3680. அந்நாளில் அம்பலத் திருவாயில் இடைஉனக்
கன்புடன் உரைத்தபடியே
அற்புதம்எ லாம்வல்ல நம்அருட் பேரொளி
அளித்தனம் மகிழ்ந்துன்உள்ளே
இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே
இயற்றிவிளை யாடிமகிழ்க
என்றும்இற வாநிலையில் இன்பஅனு பவனாகி
இயல்சுத்தம் ஆதிமூன்றும்
எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம்
எய்திநின் னுட்கலந்தேம்
இனிஎந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மைஈ
தெம்மாணை என்றகுருவே
மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத
வரமாகி நின்ற சிவமே
மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராசபதியே.
உரை: அன்றொரு நாள் தில்லையம்பலத்தின் திருவாயிலின்கண் உனக்கு அன்புடன் உரைத்தபடியே அற்புதங்கள் பலவற்றையும் செய்ய வல்ல நமது திருவருட் பேரொளியை மகிழ்ந்து நல்கினோம்; உனது உள்ளத்தில் இந்த நாள் தொடங்கி நீ எண்ணியவாறு செய்வன செய்து நீ இன்புற்று மகிழ்வாயாக; எக்காலத்தும் இறவாத நிலையில் இன்ப அனுபவம் உடையவனாய் இயலுகின்ற சுத்தம், அசுத்தம், சுத்தா சுத்தம் ஆகிய மூன்று நிலைகளையும் எந்நாளும் உன் விருப்பப்படிப் பெற்று வாழ்வாயாக; யாம் உன்பால் எய்தி உன் உள்ளத்தில் கலந்து கொண்டேன்; இனி எந்த வகையிலும் உன்னைப் பிரியேன்; இது உண்மை, எமது ஆணை” என்று உரைத்தருளிய குருபரனே; மன்னவனே, என்னுடைய பெரிய வாழ்வாகி எனக்குக் கிடைத்த அழியாத வரமாகி நின்ற சிவ பரம்பொருளே; மணி யிழைத்த சபையின் கண் நின்றருளுகின்ற ஒப்பற்ற தெய்வமே; எல்லாம் வல்ல நடராச மூர்த்தியே வணக்கம். எ.று.
முன்பொருநாள் தில்லையம்பலத்தின் வாயிலின்கண் வடலூர் வள்ளலைக் கண்டு இறைவன் குருவாய் எழுந்தருளி யுரைத்ததை ஈண்டு நினைவு கூறுகின்றாராதலால், “அந்நாளில் அம்பலத் திருவாயிலிடை உனக்கு அன்புடன் உரைத்தபடி” என உரைக்கின்றார். அந்நாளில் கண்ட போது திருவருட் பெருஞானத்தை உவகையுடன் உபதேசித்த செய்தியை, “நம் அருட் பேரொளி அளித்தனம் மகிழ்ந்து” எனக் குறிக்கின்றார். அருள் ஞானத்தை வழங்கிய அன்று முதல் இன்று வரை அதனையே சிந்தித்திருக்கின்றமை புலப்பட, “அந்நாள் அருட் பேரொளி அளித்தனம் இந்நாள் தொடுத்து நீ அணெணிய படிக்கே இயற்றி விளையாடி மகிழ்க” என மொழிகின்றார். அதனால் விளையும் பயன் இதுவென எடுத்துரைப்பாராய், “என்றும் இறவா நிலையில் இன்ப அனுபவனாகி சுத்தமாதி மூன்றும் வழி ஒழுகப் பெற்று வாழ்க” என்று கூறுகின்றார். சுத்தமாதி மூன்றாவன: சுத்தாவத்தை, அசுத்தாவத்தை, சுத்தமும் அசுத்தமும் கலந்த சுத்தா சுத்தாவத்தைகளாம். சுத்தாவத்தை - சுத்த ஞானநிலை.அசுத்த நிலை - மாயாகாரியத் தத்துவங்களோடு கூடிய நிலை. கலந்தும் கலவாத நிலை சுத்தா சுத்தநிலை. பெற்றுள்ள அருட் பேரொளி ஞானத்தால் இம் மூவகை அவத்தையில் கலந்து ஒழுகினும், அவத்தை வழிச் செல்லாது அவத்தைகள் அனைத்தும் தன்வழி நிற்க வொழுகுவது அருள் வாழ்வாதல் புலப்பட, “இயல் சுத்தமாதி மூன்றும் எந்நாளும் உன் இச்சை வழி பெற்று வாழ்க” என வுரைக்கின்றார். திருவருள் துணையில் வழி அவத்தைகள் நல்வழி வொழுகும் நிலை கைவராதாதலின், அதற்குக் குருபரனது துணை உடனிருப்ப துணர்த்த, “யாம் எய்தி நின்னுட் கலந்தேம் இனி எந்த ஆற்றினும் பிரிவுறேம் உண்மை ஈது எம்மாணை என்ற குருவே” என மொழிகின்றார். மன் - மன்னன்; நிலையாக உள்ளவன் எனினும் பொருந்தும். அருள் ஞான வாழ்முதல் என்பதற்கு, “என் பெரிய வாழ்வாகி” என்று குறிக்கின்றார். அழியாத வரம் - என்றும் கெடாத திருவருள்.
இதனால், அந்நாளில் அம்பல வாயிலின்கண் உரைத்தபடி குருபரன் அருட் பேறளித்து அதனை இன்று முதல் எண்ணியபடிச் செலுத்தி மகிழ்கவென்றும், சுத்தமாதி மூன்றும் இச்சை வழி பெற்று வாழ்க வென்றும், நின்னுட் கலந்து எவ்வாற்றானும் உன்னைப் பிரியேன் என்றும் ஆணையிட்டு வற்புறுத்த நற்செயல் தெரிவித்தவாறாம். (30)
|