3678. சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலர்ஐந்தும் வென்றவல் லபமே
தனித்தபூ ரணவல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
வானவர மேஇன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
தேற்றிஅருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராசபதியே.
உரை: சாகாமைக்கு ஏதுவாகிய கல்வியே உண்மைக் கல்வியாகிய ஒன்றென்றும், அதுதான் சிவநெறி யென்றும் அறிவித்த அறிவுப் பொருளே; தக்க அறிவாவது மனம் ஐந்தையும் வென்ற ஆற்றலே தனித்த குறைவற நிறைந்த ஆற்றல் என்றும், வேகாத கால் முதலியன கொண்டு எப்பொருளும் பயன் தரத் தோற்றுவிக்கும் தொழிலே உண்மைத் தொழிலாம் என்றும், இந்நான்கையும் ஒருங்கு கைவரப் பெற்று உலகமெல்லாம் மிக்க அன்பு கொள்ள எல்லாம் வல்ல சித்துப் பொருளாகி நிறைந்த நிறைவே மேலான இன்பமாம்; இவ்வின்பத்தைப் பெற்ற நீயே சுத்த சன்மார்க்கத்தின் மரபினனாவாய் என்றுரைத்த குரு முதல்வனே; தேகம் மனம் வாக்கு ஆகிய மூன்றையும் நான் செயற்படுத்து முன் என்பால் அருள் செய்து அவற்றை இயக்குதற்குரிய நெறியைத் தெளிவித்து அருள் செய்த சிவ பரம்பொருளே; சிற்சபையின் நடுவில் நின்று விளங்குகின்ற ஒன்றான கடவுளே; தெய்வமாகிய நடராச முதல்வனே வணக்கம். எ.று.
என்றும் பிறவா இறவாப் பேரின்ப வாழ்வே சிவபோக வாழ்வு என அறிவுறுத்த சிவஞானத்தைச் சிறப்புடைய ஞானமாக அறிவுறுத்துகின்றாராதலால், “சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்தான் என அறிந்த அறிவே” என உரைக்கின்றார். ஆணவம் முதலிய ஐந்தின் சேட்டைகளை அறக் கெடுப்பதே அறிவாற்றல் என்றற்கு, “மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்” என விளக்குகின்றார். மலம் ஐந்தாவன; ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம், வேகாத கால், போகாப் புனல் ஆகிய இரண்டும் சேர “வேகாத காலாதி” என விளம்புகின்றார். போகாப் புனலைக் கருவுக்கு முதலாகிய நீர் என்பாருமுண்டு. வேகாத காற்று என்பது பிராண வாயு. சாகாக் கல்வி - ஒன்றே சிவம் தான் என அறிந்த அறிவு, மலம் ஐந்தும் வென்ற ஆற்றல், எப்பொருளும் விளைவித்த தொழில் ஆகிய நான்கையும் “இந்நான்கு” எனத் தொகுத் துரைக்கின்றார். இந்நான்கையும் கைவரப் பெற்றவர் நிறைவான இன்பம் பெறுதற்குரிய சுத்த சன்மார்க்கத்தின் மரபிற் குரியவராவார். இக்கருத்தை வற்புறுத்தினமையின், “சுத்த சன்மார்க்கத்தின் மரபென்று உரைத்த குருவே” என உரைக்கின்றார். தேகாதி மூன்றாவன தேகம், வாக்கு, மனம் என்ற மூன்றுமாகும்.
இதனால், சுத்த சன்மார்க்கத்தின் மரபைக் குரபரன் விளக்கிய திறம் செப்பியவாறாம். (28)
|