3674.

    வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது
            மனமிக மயங்கிஒருநாள்
        மண்ணிற் கிடந்தருளை உன்னிஉல கியலினை
            மறந்துதுயில் கின்றபோது
    நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை
            நன்றுற எழுப்பிமகனே
        நல்யோக ஞானம்எனி னும்புரிதல் இன்றிநீ
            நலிதல்அழ கோஎழுந்தே
    ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண்
            டின்புறுக என்றகுருவே
        என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்தபேர்
            இன்பமே என்செல்வமே
    வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத
            வித்தையில் விளைந்தசுகமே
        மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே
            மேவுநட ராசபதியே.

உரை:

     சிறுமை யுடையவனாகிய யான் செய்வகை அறியாமல் வாட்டமுற்று மிகவும் மனம் மயங்கி ஒருநாள் தரையிற் கிடந்து திருவருளை எண்ணி உலகியலை மறந்து உறங்கிய போது, விழித்தற்குரிய விடியற் காலையில் என் அருகே போந்து நயமாக என்னை எழுப்பி, “மகனே நல்ல யோக ஞானங்களில் ஏதேனும் செய்வதன்றி நீ மனம் வருந்துவது அழகாகுமா; எழுந்து நின் எண்ணம் பலிக்குமாறு அதனைச் செய்வாயாக; அதன் வாயிலாக எய்துதற்குரிய அருளமுதத்தைப் பெற்று இன்புறுக” என்று உபதேசித்த குருபரனே; எனது ஆசையும் அன்புமாகியவனே; நிறைந்த பேரின்பமே; எனக்குரிய செல்வமே; விரும்பியவாறு அளிக்கின்ற நிதியமே; சாகாத வித்தைப் பயிற்சியில் விளைந்தருளும் சுகப்பொருளே; மெய்ஞ்ஞான நெறிக்கண் நிலை பெற நின்ற விஞ்ஞான கலர் உள்ளத்தில் எழுந்தருளும் நடராசப் பெருமானே வணக்கம். எ. று.

     அறிவின் சிறுமையால் செய்தற்குரிய செயல் வகை தெரியாது மனவாட்டம் கொண்டு ஒருநாள் தரை மீது கிடந்த செயலை, “வாட்டமொடு சிறியனேன் செய்வகையை யறியாது மனமிக மயங்கி ஒரு நாள் மண்ணிற் கிடந்து” எனக் கூறுகின்றார். உறக்கத்தில் உடலுணர்ச்சிகள் செயலற்று ஒடுங்குதலின் அவ்வொடுக்கத்தை, “உலகியலினை உன்னி மறந்து துயில்கின்ற போது” என்றும், உள்ளம் திருவருளை எண்ணிக் கிடந்த செயலை, “அருளை யுன்னி” என்றும் உரைக்கின்றார். ஒருநாள் மனமயங்கி அருளை எண்ணித் துயில்கின்ற போது என இயையும். உறங்குவோர் விழித் தெழக்கூடிய காலமாதலால் விடியற்பொழுதினை, “நாட்டமுறு வைகறை” என நவில்கின்றார். அந்நிலையில் குருபரன் எழுந்தருளி, உறக்கத்தினின்றும் எழுப்பி யோக ஞானங்கள் ஏதேனும் ஒன்று செய்க வென அறிவுறுத்திய குறிப்புத் தோன்ற, “என் அருகணைந் தென்னை நன்றுற எழுப்பி மகனே நல்யோக ஞானம் எனினும் புரிதலின்றி நீ நலிதல் அழகோ” என்று கூறுகின்றார். யோக ஞானம் இரண்டையும் இணைத்துக் கூறும் மரபு பற்றி, “நல்யோக ஞானம் எனினும்” என்றாராயினும், யோக முயற்சியாயினும் ஞான முயற்சியாயினும் ஒன்றைச் செய்க என்பது கருத்தாகக் கொள்க. இரண்டையும் செய்தற்குரிய அறிவாற்றல் வடலூர் வள்ளல்பால் இருப்பது புலப்பட, “நீ நலிதல் அழகோ எழுந்து ஈட்டுக நின் எண்ணம் பலிக்க” எனக் குருபரன் அறிவுறுத்துகின்றார். எண்ணம் பலித்தலாவது எண்ணியது எண்ணியவாறு கைகூடுதல். யோக ஞான முயற்சிகளின் பயனாக அருளமுதம் கைவருதலின், “அருளமுதம் உண்டு இன்புறுக” என்று ஆசிரியர் உபதேசிக்கின்றார். வடலூர் வள்ளலின் ஆசையும் அன்பும் சிவ பரம்பொருளேயாதலின், “என் ஆசையே என்றன் அன்பே” என்றும், “நிறைந்த பேரின்பமே” என்றும், “என் செல்வமே” என்றும் பாராட்டுகின்றார். வேட்டவை அளிக்கின்ற நிதியம் - விரும்பியவற்றை விரும்பியவாறு அளிக்கக் கூடிய ‘சங்கம் பதுமம்’ என்ற நிதி வகைகள். உலகியல் வாழ்வில் உலகியல் உணர்ச்சியின்றி அருள் நிலையில் நிலைபெற ஒன்றி நிற்கும் வித்தை ‘சாகாத வித்தை’ எனப்படும். இதனைச் சாகாக் கலை என்று கூறுவர். அவ்வித்தை வழி ஒழுகிப் பெறலாகும் பயனை, “சாகாத வித்தையில் விளைந்த சுகமே” என்று விளக்குகின்றார். மெய்ஞ்ஞான நிதியின்கண் நிலைபெற நிற்கும் செயலினர் விஞ்ஞான கலர் என்பது புலப்படுத்தற்கு, “மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்” என விளம்புகின்றார்.

     இதனால் குருபரனாய், ஆசையும் அன்புமாய், நிறைந்த பேரின்பமாய், செல்வமாய், நிதியமாய், சுகமாய், விஞ்ஞான கலர் உள்ளத்துள்ளே எழுந்தருளுவது நடராச மூர்த்தம் எனத் தெரிவித்தவாறு. இது வைகறைப் பொழுதில் வடலூர் வள்ளலுக்கு உண்டாகிய குருவருள்.

     (24)