3684.

    ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே
            ஒருமைநிலை உறுஞானமே
        உபயபத சததளமும் எனதிதய சததளத்
            தோங்கநடு வோங்குசிவமே
    பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய
            பருவத்தில் ஆண்டபதியே
        பாசநெறி செல்லாத நேசர்தமை ஈசராம்
            படிவைக்க வல்லபரமே
    ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வாய்
            ஆடுவோர்க் கரியசுகமே
        ஆனந்த மயமாகி அதுவுங் கடந்தவெளி
            ஆகிநிறை கின்றநிறைவே
    தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது
            தூக்கந் தொலைத்ததுணையே
        துரியவெளி நடுநின்ற பெரியபொரு ளேஅருட்
            சோதிநட ராசகுருவே.

உரை:

     உயர்ந்ததாகிய பெரிய கருணையைப் பொழிகின்ற மழைமேகமே; ஒருமைத் தன்மை நிலைபெற்ற ஞானப் பொருளே; இரண்டாகிய திருவடித் தாமரைகளையும் எனது இதயமாகிய தாமரையின் நடுவே ஓங்குவிக்கின்ற சிவ பரம்பொருளே; அருள் நெறியை எனக்களித்து என்னை யறியாத சிறு பருவத்திலேயே என்னை ஆண்டு கொண்ட தலைவனே; உலகியல் பாச நெறிக்கண் செல்லாத அன்பர்களை யெல்லாம் ஈசராகும்படிச் செய்ய வல்ல பரமமே; அவ்விடத் தமைவது இதுவென்றும், இவ்விடத் தியல்வது இது வென்றும் வாய் வந்தது கூறுவோர்க்குப் பெறற்கரிய சுகப் பொருளே; ஆனந்தமயமாகி அந்த ஆனந்த நிலையையும் கடந்த பரவெளியாய் நிறைகின்ற பூரணப் பொருளே; உலகியலில் தாக்குண்டு உறங்கி விழுகின்ற சுறுமையுடையவனாகிய என்னைத் தாங்கி “அருளொளியில் எழுவாயாக” என்று சொல்லி, எனது தூக்கத்தை நீக்கித் தெளிவித் தருளிய துணைவனே; துரியக் காட்சியின் நடுவே தோன்றுகின்ற பிரமப் பொருளே; அருட் சோதியாகிய நடராச குருமுதல்வனே வணக்கம். எ.று.

     தனது பேரருளை வரையாது பொழிகின்றமை பற்றிப் “பெருங் கருணை பொழிகின்ற வானமே” என்று புகழ்கின்றார். ஒருமை உள்ளுறச் செய்யும் தியான வாயிலாக ஒளிர்கின்ற ஞானப் பொருளாதல் தோன்ற, “ஒருமை நிலையுறு ஞானமே” என்று உரைக்கின்றார். தமது மனத் தாமரையின் நடுவில் விளங்குகின்ற தன்மையைப் புலப்படுத்த, “இதய சததளத்து ஓங்க நடுவோங்கு சிவமே” என நவில்கின்றார். தனது திருவருள் ஞானத்தைப் பெறுதற்குரிய பக்குவத்தை எய்துவித்ததன்றி அருளொளியைப் பெறுதற்கில்லாமை தோன்ற, “பாங்கியல் அளித்து” எனவும், சிறு பருவத்தே ஆண்டு கொண்டமை புலப்பட, “அறியாத ஒரு சிறிய பருவத்தில் ஆண்ட பதியே” எனவும் கூறுகின்றார். பாங்கு - பக்குவம். பாச நெறி - உலகியல் வழிச் செல்கின்ற ஆசை வழிகள். பாசமற்ற தூய நெறியாய்ச் சிவ நேசத்தால் ஈசத் தன்மையை எய்துவிக்கும் திறத்தை, “பாச நெறி செல்லாத நேசர்தமை ஈசராம்படி வைக்க வல்ல பரமே” என மொழிகின்றார். பல்வகை நெறியைக் கற்றும் கேட்டறிந்தும் ஒருதலைப் படாது அலையும் வாதிகளை, “ஆங்கியல்வதென்று மற்றீங் கியல்வ தென்றும் வாய் ஆடுவோர்” எனக் குறிக்கின்றார். அவர்களுக்கு ஞானானுபவம் எய்துவது அருமையாதலால், “வாய் ஆடுவோர்க் கரிய சுகமே” எனக் கூறுகின்றார். ஞான அனுபவத்தின்கண் தொடக்கத்தில் ஆனந்த மயமாய் அறிவை விழுங்கிப் பின்னர் அதற்கப்பாலதாகிய பரவெளியில் நிறைந்து விளங்கும் பரசிவத்தை, “ஆனந்த மயமாகி அதுவும் கடந்த வெளியாகி நிறைகின்ற நிறைவே” என விளம்புகின்றார். உலகியல் பாசங்களும் ஆசை வகைகளும் தாக்குதலால் அசைவுற்று வருந்துகின்ற தமது சிறுமையைப் புலப்படுத்தற்கு, “தூங்கி விழு சிறியன்” என்றும், அச்சிறுமையைப் போக்கி அருள் நெறியில் நிறுத்திய திறத்தை, “தூங்கி விழு சிறியனைத் தாங்கி எழுக வென்று எனது தூக்கம் தொலைத்த துணையே” என்றும் சொல்லுகின்றார்.

     இதனால், சிறு பருவத்தில் இறைவன் தம்மை ஆட்கொண்ட திறமும், உலகியல் பாசங்களால் அலைப்புண்டு சிறுமையுற்ற தமது சிறுமையைப் போக்கி அருள் நெறிக்கண் நிறுத்திய திறமும் அறிவித்தவாறாம்.

     (34)