3671.

    உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை
            உறுமவுன வெளிவெளியின்மேல்
        ஓங்குமா மவுனவெளி யாதியுறும் அனுபவம்
            ஒருங்கநிறை உண்மைவெளியே
    திரையுறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய்
            சித்தே எனக்குவாய்த்த
        செல்வமே ஒன்றான தெய்வமே உய்வகை
            தெரித்தெனை வளர்த்தசிவமே
    பரைநடு விளங்கு ம்ஒரு சோதியே எல்லாம்
            படைத்திடுக என்றெனக்கே
        பண்புற உரைத்தருட் பேரமுத ளித்தமெய்ப்
            பரமமே பரமஞான
    வரைநடு விளங் குசிற் சபைநடுவில் ஆனந்த
            வண்ணநடம் இடுவள்ளலே
        மாறாத சன்மார்க்க நிலைநீதி யேஎலாம்
            வல்லநட ராசபதியே.

உரை:

     சொல்லப்படுகின்ற விசுவத்தில் அடங்கிய விசுவ வெளி, உபசாந்த வெளி, அதற்கு மேலுள்ள மௌன வெளி ஆகிய மூன்றில் மேலோங்குகின்ற பெரிய மௌன வெளி முதலாகப் பெறப்படுகின்ற அனுபவம் ஓங்குமாறு நிறைகின்ற உண்மை வெளியாக உள்ள பரசிவமே; அலையில்லாத பெரிய கருணைக் கடலே; எல்லாம் செய்ய வல்ல சித்துப் பொருளே; எனக்கென வாய்த்த அருட் செல்வமே; ஒன்றாகிய தெய்வமே; உய்யும் நெறியை எனக்குத் தெரிவித்து என்னை வளர்த்தருளிய சிவபெருமானே; பராசத்தியின் நடுவே விளங்குகின்ற ஒளிப் பொருளே; எல்லாவற்றையும் படைத்திடுக என்று எனக்குப் பண்பமைய உரைத்து அருளாகிய பேரமுதத்தை அளித்த மெய்ம்மையான பரம்பொருளே; பரம சிவஞானமாகிய மலையின் நடுவே விளங்குகின்ற ஞான சபையின்கண் ஆனந்த அழகு நடனம் புரிகின்ற வள்ளற் பெருமானே; நீங்காத சன்மார்க்க நிலைக்குரிய நீதி வடிவே; எல்லாம் வல்ல நடராச முதல்வனே வணக்கம். எ. று.

     விசுவ வெளி, உபசாந்த வெளி, மௌன வெளி யென ஞான நூல்கள் உரைத்தலால், “உரை விசுவம் உண்ட வெளி” என்று உரைக்கின்றார். எல்லாவற்றில் மேலானது மௌன ஞானப் பெருவெளி யென்று பெரியோர்கள் கூறுவதை இங்கே “மா மவுன வெளி” என்று குறிக்கின்றார். இவ்வெளிகளில் உலகியல் ஞான அனுபவங்கள் ஒருமுகப்பட்டு நிறைதலின் “அனுபவம் ஒருங்க நிறை யுண்மை வெளி” என்று பேசுகின்றார். உலகியற் கடலைக் காற்று மோதி யலைப்பது போல, கருணைக் கடலை அலைப்பது ஒன்றுமில்லாமை பற்றி, “திரையறு பெருங் கருணை வாரியே” என்றும், செயல் வல்லது சித்துப் பொருளாதலால் எல்லாம் செய்யும் சிவ சித்தினை, “எல்லாம் செய் சித்து” என்றும் புகழ்கின்றார். தான் தனி நின்று எண்ணியும் மொழிந்தும் வழிபட்டும் வருகின்ற அருட் பெருஞ்செல்வமாதலின், “எனக்கு வாய்த்த செல்வமே” என்று இயம்புகின்றார். உலகிற்கு ஒரு பெருந்தெய்வமாக உள்ள பரம்பொருள் ஒன்றேயாதலின், “ஒன்றான தெய்வமே” எனவும், உலகில் சிவ சிந்தனையில் ஆழ்ந்து வாழ்வாங்கு வாழ்தற்குத் துணை புரிவது பற்றி, “உய்வகை தெரித்தெனை வளர்த்த சிவமே” எனவும் உரைக்கின்றார். பரசிவத்தைச் சூழ்ந்திருக்கும் அருட் சத்தியைப் “பரை” என்பவாதலின், “பரை நடு விளங்கும் ஒரு சோதியே” எனப் போற்றுகின்றார். “உனக்கு வேண்டுவதனையும் நீயே செய்து கொள்க” என அறிவித்து அதற்கேற்ற ஆற்றலும் அறிவும் வழங்கிய பெருநலத்தை, “பண்புற உரைத்து அருட் பேரமுது அளித்த மெய்ப்பரமமே” என்றும், மேலான சிவஞானமாகிய மலையின் நடுவில் விளங்குவது சிற்சபை எனெறும், அதன் நடுவில் சிவம் திருக்கூத்தாடுகின்றது என்றும் குறித்தருளுவார், “பரம ஞான வரை நடு விளங்கு சிற்சபை நடுவில் ஆனந்த வண்ண நடம் இடு வள்ளலே” என்றும் உரைக்கின்றார். வண்ண நடம் - அழகிய கூத்து. என்றும் மாறாமை சன்மார்க்கத்து இயல்பாதலால், “மாறாக சன்மார்க்க நிலை நீதியே” என விளக்குகின்றார்.

     இதனால், உண்மை வெளியும், கருணை வாரியும், எல்லாம் செய் சித்தும், வாய்த்த செல்வமும், ஒன்றான தெய்வமும், சிவமும், ஒரு பெருஞ்சோதியும், மெய்ப் பரமும், வண்ண நடமிடும் வள்ளலும், சன்மார்க்க நிலைபெற்ற நீதியுமாகிய பரம்பொருள் நடராச மூர்த்தம் என்று தெரிவித்தவாறாம்.

     (21)