3667.

    நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
            நண்ணுறு கலாந்தம்உடனே
        நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்
            ஞானமெய்க் கொடிநாட்டியே
    மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்
            முன்னிப் படைத்தல்முதலாம்
        முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்
            மூர்த்திகளும் ஏவல்கேட்ப
    வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்
            வாய்ந்துபணி செய்யஇன்ப
        மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்
            வளத்தொடு செலுத்தும்அரசே
    சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே
            துரியநடு நின்றசிவமே
        சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
            சோதிநட ராசபதியே.

உரை:

     நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், வேதாந்தம், கலாந்தம் எனப்படும் அந்தங்களின் உச்சியில் திகழும் மெய்ஞ்ஞானமாகிய சிவஞானக்கொடியை நிறுத்தி பழைமையான அண்டகோடிகள் அத்தனையும் அவ்வவற்றுள் காணப்படும் சராசரங்கள் எல்லாவற்றையும் சங்கற்பத்தால் படைத்தல் முதலாகிய முத்தொழிலையும், அருளல், மறைத்தல் என்ற இரு தொழிலையும் முன்னின்று செய்தருளும் மூர்த்திகள் அனைவரும் தனது ஏவலைக் கேட்ப, வாதத்திற் கிடமின்றிப் பலவா யுற்ற சத்திகளும் சத்திமான்களும் இடம் பெற்றுப் பணி புரிந்து நிற்ப, பேரின்பமாகிய பெரிய இராச்சியத்திலே திருவருட் செங்கோல் வளமையுடன் செலுத்துகின்ற அருளரசே; சூது பொருந்திய நெஞ்சின்கண் கலவாத நேயப் பொருளே; துரியக் காட்சியின் நடுநின்ற சிவ பரம்பொருளே; சுத்த சிவ சன்மார்க்கச் செல்வமே; அருட் பெருஞ் சோதியாகிய நடராச முதல்வனே வணக்கம். எ.று.

     நாதாந்தம் என்பது நில முதல் நாதம் ஈறாக ஆராயப்படும் தத்துவ நெறி. போதாந்தமாவது வேதம், சாத்திரம், மிருதி, புராணம் ஆகிய நூலாராய்ச்சி முடிவு. யோகாந்தம் யோக சாத்திரக் காட்சியின் முடிவு. வேதாந்தம் என்பது வேதம், உபநிடதம் ஆகிய நூலாராய்ச்சி முடிவு. கலாந்தமாவது நிவிர்த்தி பிரதிட்டை முதலாக ஐந்தாகக் கூறப்படும் கலையாராய்ச்சியின் முடிவு. சித்தாந்தம் என்பது சிவாகமங்களின் ஆராய்ச்சி முடிவு. அண்டங்களின் தோற்றக் காலம் சொல்ல வொண்ணாததாகலின் எண்ணிறந்தனவாகிய அண்டங்களை, “மூதாண்டம்” என மொழிகின்றார். இவ்வண்டங்களில் வாழும் சரப்பொருளும் அசரப்பொருளுமாகிய எல்லாவற்றையும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் ஆகிய ஐந்தொழிலையும் கருவி, கரண, காரணங்களின்றிச் சங்கற்ப மாத்திரத்தால் செய்ய வல்ல மூர்த்திகள் வேறு வேறு நின்று பரசிவத்தின் ஆணை நோக்கி நிற்பதால், “ஐம்மூர்த்திகளும் ஏவல் கேட்ப” என அறிவிக்கின்றார். முத்தொழிலாவன படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றுமாம். மறைத்தல், அருளல் என்ற இரண்டும் இருதொழில் எனப்படுகின்றன. முத்தொழில் உயிரில் பொருள்களுக்காகவும், இருதொழில் உயிருடைப் பொருள்களுக்காகவும் நிகழ்வனவாதலால், இரண்டையும் பிரித்தோதினார். இவற்றைத் தனித்தனியாக முறையே செய்பவர் சிவனால் அதிட்டிக்கப் பெற்ற ஐம்பெரும் மூர்த்திகள் எனப்படுவது பற்றி, “ஐம்மூர்த்திகளும் ஏவல் கேட்ப” என்று பகர்கின்றார். பெருமை சிறுமை பற்றி ஆரணி, சனனி, ரோதயத்ரி முதலாக மிகப் பலவாகப் பேசப்படும் சத்திகள் உண்மையின், “வாதாந்த முற்ற பல சத்திகள்” என்றும், அச்சத்திகள் ஒவ்வொன்றையும் உடைய சத்திமான்கள் வேறு வேறு இருத்தலால் அவர்கள் பலரும் அடங்க, “பல சத்திகளொடும் சத்தர் வாழ்ந்து பணி செய்ய” என்றும் கூறுகின்றார். இங்ஙனம் பணி செய்வோர் ஐம்பெரும் மூர்த்திகளும் அளவிறந்த சத்தி சத்திமான்களும் நிறைந்திருந்து பணிபுரியச் சிவத்தின் திருவருட் செங்கோல் நடைபெறும் சிறப்புப் புலப்பட, “இன்பமா ராச்சியத்திலே திருவருட் செங்கோல் வளத்தொடு செலுத்தும் அரசே” என்று பாராட்டுகின்றார். அருளரசு புரியும் பரம்பொருள் அதற்கு மாறாய சூதும் வஞ்சனையும் பொய்யும் கலந்த உள்ளங்களில் கலந்து உறையாதாதலால், “சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே” என்று சொல்லுகின்றார். சுழுத்திக்கு அப்பாற்பட்ட துரியத்தானத்தின் நடுவிடத்தே நின்று விளங்குதல் பற்றி, “துரிய நடுநின்ற சிவமே” என்று போற்றுகின்றார்.

     இதனால், நாதாந்தம் முதலிய அறுவகை அந்தங்களின் உச்சியில் ஞானக்கொடி நாட்டி, மூர்த்திகளும், சத்தி சத்தர்களும் பணி புரிய அருட் செங்கோல் செலுத்துகின்ற அருளரசனும், துரிய நடுநின்ற சிவபரம்பொருளும், அருட் பெருஞ்சோதியுமாகியது நடராச முதற் பொருள் என்பதாம்.

     (17)