3677. பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற் றங்கும்இங்கும்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்திஎல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
நீதிநட ராசபதியே.
உரை: பெரிதாகிய உலகின்கண் சமயங்கள் கொள்கைகள் நெறிகள் ஆகிய எல்லாம் பேய் பிடிக்கப்பட்டுப் பித்தேறிய பிள்ளையின் விளையாட்டாகு மென உணர்ந்து கொள்ளாமல் மக்கள் பலர் ஒருவரோடொருவர் பேத யுணர்ச்சி கொண்டு அங்குமிங்கும் சமயத்தின் பேரால் போர் செய்து இறந்து வீண் பட்டனர்; இனியும் அவ்வாறு வீண் போகாதபடி தூயதாகிய சுத்த சன்மார்க்க நெறியை அவர்களுக்கு விரைந்து சென்று காட்டி மெய்ப்பொருளை யுணரச் செய்து எல்லோரும் உயர்ந்த இன்ப நிலையை அடையுமாறு செய்வாயாக; நீ எனக்குப் பிள்ளையாதலினாலேயே இச் சமயப் பணியைச் செய்க வென்று உனக்குக் கட்டளை யிடுகின்றோம்; இதனை வேறாக மனத்தில் நினையா தொழிக” என்று அறிவுறுத்திய குருமு தல்வனே; நீராகிய பூதத்தின் மேல் நிலவுகின்ற ஒள்ளிய நெருப்புருவானவனே; அந்நெருப்பில் ஒளியாய் நிறைந்து பூத விருளை யகற்றும் பரவொளியே: நிர்க்குணமாய் ஆனந்த மயமான பரநாத தத்துவத்திற்கு மேலுள்ள நாதாந்த மலையின்கண் இருந்தருளி நீதி செய்யும் நடராச முதல்வனே வணக்கம். எ.று.
பெரிய உலகம் என்பதற்குப் “பேருற்ற உலகம்” என்று சொல்லுகின்றார். சமயப் பற்றும் மதக் கொள்கையும் விடாப் பிடியும் கொண்டவர்கள் தாம் கொண்டதே உயர்ந்த தென்னும் உணர்வினால் ஒருவரோடொருவர் வாது புரிந்து பிணங்குவது எங்கும் காணப்படுதலின் அவர்கள் செயலைப் பேய் பிடிக்கப்பட்டுப் பித்துக் கொண்டலையும் சிறு பிள்ளைகளின் விளையாட்டாக இகழ்கின்றமை புலப்பட, “சமய மத நெறி யெலாம் பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப் பிள்ளை விளையாட்டு” என உரைக்கின்றார். இவ்வுண்மையை யுணராமல் பலர் வீணாகப் போர் செய்து உயிர் கொடுத்ததை வரலாறு கூறுவதால், “உயிர்கள் பல பேதமுற் றங்குமிங்கும் போருற்று இறந்து வீண் போயினார்” என்று நவில்கின்றார். சமயத்திற்காகக் கோபுரங்களின் உச்சியில் ஏறி வீழ்ந்து உயிர்த்துறந்தோருடைய வரலாறுகளைப் பல கோயில்களில் உள்ள கல்வெட்டுக்கள் உரைப்பதனால், “வீண் போயினார்” என வெறுத் துரைக்கின்றார். இம்மக்கள் சமயங்களின் பொதுமையும் ஒருமைத்தன்மையும் உணர்ந்து பேத வுணர்வின்றி ஆன்ம நேய ஒருமைக் கொள்கையராய் இனிது வாழ்தற் கமைந்தது சுத்த சன்மார்க்க நெறி என விளக்குதற்கு, “இன்னும் வீண் போகாதபடி விரைந்தே புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்பொருளினை யுணர்த்தி” என்றும், எல்லோரும் இன்புற்றிருக்கப் பணி புரிவாயாக எனக் குருமுதல்வன் உபதேசித்த உண்மையை, “எல்லாம் ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி நீ” என்று உரைக்கின்றார். இக்கட்டளை யிடுதற்குரிய வாய்ப்பினை விளக்குதற்குத் தனக்குள்ள முறைமையைப் புலப்படுத்துவார், “நீ என் பிள்ளையாதலாலே இவ்வேலை புரிக என்றிட்டனம் மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே” என்று புகல்கின்றார். காற்றாகிய பூதத்திலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் உண்டாயின என்பது பற்றி, “நீருற்ற ஒள்ளிய நெருப்பே” என்கின்றார். இவை ஒடுங்குமிடத்து நிலம் நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்பு காற்றிலும், காற்று வானிலும் ஒடுங்குமென்ற முறையால் “நீருற்ற ஒள்ளிய நெருப்பிலே” என்பது பொருத்தமாதல் அறிக. நெருப்பினுள் ஒளி நிறைந்து இருள் அகற்றுவது இயல்பாதலின், “நெருப்பினுள் ஒளி நிறைந்து இருள் அகற்றுவது இயல்பாதலின், “நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே” என உரைக்கின்றார். குண தத்துவத்திற்கு அப்பாற் பட்டவனாதலின் பரம்பொருளை, “நிர்க்குணம்” என்றும், சுத்த தத்துவத்தின் மத்தகத்திலுள்ள நாத தத்துவத்திற்கு மேலதாய தத்துவத்தைப் “பரநாத தத்துவம்” என்றும் குறிக்கின்றார்.
இதனால், சுத்த சன்மார்க்க நெறியை உலகிற்குக் காட்டுக எனக் குருபரன் அருளிய இயல்பை எடுத்துரைத்தவாறாம். (27)
|