3666.

    எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்
            எல்லாஞ்செய் வல்லதாகி
        இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்
            இயற்கையே இன்பமாகி
    அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த
            அருளாகி அருள்வெளியிலே
        அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்
            அருட்பெருஞ் சோதிஆகிக்
    கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்
            காட்சியே கருணைநிறைவே
        கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற
            கதியே கனிந்தகனியே
    வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே
            வீற்றிருந் தருளும்அரசே
        மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
            மேவுநட ராசபதியே.

உரை:

     எல்லா வுலகங்களையும் உயிர்களையும் பொருட்களையும் உடையதாகவும், எல்லாம் செயவல்லதாகவும், இயல்பாகவே உண்மைத்தன்மை யுடையதாகவும், இயற்கை யறிவாயும், இயற்கை இன்பமாகியும், அவ்வவ்விடத்தும் அனாதியே பாசமில்லாததாகவும், சுத்த அருளாகியும் அருள் வெளியில் அருள் நெறி விளங்க அருள் நடம் செய்து விளங்கும் அருட்பெருஞ் சோதியாகவும், கலக்கமற்ற தனி முதற் கடவுளாகவும், ஓங்குகின்ற மெய்ம்மைக் காட்சியே, கருணையின் நிறைவே, என் கண்ணே; என் அன்பில் கலந்து என்னை வளர்க்கின்ற கதிப் பொருளே; நன்கு கனிந்திருக்கின்ற கனி போல்பவனே; என்னைச் சூழ்ந்துள்ள வெவ்விய வினைகளைப் போக்கி ஒரு ஞான விளக்கேற்றி என்னுள்ளே வீற்றிருந்தருளும் அருளரசே; மெய்ஞ்ஞான நிலைக்கண் நின்ற விஞ்ஞான உள்ளத்திலே எழுந்தருளுகின்ற நடராச முதல்வனே வணக்கம். எ.று.

     எல்லா வுலகுகளையும் அவ்வுலகில் உள்ள பொருட்களையும் தனக்கு உடைமையாக யுடையதாகவும், எல்லா உயிர்களையும் தனக்கு அடிமையாக யுடையதாகவும் இருத்தல் பற்றிச் சிவ பரம்பொருளை, “எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்” என மொழிகின்றார். வரம்பிலாற்றல் உடையது பரம்பொருள் என்பது பற்றி, “எல்லாம் செய்வல்லதாகி” என இசைக்கின்றார். உண்மையாகிய சத்தாம் தன்மையும், அறிவாம் தன்மையும், இன்பமாம் தன்மையுமாகிய இயற்கைச் சச்சிதானந்தம் என்றற்கு, “இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய், இயற்கையே இன்பமாகி” என்று கூறுகின்றார். ஆன்மாக்களும் சுத்தாவத்தையில் சச்சிதானந்தமாவனவாயினும் அது செயற்கை நிலையாதல் பற்றி, “இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய் இயற்கையே இன்பமாகி” என வலியுறுத்துகின்றார். அவ்வையின் - அவ்விடத்து என்னும் பொருளது. உயிர்கள் அனாதியே பாச முடையவையாதலால் அவற்றின் வேறுபடுத்தற்கு, “அனாதியே பாச முடையவையாதலால் அவற்றின் வேறுபடுத்தற்கு, “அனாதியே பாசமிலதாய்” என அறிவிக்கின்றார். அருளே யுருவாதலின் சிவத்தைச் “சுத்த அருளாகி” எனச் சுட்டுகின்றார். சிவசத்தியின் பெருவெளியைக் குறித்தற்கு “அருள்வெளி” எனக் குறிக்கின்றார். அதுவே ஞானாகாயம் எனக் கூறப்படும். உயிர்கட்கு, அருள் நெறி விளங்குதல் பொருட்டு ஞான அருள் வெளியில் அருள் நடம் செய்கின்றான் அருட்பெருஞ்சோதி ஆண்டவன் என்ற உண்மையை யுணர்த்தற்கு, “அருள் வெளியிலே அருள் நெறி விளங்கவே அருள் நடம் செய்தருள் அருட்பெருஞ் சோதியாகி” எனவும், அருட் பேரொளிப் பொருளாயினும் அதுவே தனிமுதற் கடவுள் என்றற்கு, “கவ்வையறு தனிமுதற் கடவுளாய் ஓங்கும் மெய்க்காட்சியே” எனவும் உரைக்கின்றார். கவ்வை - கலகம். இதுவாகும் அதுவல்ல எனப் பிணக்கிற்கு இடமின்றி விளங்கும் பெரும்பொருள் என்றற்கு, “கவ்வையறு தனிமுதற் கடவுள்” எனச் சிறப்பிக்கின்றார். உயிர்கள் செய்யும் அன்பினில் அன்பாய்க் கலந்து உயிர்கள் உய்தி பெற்றுச் சிவமாம் தன்மை பெறுதற்கு உதவி யருளும் பெருந்தன்மை விளங்க, “என் அன்பிற் கலந்து எனை வளர்க்கின்ற கதியே” என்றும், கோது என்று விலக்குதற்குரிய தன்மை யாதுமின்றி முற்றக் கனிந்த முழுக் கனி என மொழிதற்கு, “கனிந்த கனியே” எனக் கட்டுரைக்கின்றார். செய்வினைகளால் உயிரறிவு மாசுபடுதலின் அதனைப் போக்கி ஞான வொளி விளங்கச் செய்து அதனுள் எழுந்தருளும் சிவத்தின் இயல்பு தோன்ற, “வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே வீற்றிருந்தருளும் அரசே” என விளம்புகின்றார். வேறு சேட்டைகட்கு இடம் தருகின்ற மாய கன்மங்களின்றி விளங்கும் விஞ்ஞான கலரை, “மெய்ஞ்ஞான நிலை நின்ற விஞ்ஞான கலர்” எனப் புகழ்கின்றார்.

     இதனால், எல்லாம் உடையதாய், எல்லாம் வல்லதாய், இயற்கைச் சச்சிதானந்தமாய், அனாதியே பாச மில்லதாய், சுத்த அருளாய், அருள் நெறி விளங்க அருள் நடம் செய்தருள் அருட் பெருஞ் சோதியாய், தனி முதற் கடவுளாய், விளங்குகின்ற மெய்ஞ்ஞானக் காட்சிப் பொருளும், கருணையின் நிறைவும், உயிர் வளர்க்கும் கதியும், கனிந்த கனியும், உள்ளே வீற்றிருந்தருளும் அரசும், விஞ்ஞான கலர் உள்ளத்தில் எழுந்தருளுபவனு மாகியவன் நடராச முதல்வன் எனத் தெரிவித்தவாறாம்.

     (16)