3672.

    ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத்
            துயிர்க்கெலாம் தரினும்அந்தோ
        ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்
            குவப்போடு கிடைத்தநிதியே
    வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா
            வரந்தந்த வள்ளலேஎன்
        மதியினிறை மதியே வயங்குமதி அமுதமே
            மதிஅமுதின் உற்றசுகமே
    ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ
            தென்னைஎன் றதிசயிப்ப
        இரவுபகல் இல்லாத பெருநிலையில் ஏற்றிஎனை
            இன்புறச் செய்தகுருவே
    ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை
            யாடென் றுரைத்தஅரசே
        அகரநிலை முழுதுமாய் அப்பாலும் ஆகிஒளிர்
            அபயநட ராசபதியே.

உரை:

     ஊழி தோறு ஊழியாக உள்ள மிகப் பலவாகிய அண்டங்களிலும், பகிரண்டங்களிலும் வாழ்கின்ற உயிர்கள் எல்லாவற்றிற்கும் ஒன்று விடாது வேண்டுமளவு தந்தாலும் இம்மி யளவும் குறைதலின்றி நிறைந்திருப்பதாய் அடியேனுக்கு மகிழ்ச்சியோடு கிடைத்த பெருஞ்செல்வமே; நீடூழி வாழ்க வென்று திருவாய் மொழிந்து அழியா வரத்தை எனக்குத் தந்தருளிய அருள் வள்ளலே; என் அறிவின்கண் நிறைந்து தோன்றுகின்ற ஞான மதியே; அம்மதிக்குள் விளங்குகின்ற ஞானவமுதமே; அந்த அமுதினாற் பெறலாகும் சுகானுபவமே; பதினான்கு உலகிலும் உள்ளவர்கள் அத்தனைப் பேரும் கண்டு “இஃது என்னை” என்று அதிசயிக்கும் படியாக, பகல் இரவு என்ற காலப் பாகுபா டில்லாத பெருநிலைக்கண் என்னை யுயர்த்தி இன்புறச் செய்த குருமுதல்வனே; சக்கரப் படை முதலாகப் பல அணிகளைத் தந்து “உயிர்த் திரள் அத்தனையும் காத்து விளையாடுக” என்று உரைத் தருளிய அருளரசே; பிரணவம் முழுதுமாய் அதற்கு அப்பாலாயும் ஒளி செய்து அபயம் தந்தருளுகின்ற பரம்பொருளே வணக்கம். எ. று.

     பரம்பொருள் அருட் பெருஞ் செல்வமாய், குறைவற நிறைந்ததாய் விளங்குகின்ற தம்மையைப் புலப்படுத்தற்கு, “ஊழிதோறு ஊழிபல அண்ட பகிரண்டத்து உயிர்க்கெலாம் தரினும் அந்தோ ஒருசிறிதும் உலவாத நிறைவாகி அடியேற்கு உவப்போடு கிடைத்த நிதியே” என விளக்குகிறார். ஆன்மா அனாதி நித்தப் பொருளாதலின் தன்னை “வாழி நீடூழி யென வரம் தந்த வள்ளலே” என உரைக்கின்றார். யோக ஞானிகளுக்குத் துவாத சாந்தத்தில் ஞானம் அமுத சந்திரன் வடிவில் தோன்றுமென்பவாதலின், “என் மதியினிறை மதியே வயங்கு மதி அமுதமே”எனவும், அந்த அமுதுண்ண வரும் போகத்தை “மதி யமுதின் உற்ற சுகமே” எனவும் புகழ்கின்றார். வடலூர் வள்ளலார் பெற்ற ஞானப்பேரின்ப நிலையை, “ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம் இது என்னை என்று அதிசயிப்ப இரவு பகல் இல்லாத பெருநிலையில் ஏற்றி எனை இன்புறச் செய்த குருவே” என உரைக்கின்றார். ஆன்மாக்களில் விஷ்ணு பதம் பெற்ற ஆன்மாக்களுக்குச் சக்கரப் படை முதலியவற்றைக் கொடுத்து உலகம் காக்கும் தொழிலைச் செய்யப் பண்ணுகின்றது பரம்பொருள் என்ற புராணக் கூற்றைக் கருத்திற் கொண்டு, “ஆழியோடு அணி அளித்து உயிரெலாம் காத்து விளையாடு என்று உரைத்த அரசே” எனப் புகல்கின்றார். அகர நிலை என்பது அகர உகர மகரங்கள் சேர்ந்த பிரணவம்.

     இதனால் நிதியும், வள்ளலும், அமுதமும், அமுத சுகமும், குருபரனும், அருளரசும், பிரணவமுமாகி, அதற்கப்பாலாயும் விளங்குகின்ற பரம்பொருள் நடராச மூர்த்தி என்பதாம்.

     (22)