3668. ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்னமுடி யாஅவற்றின்
ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்
உற்றகோ டாகோடியே
திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா
சிவஅண்டம் எண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்
சீரண்டம் என்புகலுவேன்
உருவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்
உறுசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்
ஒருபெருங் கருணைஅரசே
மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
வரந்தந்த மெய்த்தந்தையே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராசபதியே.
உரை: ஒருவனாகிய பிரமன் படைத்த அண்டங்களில் அடிமுடிகளின் பெருமையை நினைத்தல் முடியாதது ஆகும்; அற்றாகத் திருமால் அண்டம் அவற்றினும் ஓராயிரம் கோடியாகும். அரனுடைய அண்டங்கள் கோடான கோடி யென வுள்ளன அவற்றிற்கு மேல் ஐயமற பல கோடிக் கணக்கான அண்டங்கள் ஈசன் அண்டங்கள் என்பன; அவற்றிற்கு மேல் சதாசிவ அண்டங்கள் எண்ணிறந்தனவாகும். இங்ஙனமிருக்க விளங்குகின்ற பெரிய சக்தி சத்திமான்களின் சிறப்புடைய அண்டங்களை என்னென்று சொல்லுவேன்; உருவுடை இவ்வண்டங்கள் அத்தனையும் சிவனது அருள் வெளியில் சிறு சிறு அணுக்களாக வெளியூடே அமைந்து நிற்ப, அவற்றின் வெளியிடை நின்று ஒப்பற்ற பெரிய கருணை யரசாகிய நீ நடன மிடுகின்றாய்; ஆன்மாவாகிய என்னையும் கலந்து என்னை மகனாக ஆட்கொண்டு என்றும் பொன்றாத வரத்தை யருளிய உண்மைத் தந்தையே; மணி யிழைத்த சபையின்கண் நடுநின்று ஒளிருகின்ற ஒப்பற்ற தெய்வமே; எல்லாம் வல்ல நடராசப் பெருமானே வணக்கம். எ.று.
பிரமன் படைத்த அண்டங்கள் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தமையாதலால் அவற்றின் அடிமுடிகளின் பெருமையை எண்ண முடியாது என்றற்கு, “ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்ன முடியா” என வுரைக்கின்றார். அவற்றிற்கு மேலுள்ள திருமாலண்டங்கள் ஆயிரம் கோடிக்கு மேற்படுதலால், “அவற்றின் ஓராயிரம் கோடி மாலண்டம்” எனவும், அவற்றிற்கு மேலுள்ள அரனுடைய ஆட்சி நிலவும் அண்டங்கள் ‘கோடா கோடி’ எனவும், அவற்றிற்கு மேல் அமைந்துள்ள ஈசன் அண்டங்களும் அவற்றிற்கு மேலுள்ள சதாசிவ அண்டங்களும் எண்ணிறந்தனவாதலால், “திருகலறு பல கோடி ஈசன் அண்டம் சதாசிவ அண்டம் எண்ணிறந்த” எனவும் இயம்புகின்றார். இவ்வண்டங்களின் ஊடே கலந்து இயக்கும் பெரிய பெரிய மாயா சத்திகள் அவற்றையுடைய சத்திமான்கள் நிலவும் அண்டங்களின் பெருமையை அளவிட் டுரைக்கமுடியாது என்று சொல்லுவாராய், “திகழ்கின்றமற்றைப் பெருஞ் சத்திசத்தர்தம் சீரண்டம் என் புகலுவேன்” என்று உரைக்கின்றார். திருகல் - சந்தேகம். ஆறு கோடி மாயா சத்திகள் என்று பெரியோர்கள் கூறுதலால் அவற்றின் இயக்கம் பிரமாண்டம் முதல் சதாசிவாண்டம் ஈறாகவுள்ள அண்டங்களின் ஊடே இயக்குவதால், “பெருஞ் சத்தி சத்தர் தம் சீரண்டம் என் புகலுவேன்” என வுரைக்கின்றார். இவ்வண்டங்கள் அத்தனையும் சிவனது அருள் வெளியில் அணுவுக் கணுவாய்ச் சிறுத்துள்ளன என்பது தோன்ற, “அருள் வெளியில் உறுசிறு அணுக்களாக ஊடசைய” எனக் கூறுகின்றார். அசைந்தாலன்றி நிலை பெறுதல் கூடாது என்றற்கு, “அவ்வெளியின் நடுநின்று நடனமிடும் ஒரு பெருங் கருணையரசே” என அறிவிக்கின்றார். தன்னை அரசனாகவும், ஆன்மாவைத் தனக்கு மகனாகவும் முறைமை கொண்டு ஆன்மா என்றும் பொன்றாத் தன்மை யுடையதாகச் செய்தமை விளங்க, “மருவி யெனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரம் தந்த மெய்த் தந்தையே” என விளம்புகின்றார். தில்லையம்பலத்தில் நடுநின்று விளங்குகின்ற தெய்வம் என்பது நடராசப் பெருமானாதலால், “மணிமன்றின் நடுநின்ற ஒரு தெய்வமே” என உவந்துரைக்கின்றார்.
இதனால், பிரமாண்டம் முதல் சத்தி சத்தர்கள் அண்டம் ஈறாகக் கூறிய அண்டங்கள் அத்தனையும் தனது அருள் வெளியில் அணுவுக்கணுவாகப் பரந்து ஒடுங்க அருள் வெளியில் கூத்தாடுபவனும், ஆன்மாவை அழியாத் தன்மை யுடையதாக்கியவனும், மன்றில் நடம்புரிபவனுமாகியவன் நடராச மூர்த்தி என்பதாம். (18)
|