3679.

    நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற
            நின்வார்த்தை யாவும்நமது
        நீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்
            நெஞ்சம்அஞ் சேல்உனக்கே
    ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்
            அழியாத நிலையின்நின்றே
        அன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீ
            ஆடிவாழ் கென்றகுருவே
    நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்
            நான்இளங் காலைஅடைய
        நல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையே
            நண்பனே துணைவனேஎன்
    ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே
            ஒருவனே அருவனேஉள்
        ஊறும்அமு தாகிஓர் ஆறின்முனி மீதிலே
            ஓங்குநட ராசபதியே.

உரை:

     நாடுகின்ற புருவ நடுவின் ஊடே யுற்ற நோக்கத்தால் பெறுகின்ற அனுபவ ஞானத்தை நான் இளம் பருவத்திலேயே அடையுமாறு அருள் ஞானம் நல்கிய பெரிய கருணை யுருவாகிய அப்பனே, அம்மையே, நண்பனே, துணைவனே; என் உள்ளத்தினின்றும் பிரியாது அழுந்தருளுகின்ற இன்பனே, அன்பனே, ஒப்பற்றவனே, அருவ வடிவானவனே; சிந்திப்பார்தம் சிந்தனையில் அமுதமா யூறி முடியில் கங்கையாறு தங்குகின்ற நடராச பதியே; “நெடிய இவ்வுலகின்கண் வாழ்பவர்களில் அறம் நன்கு அமைய உரைக்கின்ற நின் சொற்கள் யாவும் நம்முடைய அறவுரையேயாகும்; மகனே நான் சொல்லும் இது உண்மை; சிறிதும் மனத்தில் அச்சம் கொள்ளற்க; உனக்கென்றே அமைந்த அருட் பெருஞ் சோதி யுணர்வைத் தந்தனம்; என்றும் கெடாத நிலையின்கண் நின்று அன்பினால் எவ்விடத்தும் எண்ணியபடி இயன்று வாழ்க” என்று அருளிய குருமுதல்வனே வணக்கம். எ. று.

     புருவ நடுவாகிய இலாடத்தானத்தே கண்களின் நோக்கத்தை நிறுத்தி உண்மைப் பொருளை நோக்கப் பெற வரும் அனுபவ ஞானமாகிய திருவருள் ஞானத்தை, “நாடுநடு நாட்டத்தில் உற்ற அனுபவ ஞானம்” என உரைக்கின்றார். நாடு நடு என்பதை புருவ நடுவில் நாடும் நாட்டம் என இயைத்துக் கொள்க. இளங் காலை - இளம் பருவம். இந்த யோகக் காட்சியை இளம் பருவத்தே தனக்கு இறைவன் நல்கியதை நினைந்து பராவுகின்றாராதலால், “அனுபவ ஞானம் நான் இளங்காலை அடைய நல்கிய பெருங் கருணை அப்பனே அம்மையே” என்று போற்றுகின்றார்.இறைவன் நண்பனாகவும், துணைவனாகவும், பிரிவறியாத இன்ப மூர்த்தியாகவும், அன்பனாகவும் அருள் புரிவது பற்றி, “நண்பனே துணைவனே என் ஊடு பிரியாதுற்ற இன்பனே அன்பனே” என உரைக்கின்றார். சிந்திப்பார் சிந்தனையில் தேனூற நிற்கின்ற திறம் பற்றிச் சிவனை, “உள்ளூறும் அமுதாகி” எனவும், கங்கை யாற்றை முடியில் தாங்குகின்றமையால், “ஓர் ஆறு இன்முடி மீதிலே ஓங்கு நடராச பதியே” எனவும் கூறுகின்றார். ஆறு தங்கிய முடியை இன்முடி என்கின்றார். அதனால் உலகிற்கு இன்பம் விளைவது பற்றி உலகில் வாழ்கின்ற மக்கள் அறம் பிழையாது வாழ நீ யுரைக்கின்ற சொற்கள் யாவும் யாம் உனக்குள் நின்று உரைப்பன என்றற்கு, “நன்குற உரைக்கின்ற நின் வார்த்தை யாவும் உண்மை யெனத் தெளிவாயாக என வற்புறுத்தற்கு, “இது உண்மை மகனே” என்றும், இதனால் நீ நெஞ்சில் சிறிதும் அஞ்ச வேண்டா எனத் தேற்றுதற்கு, “சற்றும் நெஞ்சம் அஞ்சேல்” என்றும் இயம்புகின்றார். அருட்பெருஞ் சோதியாகிய சிவஞானத்தை உனக்குத் தந்துள்ளோமாதலால், இனி நீ அச்சமின்றி மேற்கொண்ட அறப் பணியை எங்கும் சென்று எல்லோர்க்கும் செய்கவென அறிவுறுத் தருளிய வாய்மை யுரையை, “அருட் பெருஞ்சோதி ஈந்தனம் என்றும் அழியாத நிலையின் நின்றே அன்பினால் எங்கெங்கும் எண்ணியபடிக்கு நீ ஆடி வாழ்க என்ற குருவே” என்று பகர்கின்றார்.

     இதனால், அருட் பெருஞ் சோதியாகிய சிவஞானத்தைக் குருபரன் அருளிய திறம் கூறியவாறாம்.

     (29)