3669.

    வரவுசெல வற்றபரி பூரணா காரசுப
            வாழ்க்கைமுத லாஎனக்கு
        வாய்த்தபொரு ளேஎன்கண் மணியேஎன் உள்ளே
            வயங்கிஒளிர் கின்றஒளியே
    இரவுபகல் அற்றொரு தருணத்தில் உற்றபேர்
            இன்பமே அன்பின்விளைவே
        என்தந்தை யேஎனது குருவேஎன் நேயமே
            என்னாசை யேஎன் அறிவே
    கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற
            கருணைஅமு தேகரும்பே
        கனியே அருட்பெருங் கடலேஎ லாம்வல்ல
            கடவுளே கலைகள்எல்லாம்
    விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான
            மெய்ம்மையே சன்மார்க்கமா
        மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
            மேவுநட ராசபதியே.

உரை:

     போக்கு வரவு இல்லாத பரிபூரண உருவுடைய சுக வாழ்க்கை முதற் பொருளாக எனக்கு அமைந்த வாழ்முதலே; என் கண்ணின் மணியே; என்னுள்ளத்திற் றங்கி ஒளிர்கின்ற யுணர்வாகிய ஒளிப் பொருளே; இரவு பகல் என்ற உணர்வில்லாத இன்ப அனுபவ நிலையில் சுரக்கின்ற பேரின்பமே; என் அன்பின் விளைவாகிய சிவமே; எனக்குத் தந்தையும் குருவுமானவனே; என்னுடைய நண்பனே; என் ஆசையை நிறைவுறுத்தும் ஆசை வடிவே; எனது அறிவுருவானவனே; வஞ்சம் பொருந்திய நெறிகளில் செல்லாத நன் மக்கள் கருத்தின்கண் இன்பம் செய்கின்ற கருணை யுருவான அமுதமே; கரும்பும் கனியும் போல்பவனே; அருளாகிய பெருங் கடலே; எல்லாம் வல்ல கடவுளே; கலைவகை அறிவுகள் எல்லாவற்றாலும் கலந்து உணர்ந்து கொள்ளுதற்கரிய சிவ துரிய அனுபவமான நித்தப் பொருளே; சன்மார்க்கமாகிய மெய்ஞ்ஞான நிலையில் நிற்கின்ற விஞ்ஞான கலர் உள்ளத்தில் எழுந்தருளும் நடராசப் பெருமானே வணக்கம். எ.று.

     பரிபூரணாகாரம் - குறைவற நிறைந்த உருவம். அதற்குப் போக்குவரவு இல்லாமையால், “வரவு செலவற்ற பரிபூரணாகாரம்” என வுரைக்கின்றார். எல்லாம் குறைவற நிறைந்த வாழ்வாதலின், “சுக வாழ்க்கை” எனச் சொல்லுகின்றார். அத்தகைய சுக வாழ்க்கையைத் தர வல்லது பரம்பொருளாதலின், “சுகவாழ்க்கை முதலாய் எனக்கு வாய்த்த பொருளே” என இயம்புகின்றார். கண்ணின் மணி யொளி போல உள்ளத்தின்கண் உணர்வு மயமாய் அறிவொளி நல்குவது பற்றி, “என் கண்மணியே என்னுள்ளே வயங்கி ஒளிர்கின்ற ஒளியே” என இயம்புகின்றார். வயங்குதல் - விளங்குதல். இனிய பொருளை அனுபவிக்குமிடத்து அந்த அனுபவம் இரவு பகல் என்ற காலக் கூறுகளைத் தனக்குள் விழுங்கிக் கொள்வதால் அதனை, “இரவு பகலற்ற ஒரு தருணம்” என்றும், அத் தருணத்தில் அனுபவமாவது இன்ப மல்லது பிறிதின்மையின், “தருணத்தில் உற்ற பேரின்பமே” என்றும், அவ்வன்புடைப் பொருள்பால் செல்லுகின்ற அன்பு உண்மை யன்புச் சிவமாய் விளங்குதலின், “அன்பின் விளைவே” என்றும் உரைக்கின்றார். கரவு நெறி - வஞ்சம் பொருந்திய வழிகள். வஞ்ச மில்லாத நெஞ்சமுடைய பெருமக்கள் உள்ளத்தில் இனிய ஊற்றாய்ப் பெருகுவது பற்றி, “கரவு நெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற கருணை அமுதே கரும்பே கனியே” எனப் புகழ்கின்றார். அனுபவிக்கப் படுகின்ற இன்பத்தையும் அதனைத் தந்தருளுகின்ற பரம் பொருளையும் நினைக்கும் போது அது பெரிய அருட் கடலாய்த் தோன்றுதலால், “அருட் பெருங் கடலே” என்றும், அருளாலாகாதது ஒன்று மில்லையாதலால், “எல்லாம் வல்ல கடவுளே” என்றும் உரைக்கின்றார். கலைகள் எண்ணிறந்தனவாதலால் அவை யெல்லாம் கற்றும் உணர்தற் கரியது சிவ துரியானுபவமாதலால், “கலைகள் எல்லாம் விரவி உணர்வரிய சிவதுரிய அனுபவமான மெய்ம்மையே” எனக் கூறுகின்றார். சிவ துரியானுபவம் கற்பனை யன்று நித்தப் பொருள் என்றற்கு, “துரிய அனுபவமான மெய்ம்மையே” என்று சொல்லுகின்றார். மாயை கன்மங்களின் தொடக்கின்றி ஞான நெறியிலேயே நிற்பவராதலின் விஞ்ஞான கலரை, “சன்மார்க்கமாம் மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்” என்று விளம்புகின்றார்.

     இதனால், பூரணாகார சுகத்திற்குரிய வாழ்முதலாக வாய்த்த பொருளும், கண்மணியும், உள்ளே ஒளிருகின்ற ஒளியும், பேரின்பமும், அன்பின் விளைவும், தந்தை குரு நண்பனாகவும், ஆசையும் அறிவுமாய், வஞ்ச மில்லாத நெஞ்சில் இனிக்கின்ற கருணை அமுதாய், கரும்பாய், கனியாய், அருட் பெருங் கடலாய், கடவுளாய், துரியானுபவமான மெய்ம்மையாய்ச் சன்மார்க்க நெறி நின்ற விஞ்ஞான கலர் உள்ளத்தில் மேவுவது நடராச மூர்த்தம் என்பதாம்.    

     (19)