3682.

    எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே
            எல்லாஞ்செய் வல்லசித்தாய்
        என்கையில் அகப்பட்ட ஞானமணி யேஎன்னை
            எழுமையும் விடாதநட்பே
    கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக்
            கட்டியே கருணைஅமுதே
        கற்பக வனத்தை கனிந்தகனி யேஎனது
            கண்காண வந்தகதியே
    மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன்
            வினையெலாந் தீர்த்தபதியே
        மெய்யான தெய்வமே மெய்யான சிவபோக
            விளைவேஎன் மெய்ம்மைஉறவே
    துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே
            சுத்தசன் மார்க்கநிலையே
        துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
            சோதிநட ராசகுருவே.

உரை:

     எனக்கு உளதாகும் தளர்ச்சி கெடுமாறு எனக்குக் கிடைத்த பெரிய செல்வமே; எத்தகைய செயலையும் செய்ய வல்ல சித்துப் பொருளாய் என் அகங் கையில் எய்தப் பெற்ற ஞான மணியாகியவனே; எழு பிறப்பும் எனை நீங்காத நண்பனே; கைப்புச் சிறிதும் இல்லையாக என் உள்ளத்தின்கண் இனிக்கின்ற சர்க்கரைக் கட்டி போல்பவனே; கருணையாகிய அமுதமே; கற்பக வனத்தில் பழுத்த கனியாகியவனே; என் கண்கள் இரண்டும் காணத் தோன்றிய தோன்றலே; மெய்ம்மையான பயனை அளிக்கின்ற தந்தையே; மெய்ம்மை யன்புருவாகிய தாயே; என் வினைகள் அத்தனையும் போக்குகின்ற தலைவனே; மெய்யான தெய்வமே; மெய்ம்மை பொருந்திய சிவபோகத்தில் விளைகின்ற சிவானந்தமே; எனக்கு மெய்ம்மையான உறவே; அனுபவிக்கப்படுகின்ற அன்புருவாகிய துணைவனே; யான் நுகரும் இன்பமே; சுத்த சன்மார்க்கத்தின்கண் நிலைபெற்ற பொருளே; துரியக் காட்சிக்கு நடுநின்று தோன்றுகின்ற பரம்பொருளே; அருட் சோதியாகிய நடராசனாகிய குருபரனே வணக்கம். எ.று.

     எய்ப்பு - தளர்ச்சி. பெருநிதியம் - பெருஞ் செல்வம். எல்லாம் செயல் வல்லது சித்தாகிய அறிவுப் பொருளாதலின் குருபரனை, “எல்லாம் செய்வல்ல சித்தாய்” எனப் பாராட்டுகின்றார். தன் கையால் தொட்டு அனுபவிக்கப்படுதலின், “என் கையில் அகப்பட்ட ஞான மணியே” எனவும், பிறப்புத் தோறும் இடையறாது உறுகின்ற நட்பு என்றற்கு, “என்னை எழுமையும் விடாத நட்பே” எனவும் இயம்புகின்றார். கைப்பு - கசப்பு. தேவருலகத்துக் கற்பகச் சோலையில் முற்றிக் கனிந்த பழம் என்றற்கு, “கற்பக வனத்தே கனிந்த கனியே” என்று புகழுகின்றார். கதி - தோற்றம். குருமூர்த்தியாய்க் கண் காண வருவது பற்றிக் “கண் காண வந்த கதியே” என்று உரைக்கின்றார். தந்தையால் விளையும் மெய்ப்பயன் நல்லறிவாதலின் “மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே” என்றும், அன்புருவாதலின், “தாயே” என்றும், துன்பத்திற் கேதுவாகிய வினைவகை பலவற்றையும் போக்கி யருளுவது பற்றி, “பதியே” என்றும் பகர்கின்றார். மானிட உருக்கொண்டு போந்தருளுதலின் குருபரனை, “மெய்யான தெய்வமே” எனவும், உண்மை வடிவாகிய சிவபோகானுபவத்தை, “மெய்யான சிவபோக விளைவே” எனவும், “மெய்ம்மை யறவு” எனவும் கூறுகின்றார். அன்புடைய துணைவரைத் தொட்டும் தீண்டியும் அனுபவித்தல் உண்மையின், “துய்ப்புறும் என் அன்பான துணையே” என்று சொல்லுகின்றார்.

     இதனால், திருவருள் ஞானத்தை வழங்கிய குருமுதல்வனை நடராசப் பெருமானாகக் கொண்டு நிதியமே, ஞான மணியே, நட்பே, சர்க்கரைக் கட்டியே, கருணை யமுதே என்பன முதலிய ஆர்வ மொழிகளால் போற்றியவாறாம்.

     (32)