3670.

    பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும்
            பகுதியும் காலம்முதலாப்
        பகர்கின்ற கருவியும் அவைக்குமேல் உறுசுத்த
            பரமாதி நாதம்வரையும்
    சீராய பரவிந்து பரநாத முந்தனது
            திகழங்கம் என்றுரைப்பத்
        திருவருட் பெருவெளியில் ஆனந்த நடனம்இடு
            தெய்வமே என்றும் அழியா
    ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே
            உயர்தந்தை யேஎன்உள்ளே
        உற்றதுணை யேஎன்றன் உறவேஎன் அன்பே
            உவப்பேஎன் உடையஉயிரே
    ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த
            அரசே அருட்சோதியே
        அகரநிலை முழுவதுமாய் அப்பாலும் ஆகிநிறை
            அமுதநட ராசபதியே.

உரை:

     நிலம் நீர் முதலாகிய ஐம்பெரும் பூதங்களும், மெய் வாய் முதலிய பொறிகளும், சுவை ஒளி முதலிய புலன்களும், மனம் முதலிய கரணங்களும் ஆகிய ஆன்ம தத்துவப் பகுதியும், காலம் கலை முதலாகச் சொல்லப்படுகின்ற வித்தியா தத்துவப் பகுதிகளும், அவற்றிற்கு மேலுள்ள சுத்த வித்தை, ஈசுரம் முதல் நாதம் வரையுள்ள சுத்த தத்துவப் பகுதியும், சிறப்புடைய பரவிந்து, பரநாதம் முதலிய மேல் தத்துவப் பகுதிகளுமாகிய இவை யெல்லாம் தனக்கு உடலாம் என்று உரைக்குமாறு திருவருட் பெரு வெளியில் இன்ப நடனம் புரிகின்ற தெய்வப் பெருமானே; எக்காலத்தும் அழியாத சிவ லோகத்தில் இடம் தந்து என்னை வளர்த் தருளுகின்ற தாயும் உயர்ந்த தந்தையுமாய் உள்ளவனே; என் உள்ளத் துள்ளே துணையா யிருப்பவனே; எனக்கு உறவும் அன்பும் உவப்புமாய் என்னையுடைய உயிர்க்குயிராயவனே; மக்கள் எவராலும் அறிய மாட்டாத உயர்ந்த நிலையில் என்னை வைத்தருளிய அருளரசே; அருட் பெருஞ் சோதியே; அகர உகர மகர நிலைகள் முழுதுமாய், அந்தப் பிரணவத்திற்கு அப்பாலுமாய் நிறைந்து அமுத மயமாய் விளங்குகின்ற நடராசப் பெருமானே வணக்கம். எ.று.

     நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகிய ஐந்தையும் “பாராதி பூதம்” என்கின்றார். மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறியும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற புலன்கள் ஐந்தும் சேரக்கூட்டிப் “பொறி புலன்” எனப் புகல்கின்றார். மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கும் “கரணம்” எனவும், இவற்றிற்கு முதலாகிய மூலப் பகுதியும் விளங்கப் “பகுதியும்” எனப் பகர்கின்றார். காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்ற ஏழும் ஆன்மாவுக்குச் சுகங்களாய் உட் கருவிகளாய் நிலவுவது பற்றி, “காலம் முதலாப் பகர்கின்ற கருவி” எனக் கூறுகின்றார். இதுவரை கீழுள்ள ஆன்ம தத்துவப் பகுதியும் அதற்கு மேலுள்ள சுத்தா சுத்தமாகிய தத்துவத் தொகுதிகளைக் கூறினாராதலால், அவற்றிற்கு மேலுள்ள சுத்த தத்துவத் தொகுதியை, “அவைக்கு மேலுறு சுத்த பரமாதி நாதம் வரையும்” என்று சொல்லுகின்றார் சுத்த பரமாதி நாதம், சுத்த தத்துவத்தின் மேலதாகிய சிவ தத்துவம் என்னும் நாத தத்துவத்தைக் காட்டற்கு, “மேலுறு சுத்த பரமாதி நாதம் வரையும்” என விரித்துரைக்கின்றார். சிவ தத்துவத்திற்கு மேலுள்ள தத்துவாதீத பரவெளியில் விளங்குகின்ற விந்து தத்துவம், நாத தத்துவமாகிய இரண்டையும் “சீராய பரவிந்து பரநாதம்” என்றும், இத் தத்துவங்கள் முப்பத்தாறையும் தனக்கு உடையவன் பரசிவம் எனச் சிவாகமங்கள் உரைத்தலால், “திகழங்கம் என்றுரைப்ப” எனக் கூறுகின்றார். இத் தத்துவங்களை அங்கமாகக் கொண்ட முதற் பரம் பொருள் இருந்து நின்றாடுகின்ற ஞானவெளியை, “திருவருட் பெரு வெளி” என்றும், அங்கே அப் பரம்பொருள் நிகழ்த்தும் நடனத்தை, “ஆனந்த நடனம்” என்றும் தெரிவித்து, “திருவருட் பெரு வெளியில் ஆனந்த நடனமிடு தெய்வமே” என்று பாராட்டுகின்றார். சுத்த ஆன்மாக்கள் சிவ போகம் நுகருமிடம் அந்தமில் இன்பப் பெருநிலமாதலின் அதனை “அழியா ஊர்” என்று குறித்து, அதனைத் தந்தருளிய அருட் சத்தியோடு கூடிய சிவத்தை, “அழியா ஊராகி தந்து எனை வளர்க்கின்ற அன்னையே உயர் தந்தையே” என்று போற்றுகின்றார். தான் பெற்ற சிவஞானத்தால் எய்திய சிவபோக நிலையை, “ஆராலும் அறியாத உயர்நிலையில் எனை வைத்த அரசே அருட் சோதியே” என்று வடலூர் வள்ளல் புகழ்கின்றார். அகர, உகர, மகரமாகிய மூன்றும் கூடிய பிரணவ நிலையை, “அகரநிலை முழுதுமாய்” என அறிவித்து, அப்பிரணவத்தின் உட்பொருளாவதே யன்றி அதற்கு அப்பாலும் விளங்குவது பரம்பொருள் என்றற்கு, “அப்பாலும் ஆகி நிறை அமுத நடராச பதியே” என்று பரவுகின்றார்.

     இதனால், தத்துவத் தொகுதி முற்றும் தனக்கு அங்கமாகக் கொண்டு அருள் வெளியில் ஆனந்த நடனம் புரிகின்ற தெய்வமாவதும், ஆன்மாக்களைச் சிவபோக வாழ்வில் வைத்து வளர்க்கின்ற தாய் தந்தையாவதும், துணையும் உறவும் அன்பும் உவப்பும் உயிரும் ஆவதும், அருட் சோதியாவதும், பிரணவத்திற்கு அகமும் புறமுமாய் நிறைவதும் நடராச பதியாகிய முதற் பொருள் என்று தெரிவித்தவாறாம்.

     (20)