3681.

    காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங்
            கருணைஅமு தேஎனக்குக்
        கண்கண்ட தெய்வமே கலிகண்ட அற்புதக்
            காட்சியே கனகமலையே
    தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித்
            தலைவனே நின்பெருமையைச்
        சாற்றிட நினைத்திட மதித்திட அறிந்திடச்
            சார்கின்ற தோறும்அந்தோ
    வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும்
            மதிஎலாந் தித்திக்கும்என்
        மன்னியமெய் அறிவெலாந் தித்திக்கும் என்னில்அதில்
            வரும்இன்பம் என்புகலுவேன்
    தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம்
            தோன்றிட விளங்குசுடரே
        துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
            சோதிநட ராசகுருவே.

உரை:

     தோன்றுகின்ற காய்களெல்லாம் இனிய கனிகளாகப் பழுக்கச் செய்யும் ஒரு பெரிய ஒப்பற்ற கருணையாகிய அமுதமே; எனக்குக் கண்கண்ட தெய்வமே; இக்கலி காலத்தில் எம்போல்வார் கண் காண விளங்குகின்ற அற்புதக் காட்சியே; பொன் மலையே; தாய்மைப் பண்பெலாம் திரண்டு உருக் கொண்டாற் போன்ற எனக்குத் தந்தையே; ஒப்பற்ற தலைவனே; உன்னுடைய பெருமையைச் சொல்லவும், நினைக்கவும், மதிப்பிடவும், அறிந்து கொள்ளவும் முற்படும் போதெல்லாம் என்வாயெல்லாம் தித்திக்கும், மனமெல்லாம் தித்திக்கும், அறிவெல்லாம் தித்திக்கும், என் அறிவினுள் நிலைபெற்ற உண்மை யறிவு முற்றும் இனிக்கும் என்றால் அதனால் வரும் இன்பத்தை என்னென்று சொல்லுவேன்? தூய்மை யெலாம் ஒருங்கு பெற்ற நிலையின்கண் உளதாகும் திருவருள் ஞான வின்ப மெல்லாம் எனக்குள் விளங்க நிற்கின்ற சுடராகியவனே; துரிய வெளியின்கண் நின்று திகழ்கின்ற பரம்பொருளே; அருட்சோதி யுருவாகிய நடராச குருபரனே வணக்கம். எ.று.

     உண்டற் காகாத காய்கள் அனைத்தும், உண்டற் கினிய கனிகளாக்கும் அருட் செயலைப் புரிபவனாதலால் இறைவனை, “காய் எலாம் கனி எனக் கனிவிக்கும் ஒருபெருங் கருணை அமுதே” எனப் புகழ்கின்றார். தெய்வங்கள் காணப் படாவாயினும் குருபரனாய்த் தோன்றிக் கண் காண நிற்பது பற்றி, “எனக்குக் கண்கண்ட தெய்வமே” என உரைக்கின்றார். இக்கலி காலத்தில் அற்புதக் காட்சிகள் தோன்றுவதும், வியப்பை விளைவிப்பதும் இல்லையாதலால், “கலி கண்ட அற்புதக் காட்சியே” என விளம்புகின்றார். பொன் மலை போல் சிவனது திருமேனி புகழப்படுவது பற்றி, “கனக மலையே” என்கின்றார். தாய்மையினும் அன்புடைப் பொருள் உலகில் வேறின்மையின், “தாய் எலாம் அனைய என் தந்தையே” என்று சொல்லுகின்றார். தாய் போல் தலையளி செய்யினும், தந்தை போல் அறிவு நல்குதலின் நீங்காமையின், “தந்தையே” என இணைத்துரைக்கின்றார். சாற்றுதல் - சொல்லுதல். மதித்தல் - உயர்வுறக் கொள்ளுதல். அறிதல் - தெளிந்து ஏற்றுக் கொள்ளுதல். சாற்றிட வாயெலாம் தித்திக்கும் எனவும், நினைத்திட மனமெலாம் தித்திக்கும் எனவும், மதித்திட மதியெலாம் தித்திக்கும் எனவும், அறிந்திட மெய்யறிவெலாம் தித்திக்கும் எனவும் இயைத்துக் கொள்க. சொல்லுதல் நினைத்தல் முதலியவற்றால் உண்டாகும் இன்பம் உரைத்தற் கரிதாகலான், “இன்பம் என் புகலுவேன்” என இயம்புகின்றார். சுத்தாவத்தைக்கண் எய்தும் திருவருள் ஞான வின்பத்தை, “தூய் எலாம் பெற்ற நிலை மேல் அருட் சுகம்” எனச் சுட்டிக் காட்டுகின்றார். அதீதத்தில் அனுபவ மல்லது காண்பதும், காணப்படுவதும் என இரண்டு பட்ட நிலை யில்லாமையால் துரியக் காட்சியை விதந்து, “துரிய வெளி நடு நின்ற பெரிய பொருளே” என்று சொல்லுகின்றார்.

     இதனால், ஞான குருவாய் வந்த பெருமானே நடராச மூர்த்தி என்று கொண்டு கருணை யமுதே, கண்கண்ட தெய்வமே, அற்புதக் காட்சியே, கனக மலையே, தந்தையே, தலைவனே என்றெல்லாம் ஓதித் துதித்தவாறாம்.

     (31)