத்து நுணுகிக் கண்டுரைப்பது வடலூர் வள்ளலின் இயற்கை இயல்பாதலின், “உடலுற்ற கருவாகி முதலாய் உயிராய் உயிர்க்குள் உறும் உயிராகி உணர்வாகி யுணர்வுள் உணர்வாகி உணர்வுள் பற்றியலும் ஒளியாகி, ஒளியின் ஒளியாகி” என உரைக்கின்றார். அம்பரம் - ஆகாயம். சிதம்பரம் - சித்து அம்பரம் எனப் பிரிந்து ஞான ஆகாயம் எனப் பொருள்படும். ஞானாகாயத்தின் உருவாய்க் காட்டுவது தில்லைச் சிதம்பரமாதலின் அதனைப் “பண்புறு சிதம்பரம்” என்றும், அங்குள்ள பொற் சபையைச் “சிதம்பரப் பொற் சபை” என்றும், அதன் பக்கல் விளங்குகின்ற ஞான சபையைச் “சிற்சபை” என்றும் தெரிவிக்கின்றார். தெற்றி - மேடை. தெற்று எனவும் வழங்கும். சபை நடுவில் அமைந்த மேடை மேல் நின்று திருக்கூத்தாடுதல் தோன்ற, “தெற்றியலும் அச்சபையின் நடுவில் நடம் இடுகின்ற சிவமாய் விளங்கு பொருளே” எனப் புகழ்கின்றார். ஞானக்குருவாய்ப் போந்து, “எல்லாச் சித்துக்களையும் செய்ய” என உருவாய் எழுந்தருளிக் கூத்தப் பிரான் அருள் செய்த வரலாற்றை, “சித்தெலாம் செய் எனத் திருவாக்களித்து எனைத் தேற்றி அருள் செய்த குருவே” எனக் கூறுகின்றார். உலகியல் வாழ்வில் உறாது மெய்ஞ்ஞான வாழ்வில் தம்மை வாழ்வித்த அருட் செயலை வியந்து, “எனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வே” என்றும், “வாழ்வின் வரமே” என்றும் உரைக்கின்றார். மணி மன்றின் நடுவில் நின்று ஆடுவது சுகத்தின் அருள் நிலையாதலால், “மணி மன்றின் நடு நின்ற குரு தெய்வமே” எனப் பாராட்டுகின்றார்.

     இதனால், ஒளியின் ஒளியாய், சிதம்பரமாய், பொற் சபையும் சிற்சபையுமாய், நடமிடுகின்ற சிவமாய், விளங்கும் பொருளும், திருவாக்களித்து அருள் செய்த குருவும், மெய்ஞ்ஞான வாழ்வும், வாழ்வின் வரமும், தெய்வமுமாகியது நடராச மூர்த்தம் என்பது தெரிவித்தவாறாம்.

     (15)