3686. கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே
கண்மணி யேமணி கலந்தகண் ஒளியே
சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே
துரியமுங் கடந்திட்ட பெரியசெம் பொருளே
சிற்கரை திரையறு திருவருட் கடலே
தெள்ளமு தேகனி யேசெழும் பாகே
சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே
தனிநட ராசஎன் சற்குரு மணியே.
உரை: கல்லும் கனிந்துருகுமாறு கரையச் செய்யும் கருத்துப் பொருளானவனே; கண்மணியே; கண்மணியிற் கலந்து ஒளிரும் ஒளியே; சொல்லின் எல்லை கடந்த ஒளியினுள் ஒளியாய் ஒளிர்பவனே; துரியவத்தையும் கடந்து நிற்கின்ற பெருமை பொருந்திய செம்பொருளே; ஞான எல்லையாகிய அலையில்லாத திருவருட் கடலே; தெளிந்த அமுதே; செழும் கனியே; தூய பாகு போல்பவனே; சர்க்கரையே; அச்சர்க்கரை கலந்த செந்தேன் ஒப்பவனே; ஒப்பற்ற நடராசனாகிய மெய்ம்மைக் குருவே வணக்கம். எ. று.
கருத்தினுள் உட்கருத்தாய் நின்று கல்லின் வலிதாகிய நெஞ்சையும் நீராய் உருகும்படிப் பண்ணுகின்ற அருள் நலத்தை வியந்து, “கற் கரையும்படி கரைவிக்கும் கருத்தே” என்று கூறுகின்றார். சொற் கரை - சொல்லின் எல்லை. ஒளியினுள் ஒளியாய் இருக்கும் ஒண்பொருளை உரையால் உரைத்தல் ஆகாமை பற்றி, “சொற் கரை யின்றிய ஒளியினுள் ஒளியே” என்று கூறுகின்றார். துரியங் கடந்த நிலை, துரியாதீதம் எனப்படும். அந்நிலையில் காட்சிப் பொருளாவதன்றி உரை கடந்து நிற்றலின், “துரியமும் கடந்திட்ட பெரிய செம்பொருளே” என்று சிறப்பிக்கின்றார். செம்பொருள் - பரம்பொருள். சிற்கரை - ஞான வெல்லை. ஞானிகள் ஞானத்தால் முடிவாய்ப் பெறுவது திருவருளாதலின், “சிற்கரை திருவருட் கடலே” என்றும், உலகிலுள்ள கடல்களின் வேறுபடுத்த “திரையறு திருவருட் கடலே” என்றும் செப்புகின்றார். சிந்திப்பார் சிந்தனைக்கண் தேனாய் ஊறி நின்று இனிமை செய்யும் சிவத்தின் இயல்பினை, “தெள்ளமுதே கனியே செழும்பாகே சர்க்கரையே” என்றெல்லாம் பாராட்டுகின்றார்.
இதனால், சிவஞானச் செந்தேனின் சிறப்புத் தெரிவித்தவாறாம். (2)
|