3676.

    துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்
            சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே
        சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே
            சுதந்தரம தானதுலகில்
    வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய்
            வாழ்வெலாம் பெற்றுமிகவும்
        மன்னுயிர் எலாம்களித் திடநினைத் தனைஉன்றன்
            மனநினைப் பின்படிக்கே
    அன்பதீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை
            யாடுக அருட்சோதியாம்
        ஆட்சிதந் தோம்உனைக் கைவிடோம் கைவிடோம்
            ஆணைநம் ஆணைஎன்றே
    இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந்
            திசைவுடன் இருந்தகுருவே
        எல்லாஞ்செய் வல்லசித் தாகிமணி மன்றினில்
            இலங்குநட ராசபதியே.

உரை:

     உனக்குற்ற துன்பங்க ளெல்லாம் நீங்கின; நீ கருதிய சுகம் கைவந்து விட்டது; உன்னைத் திருவருள் சூழ்ந்து கொண்டு தனது ஒளியை நிறையச் செய்து சுத்த சன்மார்க்க நிலையில் பெறலாகும் அனுபவத்தை உனக்கே உரியதாகச் செய்து விட்டது; இனி யுலகில் நிகழும் வன்மைகள் எல்லாவற்றையும் நீக்கி நல்வழி எனப்படுபவை எல்லாவற்றையும் உண்டாக்கி மெய்ம்மையான வாழ்வனைத்தும் பெற்று உலகுயிர்கள் யாவும் மகிழ்வடைய நினைத்துள்ளாயாதலால், “உன் மன நினைவின்படியே அன்பனாகிய நீ எல்லா நலன்களும் பெறுக; உலகில் கெடாமல் நீடூழி வாழ்க; அருட்சோதியாகிய அருளாட்சி உனக்குத் தந்தோம்; இனி உனைக் கைவிட மாட்டோம்; இது நமது ஆணையாகும்” என்று நான் இன்புறும்படியாக அருளுரை தந்து என் உள்ளத்தில் கலந்து இசைந்திருக்கின்ற குருபரனே; எல்லாச் செயல்களையும் செய்யவல்ல அறிஞனாகி மணி யிழைத்த தில்லையம்பலத்தின்கண் விளங்குகின்ற நடராச முதல்வனே வணக்கம். எ. று.

     அருட் சோதியாகிய ஆட்சி தருதற்கு முன் அதனைச் செலுத்தக் கடவ வள்ளற் பெருமானுடைய மனம் திடமுறும்படிச் செய்கின்றாராதலின் முதற்கண், “துன்பு எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச் சூழ்ந்தது அருளொளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்திரமானது” என்று சொல்லுகின்றார். திருவருள் சூழ்ந்து தனது ஞானவொளியை நிறைவித்தாலன்றிச் சன்மார்க்க நெறிக்கண் நிலைபெறும் அனுபவம் வாயாது என்பது விளங்க, “நினைச் சூழ்ந்தது அருள் ஒளி நிறைந்தே சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே சுதந்திரமானது” என்று விளக்கப்படுகிறது. வன்சொல்லும் வன்செயலும் வன்நினைவும் ஆகிய மூன்றும் அடங்க, “வன்பெலாம்” எனக் கூறுகின்றார். வன்செயல் யாதுமின்றி நல்வழியிலேயே எல்லாம் நடைபெற வேண்டுமென்றும், உயிர்கள் அனைத்தும் மெய்ம்மையான இன்ப வாழ்வு பெற்று இனிது வாழ வேண்டுமென்ற நினைவு உடையவராய வள்ளற் பெருமான் இருந்த சிறப்பை எடுத்துரைக்கின்றாராதலின், “மெய் வாழ்வெலாம் பெற்று மிகவும் மன்னுயிர் எலாம் களித்திட நினைத்தனை” என்றும், அது நினைத்தபடியே கைகூடு மென வற்புறுத்தற்கு, “உன்றன் மனநினைப்பின் படிக்கே அன்ப நீ பெறுக” என்றும் உரைக்கின்றார். இந்த அருள் வாழ்வு எங்கும் எப்பொழுதும் எவ்வுயிர்க்கும் உளதாகும் முறையில் திருவருள் துணை புரிவதாக வற்புறுத்திய திறத்தை, “உலவாது நீடூழி விளையாடுக அருட் சோதியாம் ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம் ஆணை நம் ஆணை என்றே இன்புறத் திருவாக்களித்து” என்று கூறுகின்றார். இங்ஙனம் அருளுரை வழங்கிய குரு முதல்வன் மறைந் தருளிய திறம் தெரிவிப்பாராய், “என்னுள்ளே கலந்து இசைவுடன் இருந்த குருவே” என இயம்புகின்றார்.

     இதனால், வடலூர் வள்ளலுக்குக் குருமுதல்வனே அருட் சோதி ஆட்சி தந்த திறம் தெரிவித்தவாறாம்.

     (26)