3675. என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம்
ஏதாக முடியுமோஎன்
றெண்ணிஇரு கண்ணினீர் காட்டிக் கலங்கிநின்
றேங்கிய இராவில்ஒருநாள்
முன்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே
வெளிநின் றணைத்தென்உள்ளே
மேவிஎன் துன்பந் தவிர்த்தருளி அங்ஙனே
வீற்றிருக் கின்றகுருவே
நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட
நல்குரவி னோன்அடைந்த
நன்மகிழ்வின் ஒருகோடி பங்கதிகம் ஆகவே
நான்கண்டு கொண்டமகிழ்வே
வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை
வலியவந் தாண்டபரமே
மணிமன்றின் மடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராசபதியே.
உரை: அறிவாற்றலில் சிறியவனாகிய நான் “என் செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ” என நினைந்து இரு கண்களிலும் நீர் சொரிந்து, அறிவு கலங்கிச் செயலற்று நின்று வருந்திய ஒருநாள் இரவுப் பொழுதில் மின்னொளி செய்கின்ற ஞான வுருவாய் என் கண் காண வெளிப்பட நின்று என்னைத் தழுவி என்னுள்ளே புகுந்து என் துன்பங்களைப் போக்கி யருளி, அவ்வுள்ளத் துள்ளேயே வீற்றிருக்கின்ற குருபரனே; நன்செய் வயலில் தானிட்ட பயிர் விளைந்தது கண்ட வறியவன் ஒருவன் அடைந்த நல்ல மகிழ்ச்சியைவிட ஒருகோடிப் பங்கு அதிகமாகவே நான் கொண்ட மகிழ்ச்சி வடிவானவனே; வன்சொற்களைப் பேசும் வாதிகட்கு அறிவரிய பொருளே; என்னை வலிய வந்து ஆண்டுகொண்ட பரம்பொருளே; மனிமன்றின்கண் நடுநின்று ஆடுகின்ற ஒப்பற்ற தெய்வமே; எல்லாம் வல்ல நடராச முதல்வனே வணக்கம். எ. று.
செயலறுதி தோன்றுதற்கு முன் ஒருவனுக்குத் தனது சிறுமையும் மாட்டாமையும் புலப்பட்டுக் கலக்கம் செய்யுமாதலின் அதனை, “என் செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என் எண்ணம் ஏதாக முடியுமோ என்றெண்ணி” என வுரைக்கின்றார். கையறவு பட்டவிடத்துக் கண்ணீர் பெருகுதல் இயல்பாதலால், “இரு கண்னிணீர் காட்டிக் கலங்கி நின்று” எனவும், இக்கையறவு ஒருநாள் இரவுப் பொழுதில் நிகழ்ந்தமை தோன்ற, “ஏங்கிய இரவில் ஒருநாள்” எனவும் இயம்புகின்றார். ஞான குருவின் தோற்றத்தை “மின்செய் ஞான உரு” என்றும், மாய உருவின்றி யுண்மை வடிவில் வெளிப்படத் தோன்றினமை புலப்பட, “நான் காணவே வெளி நின்று” என்றும், தமக்கு உளதாகிய கையறவு நிலையைப் போக்கி உள்ளத்துள் கலந்து கொண்ட இயல்பை, “என்னுள்ளே மேவு என் துன்பம் தவிர்த்தருளி அங்ஙனே வீற்றிருக்கின்ற குருவே” என்றும் உரைக்கின்றார். விளைவது விரும்பி நன்செய் வயலில் இட்ட பயிரை, “நன்செய்வாய் இட்ட விளைவு” என்றும், அது நன்கு விளைந்தது கண்டு மகிழ்கின்ற ஏழை உழவன் மனநிலையை, “அது விளைந்தது கண்ட நல்குரவினோன் அடைந்த நன்மகிழ்வு” எனவும், அவன் பெற்ற மகிழ்ச்சியினும் தான் பெற்றது ஒரு கோடிப் பங்கு அதிகம் என விளக்குவாராய் வடலூர் வள்ளல், “ஒருகோடி பங்கு அதிகம் ஆகவேநான் கண்டு கொண்ட மகிழ்வே” எனவும் விளக்குகின்றார். வறியவனுக்குத் தானிட்ட பயிர் நன்கு விளைவதில் உயிருணர்வு ஒன்றியிருப்பதும் அது நன்கு விளைந்தவிடத்து அவ்வுடல் முழுதும் இன்ப மயமாக மகிழ்ச்சி பொங்குவதும் பற்றி, “நல்குரவினோன் அடைந்த நன்மகிழ்வு” எனத் தெளிவிக்கின்றார். நல்குரவினோன் - வறியன். வன்சொற்களைப் பேசுகின்ற வாதிகளை, “வன்செய்வாய் வாதர்” எனக் குறிக்கின்றார். வாதம் வெல்லுவதில் அவர்களுக்குக் கருத்தே தவிர உண்மைப் பொருள் காண்டலில் இல்லையாதலின், “வாதருக்கு அரிய பொருளே” எனப் புகல்கின்றார். பரம்பொருள் தானே வலிய வந்து ஆண்டு கொண்டாலன்றி மக்கள் யாவராலும் சென்று பெறற்பால தன்றாதலின், “என்னை வலிய வந்தாண்ட பரமே” எனப் புகழ்கின்றார்.
இதனால், ஒருநாளிரவில் மெய்ஞ்ஞான உருவில் குருவருள் எய்தியவாறாம். (25)
|