3673.

    பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என்
            புகல்வழிப் பணிகள்கேட்பப்
        பொய்படாச் சத்திகள் அனந்தகோ டிகளும்மெய்ப்
            பொருள்கண்ட சத்தர்பலரும்
    ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்
            கிசைந்தெடுத் துதவஎன்றும்
        இறவாத பெருநிலையில் அணைசொலா இன்புற்
            றிருக்கஎனை வைத்தகுருவே
    நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும்
            நலம்பெறச் சன்மார்க்கமாம்
        ஞானநெறி ஓங்கஓர் திருவருட் செங்கோல்
            நடத்திவரு நல்லஅரசே
    வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய
            மாமதியின் அமுதநிறைவே
        மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
            வல்லநட ராசபதியே.

உரை:

     பூத முதலிய பலவாகிய தத்துவக் கருவிகள் அனைத்தும் என் சொல்வழி நின்று பணி கேட்டொழுகவும், பொய் படுதலில்லாத எண்ணிறந்த சத்திகளும் மெய்ப்பொருளைக் கண்டறிந்த சத்திமான்கள் பலரும் குறைவற என் உள்ளம் நினைத்தவற்றை நினைத்தாங்கு விரும்பியெடுத்து எனக்குதவி புரியவும், என்றும் இறத்தலில்லாத பெருநிலையில் ஒப்புக் கூறலாகாதவாறு இன்புற்றிருக்குமாறு என்னை வைத்தருளிய குருபரமே; நாத முதலாக அதீதம் ஈறாக வுள்ள சுத்த தத்துவ நிலைகளால் நலம் பெறும் பொருட்டுச் சன்மார்க்கமாகிய ஞான நெறி உயர்ந்தோங்கத் திருவருளாகிய செங்கோலைச் செலுத்தி யருளுகின்ற நல்ல அருளரசே; வாத மிடும் இயல்பினராகிய நிறைந்திருக்கின்ற ஞான நிறைவே; மணியிழைத்த மன்றின் நடுவில் நின்று ஆடல் புரிகின்ற ஒப்பற்ற தெய்வமே; எல்லாம் செய்ய வல்ல நடராசப் பெருமானே வணக்கம். எ.று.

     நில முதல் சிவம் ஈறாக உள்ள தத்துவக் கருவிகள் முப்பத்தாறாதலின், அவற்றைப் “பூத முதலாய பல கருவிகள்” எனப் புகலுகின்றார். சிவசத்திகளும், சத்திமான்களும் எண்ணிறந்தனவாதலின் சத்திகள், “அனந்த கோடிகள்” என்றும், “சத்தர் பலர்” என்றும் தொகுத் துரைக்கின்றார். தத்துவத் தொகுதிகளும், சத்தி சத்திமான்களும் தமது ஞான வாய்மை கண்டு தனக்குப் பணி செய்யுமாறு பணித்துள்ளான் குருமூர்த்தமாய் எழுந்தருளியுள்ள இறைவன் என்று வற்புறுத்தற்கு, “பூத முதலாய பல கருவிகள் அனைத்தும் என் புகல் வழிப் பணிகள் கேட்பப் பொய் படாச் சத்திகள் அனந்த கோடிகளும் மெய்ப்பொருள் கண்ட சத்தர் பலரும் ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங்கு இசைந்து எடுத்து உதவ என்றும் இறவாத பெருநிலையில் இணை சொலா இன்புற்றிருக்க எனை வைத்த குருவே” என்று கூறுகின்றார். குருபரன் அருளிய ஞானத்தால் தான் பெற்ற பெரு நிலையை இறவாத பெருநிலை எனப் பாராட்டுகின்றார். சுத்த வித்தை, ஈசுரம், சதாசிவம், விந்து, நாதம், நாதாந்தம் என்ற அறு நிலைகளையும் “நாத முதல் இருமூன்று வரை யந்த நிலைகள்” என்று குறிக்கின்றார். சுத்த தத்துவ நிலைகளிலும் சன்மார்க்க ஞான நெறியே நிலவுதற் பொருட்டு இறைவனது திருவருளாட்சி நடைபெறுகின்ற தென்பாராய், “சன்மார்க்கமாம் ஞான நெறி ஓங்க ஓர் திருவருட் செங்கோல் நடத்தி வரு நல்ல அரசே” என நவில்கின்றார். இது நன்று, அது தீது என வாதமிடுவது சமயவாதிகளின் இயல்பாதலால், “வாதமிடு சமய வாதிகள்” என்று குறிக்கின்றார். ஒன்றி யிருந்து பொருளுண்மை நோக்காது வாதப்புயலால் அலைக்கப்படுதலால் சமயவாதிகளால் ஞான மதியின் அமுதம் பெறல் அரிதாதலால், “சமயவாதிகள் பெறற் கரிய மாமதியின் அமுத நிறைவே” என்று கூறுகின்றார்.

     இதனால், அனந்த கோடி சத்திகளும், சத்தர்களும், பணி செய்ய வைத்த குருவும், திருவருட் செங்கோல் நடத்தி வரும் நல்ல அரசும், அமுத நிறைவும், மன்றின் நடுநின்ற ஒரு தெய்வமும் ஆவது எல்லாம் வல்ல நடராச மூர்த்தம் எனத் தெரிவித்தவாறாம்.

     (23)